சென்னையில் மழைவெள்ளம் தேங்கிய வீடுகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. வீதிகளில் பொருட்கள் குவிந்து வருகிறது. பொக்கிஷமாக பாதுகாத்த பொருட்களும் குப்பைக்கு போய் உள்ளன.
புரட்டிப்போட்ட மழை வெள்ளம்
சென்னை நகரை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மெல்ல, மெல்ல வடிந்து வருகிறது. சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், கிண்டி, அசோக்நகர், கே.கே.நகர், தியாகராயநகர், மேற்கு மாம்பலம் உள்பட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்கு புகுந்த மழை வெள்ளநீர் நேற்று வடிந்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தபோது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள்-நண்பர்கள் இல்லத்துக்கு சென்றவர்களும், வீட்டின் மேல்தளத்தில் தஞ்சமடைந்தவர்களும் தற்போது தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
குப்பை இல்லாமல் எப்போதும் வீட்டை தூய்மையாக வைத்திருந்த இல்லத்தரசிகள் மழை வெள்ளத்தால் தங்கள் வீடு அலங்கோலமாக மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
சிறுக, சிறுக சேமித்து ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டு உபயோகப்பொருட்கள் மழை வெள்ளத்தால் சின்னா பின்னாமாகி போனதை பார்த்து பலரும் மனம் கலங்கி உள்ளனர்.
மலைபோல் பொருட்கள்
12 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் சூழ்ந்த சென்னை மேற்கு மாம்பலம் சவுத் கே.ஆர்.கோவில் தெருவில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் சேதமடைந்து பயனற்றுப்போன மெத்தைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
திருமண புகைப்பட ஆல்பம், மூதாதையர்கள் புகைப்படங்கள், நெருங்கிய நண்பர்கள் வழங்கிய நினைவு பரிசுகள், பள்ளி-கல்லூரி படிப்பின்போது வாங்கிய கேடயங்கள், கோப்பைகள் போன்ற காலம், காலமாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த பொருட்களும் குப்பைகளில் கிடப்பதை காண முடிகிறது.
அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்களும் வீணாகி, ஒவ்வொரு வீட்டின் முன்பும் குப்பை மேடு போன்று காட்சி அளிக்கிறது.
மக்கள் குமுறல்
இதுகுறித்து மேற்கு மாம்பலம் சவுத் கே.ஆர்.கோவில் தெருவை சேர்ந்த பகுதிவாசிகள் மனகுமுறலுடன் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் மழை வெள்ள நீரை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. குப்பைகளை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன’ என்றனர்.
No comments:
Post a Comment