Monday, December 21, 2015

பெண் எனும் பகடைக்காய்: அடைமழைக் காலத்தின் தவளைக் கச்சேரி .... பா. ஜீவசுந்தரி

Return to frontpage

பெண் என்பவள் புனிதம் மிக்கவள், தெய்வமாகப் போற்றப்பட வேண்டியவள், பொறுமையில் பூமா தேவி’ - இப்படியான வசனங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. பெண்கள் இங்கே இரண்டு விதமாகக் கையாளப்படுகிறார்கள். ஒன்று தெய்வ நிலைக்குப் பெண்ணை ஏற்றி மிக உயரத்தில் தூக்கி வைத்துத் தொழும் ரகம். இரண்டு அதற்கு முற்றிலும் மாறாக, எந்த அளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குக் கேவலப்படுத்தும் ரகம்.

அருவருக்கத்தக்க வார்த்தைகளால் ஏசுவதும், அடிப்பதும், உதைப்பதும், அநாகரிகமாக பெண்களிடம் நடந்துகொள்வதும், கேவலமான முறையில் நடத்துவதும் இந்த ரகத்தில் வரும். இங்கு பெண் என்பவள் ஒரு சக உயிரியாக, தனக்குச் சமமானவளாகப் பார்க்கப்படுவதில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்டு ஒரு சக உயிராக ஏற்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மனித சமுதாயம் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, பரிணாம வளர்ச்சி பெற்றதாகச் சொல்லிக்கொண்டாலும், சில நேரங்களில் காட்டுமிராண்டி நிலையை விட்டு இன்னமும் தாண்டவில்லையோ என்ற சந்தேகமே வருகிறது. அதில் ஒன்றுதான் சமீபத்திய சிம்பு - அனிருத் என்ற இரு விடலைப் பையன்களின் பாட்டுக் கச்சேரி. அடைமழைக் காலத்தில் எழும் தவளைகளின் வாத்தியக் கச்சேரிகளைப் போல இந்தப் பெருமழைக்காலத்தில் விளைந்திருக்கிறது.

இருக்கும் வேலைகளையெல்லாம் விட்டு, இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், கண்டனம் எழுப்பவும் எனச் சென்னையின் மழை வெள்ளத் துயரத்தையே மடை மாற்றியிருக்கிறது இந்தப் பாட்டு. இசையும் நல்கவிதையும் இணைந்தால் அது காதுக்கும் மனதுக்கும் விருந்து. ஆனால், கேட்கவே நாராசமாய் உள்ல இந்தப் பாட்டின் மூலம் இந்த இளைஞர்கள் இருவரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற கேள்வியும் ஆத்திரமும் எழுகின்றன.

‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்பது வெறும் பாடல் வரி மட்டுமல்ல, இசையின் உன்னதத்தைச் சொல்லும் வரியும்கூடத்தான். எத்தனை எத்தனை பாடல்கள் நம் வாழ்க்கையோடு இயைந்து ஒன்று கலந்திருக்கின்றன! என் நண்பர் ஒருவர், தூரத்து உறவினரும்கூட. ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதனுடன் ஒன்றிக் கலந்து ஒரு கணம் அதோடு ஐக்கியமாகிவிடுவார். அந்த நேரத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி அவருள் குடிகொண்டுவிடும். பாடல் நிறைவு பெற்றதும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்.

என் தோழி ஒருத்தி, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதனுடன் இணைந்து சன்னமான குரலில் பாடுவாள். பாடலின் முடிவுக்குப் பின் சற்றே அமைதி. பின் வேலைகளில் மூழ்கிக் கரைந்துபோவாள். இப்படி எத்தனை எத்தனை உதாரணங்களைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கக்கூடும்.

இப்போதும் இசைஞானி இளையராஜா இசையில் 80களில் வெளியான பாடல்கள் நம்மைக் கிறங்கடிக்கவில்லையா? எத்தனை எத்தனை லட்சம் ரசிக, ரசிகைகளின் மனங்களில் அந்தப் பாடல்கள் நிரந்தரமாகப் பதிவாகியிருக்கின்றன! எதைக் கொண்டு அதை எல்லாம் அழிக்க முடியும்? இரவு நேரங்களில் தாலாட்டித் தூங்க வைக்கும் மற்றொரு தாயாகவே அந்தப் பாடல்கள் திகழவில்லையா?

இரட்டை அர்த்தப் பாடல்கள், வசனங்கள் மலிவான பின் அவற்றை எல்லாம் கேட்கவே மனமும் காதும் கூசுகின்றன. நகைச்சுவை என்ற பெயரில் சில நடிகர்கள் பேசும் வசனங்களையும் கேட்டு அருவருத்தோம். ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’, ‘கொலை வெறி கொலை வெறிடா’, ‘அடிடா அவள’, ‘எவன்டி ஒன்னப் பெத்தான்’, ‘செல்ஃபி புள்ள… உம்மா…’ போன்ற ‘இலக்கியத் தரம்’ வாய்ந்த பாடல்களை எல்லாம் கேட்கவும் ரசிக்கவும் நாம் என்ன புண்ணியம் செய்தோம் என்றே சில நேரங்களில் தோன்றும்.

பெண்ணுறுப்பைக் குறிக்கும் ஒரு அருவருக்கத்தக்க ஆபாச வசைச் சொல்லை முதன்மைப்படுத்தி, பீப் ஒலியின் வழி அதை அரைகுறையாக மறைத்து, பாடல் நெடுக வாரி இறைத்திருக்கும் தன்மையை என்னவென்று சொல்வது? அருவருப்பின் உச்சம் இந்தப் பாடல். படத்தில் இடம் பெறவில்லை, அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை, தங்களுக்கே தெரியாமல் கசியவிடப்பட்டது என்று ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் பெண் பற்றிய, உங்களின் பார்வை என்னவென்பதை இந்தப் பாடல் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

இலக்கிய நயத்துடன் பாடல்கள் புனையப்பட்ட காலத்திலும் பெண்ணை இயற்கையுடனோ, பெண்ணின் அங்கங்களைக் காய் கனிகளுடனோ ஒப்பிட்டு வர்ணிக்கப்பட்ட பாடல்கள் ஏராளம் உண்டு. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்று எதிர்க் கேள்விகளும் எழுகின்றன. எவ்வளவு காலம்தான் பொறுத்திருப்பது? அதுவும் இந்த அளவுக்குப் போன பின்பும் எப்படிப் பொறூத்திருப்பது?

‘சமைந்தது எப்படி?’ என்று பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்பிய பாடல் வெளியானபோது, பெண்கள் அமைப்புகள் கொதித்தெழுந்து கண்டிக்கவே செய்தன. ‘பிரம்மாண்ட இயக்குநர்’ ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதியவர் சுஜாதா என்றாலும், பெண்களின் எதிர்ப்புகளுக்குச் செவி சாய்த்து, வசனங்கள் ஒலியிழந்தன. படமும் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணம் சொல்ல இப்படிப் பல படங்கள் உண்டு.

வரைமுறை தாண்டி, நாகரிக எல்லையைக் கடந்து செல்லும்போது அதைக் கட்டுப்படுத்த வேண்டிய, தட்டிக் கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எப்போதும் போல் ‘பூமா தேவி’களாகப் பொறுமை காத்துக்கொண்டிருக்க முடியாது. உடல் உறுப்புகள் சார்ந்து என்றில்லை, பெண்களுக்கு எதிராகக் கருத்தியல் ரீதியாக எழுதப்படும் பாடல்களையும் பெண்கள் புறக்கணிக்க வேண்டும். தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

பெண் உடல் என்பது வெறும் காமத்துக்குரியதாகவும், பெண்ணின் உடல் உறுப்புகள் கேளிக்கைக்கும் கேலிக்கும் உரியதாகவும் மாறிப் போயிருப்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது. சதைப் பிண்டமாக மட்டுமே பெண்ணைப் பார்க்கும் பார்வை மாறாமல் இருப்பதால்தான், பாலியல் வல்லுறவுகள் அவள் மீது நிகழ்த்தப்படுகின்றன. டீன் ஏஜ் பருவத்திலேயே குழந்தைகள் தடம் மாறிப் போகவும் ஆரம்பிக்கிறார்கள்.

நிர்பயா வழக்கில் நாம் கண்டதுபோல ‘டீன் ஏஜ்’ குற்றவாளிகள் உருவாகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுப்பது மிக மிக அவசியம் என்பதையே இந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. தவறு நிகழலாம்; ஆனால் அது தவறென்று சுட்டிக் காட்டப்படும்போது, அதை உணர்ந்து ஏற்பதற்கான மனோதிடம் வேண்டும். அதை விடுத்து மூர்க்கத்தனமாகப் பேசுவதும், சப்பைக்கட்டு கட்டுவதும் நியாயமாகாது.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024