Tuesday, December 22, 2015

பரிசோதனை ரகசியங்கள் 13 - எலிக் காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?.... டாக்டர் கு. கணேசன்

Return to frontpage

மழை, வெள்ளக் காலத்தில் ஏற்படுகிற தொற்றுநோய்களுள் எலிக்காய்ச்சல் மிக முக்கிய மானது. ‘லெப்டோஸ்பைரா' எனும் பாக்டீரியா கிருமிகள் நம்மைப் பாதிப்பதால் இது ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் எலி, பெருச்சாளி, ஆடு, மாடு, பன்றி, பூனை போன்ற பல்வேறு விலங்குகளின் உடலில் வசிக்கும். இந்த விலங்குகளின் சிறுநீர் வழியாகக் கிருமிகள் வெளியேறும்.

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீடு, வீட்டைச் சுற்றி வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருந்தால் ‘எலிக்காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற ‘லெப்டோபைரோசிஸ்' (Leptospirosis) நோய் வரும்.

நோய் வரும் வழி

பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைவதுதான் அதிகம். எனவே பாதங்களில் விரிசல், பித்தவெடிப்பு, புண், சேற்றுப்புண் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகிற வாய்ப்பு அதிகம். மாட்டுத் தொழுவங்களில் வேலை பார்க்கும்போது, ஆடு, மாடு மேய்ப்பிடங்களில் காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது விலங்குகளின் சிறுநீர்க் கழிவு மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து நோய் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு.

கிராமப்புறங்களில் விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே குளங்களில்தான் ஊர் மக்களும் குளிப்பார்கள். அப்போது அவர்களின் வாய், கண், மூக்கு வழியாகவும் இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து, எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

இந்த நோயின் தொடக்கத்தில் சாதாரணத் தடுமக்காய்ச்சல் போலத்தான் அறிகுறிகள் காணப்படும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாதத் தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முதல்கட்ட அறிகுறிகள். இவற்றில் ‘சிவந்த கண்கள்’ இந்த நோயை இனம் காட்டும் முக்கிய அறிகுறி. இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுவிட்டால் நோய் உடனே கட்டுப்படும். தவறினால், நோய் தீவிரமாகும்.

குறிப்பாகக் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை எனப் பல்வேறு முக்கிய உறுப்புகளை இந்த நோய் தாக்கும். இதன் விளைவாக நோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் தோன்றும். மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்தக் கட்டத்தின் முக்கிய அறிகுறிகள். இப்போதும் இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் இதயம் மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கு ஆபத்தைத் தரும்.

என்ன பரிசோதனை?

1. ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count):

# காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

# வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை செய்யப்படும்.

# ரத்த வெள்ளையணுக்களின் (Leucocytes) இயல்பான அளவு 4,000 11,000 / டெசி லிட்டர். நியூட்ரோபில் அணுக்களின் இயல்பான அளவு 60 - 70%. எலிக்காய்ச்சல் வந்தவருக்கு இந்த இரண்டு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

# தட்டணுக்களின் (Platelets) அளவு மிகவும் குறைந்திருக்கும்.

# இ.எஸ்.ஆர். (ESR) அளவு அதிகமாக இருக்கும்.

2. ‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test MAT):

# எலிக்காய்ச்சலை உறுதி செய்ய, இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான்.

# எலிக்காய்ச்சல் வந்தவருக்கு இந்தக் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

# இந்தப் பரிசோதனையில் இணையணுக்கள் விகிதம் 1 : 200 என்ற அளவுக்கும் 1 : 800 எனும் அளவுக்கும் இடைப்பட்டதாகவோ, அதிகமாகவோ இருந்தால் எலிக்காய்ச்சல் இருக்கிறது என்று அர்த்தம்.

3. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture Test).

# காய்ச்சல் ஏற்பட்ட பத்து நாட்களுக்குள் இதைச் செய்து கொண்டால் முடிவு சரியாக இருக்கும்.

# ரத்தத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

# எலிக்காய்ச்சலை உறுதி செய்யவும் சரியான சிகிச்சையைத் தரவும் இது உதவுகிறது.

# ஆனால், இந்த முடிவுகள் தெரியச் சில வாரங்கள் ஆகும். அதற்குள் நோய் முற்றிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவேதான், இதை இரண்டாம் நிலைப் பரிசோதனையாக வைத்துள்ளனர்.

4. சிறுநீர்ப் பரிசோதனை

# நோயாளியின் சிறுநீரில் எலிக்காய்ச்சல் கிருமிகள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ள உதவும் பரிசோதனை இது.

# நோய் தொடங்கிய எட்டு நாட்களுக்குப் பிறகுதான் இக்கிருமிகள் சிறுநீரில் வெளியேறும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் இதைச் செய்தால்தான் முடிவு சரியாக இருக்கும்.

# அதேநேரத்தில் ஒருமுறை பாசிட்டிவ் என இதன் முடிவு வந்துவிட்டால், பல மாதங்களுக்கு இது பாசிட்டிவ் என்றுதான் காண்பிக்கும். எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் இதை மேற்கொள்கிறவர்கள் நோய் இன்னும் இருப்பதாகத் தவறாக எண்ணிக்கொள்ள வாய்ப்புண்டு.

# இந்த விஷயத்தில் மருத்துவரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. பி.சி.ஆர். (PCR) பரிசோதனை

# ரத்தத்தில் எலிக் காய்ச்சல் கிருமிகளின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

# 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

# மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

# நோய் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் நோயை உறுதி செய்துவிடும். ஆனால், இதன் செலவு அதிகம்.

6. எலிசா ஐஜி.எம். (ELISA IgM) பரிசோதனை

# ரத்தத்தில் எலிக்காய்ச்சல் கிருமிகளுக்கான ஐஜி.எம். எதிர் அணுக்களைக் கண்டறியும் பரிசோதனை இது.

# அதிநவீனத் தொழில்நுட்பம் உடையது.

# காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாம் நாளில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# பணச் செலவு அதிகம்.

# நோயை 90 சதவீதம் உறுதிப்படுத்துகிறது.

7. ‘கல்லீரல் செயல்திறன் பரிசோதனைகள்’ (Liver Function Tests LFT) :

# எலிக்காய்ச்சலால் கல்லீரல் பாதிப்பை உறுதிப்படுத்தும் பரிசோதனை இது.

# கல்லீரல் பாதிக்கப்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படும். இதை உறுதி செய்ய உதவும் முக்கியமான ரத்தப் பரிசோதனை இது.

# எலிக்காய்ச்சல் வந்தவருக்கு ரத்தப் பிலிருபின் அளவு அதிகமாக இருக்கும்.

# இத்தோடு ஏ.எல்.பி. (ALP), ஏ.எஸ்.டி. (AST), ஏ.எல்.டி. (ALT) ஜி.ஜி.டி. (GGT) பரிசோதனைகள் செய்யப்படும்.

# ரத்தத்தில் கல்லீரல் சுரக்கிற என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.

# இந்த அளவுகள் அனைத்தும் அதிக அளவில் இருக்கும்.

8. மூளைத் தண்டுவட நீர்ப் பரிசோதனை (CSF Test).

# எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும் பரிசோதனை இது.

# நோயாளியின் முதுகுத் தண்டுவடத்திலிருந்து, மூளைத்தண்டுவட திரவத்தை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

# எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருந்தால் இந்தப் பரிசோதனையின் முடிவில் புரதம் அதிகமாக இருக்கும். குளுக்கோஸ் அளவு இயல்பாக இருக்கும்.

இவை தவிரச் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளனவா என அறியவும் பரிசோதனைகள் தேவைப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024