Saturday, December 26, 2015

எங்கள் இழப்புகளுக்கு யார் பொறுப்பு? 3...நீரை.மகேந்திரன்

Return to frontpage

ஓர் இயந்திரத்தின் விலை ஒரு கோடி... அந்த இயந்திரத்தை வாங்கி ஒரு மாதம்தான் ஆகிறது. உற்பத்தியைக் கூட இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் இயந்திரம் தண்ணீரில் மூழ்கினால் மனநிலை என்னவாக இருக்கும். அதுவும் சேமிப்பு கொஞ்சமும், வங்கிக்கடன் மீதியுமாக ரிஸ்க் எடுத்துள்ள ஒரு குறுந் தொழில்முனைவர் என்றால் அவர் எவ்வாறு மீண்டு திரும்பவும் தொழிலுக்கு திரும்புவார்?

கிண்டி - ஈக்காட்டுத்தாங்கலில் நான் சந்தித்த பல தொழில்முனைவோர்களும் தற்கொலைக்குச் சமமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் ஒரு மதியத்தில் இந்த பகுதிகளுக்குள் சென்று வந்தேன். இன்னும் முழுமையாக சீர் செய்யப் படாத தெருக்கள் ஒவ்வொன்றும் பல லட்சம் இழப்பை சந்தித்துள்ளன என்பதை வெளிச்சம் போடுகின்றன. தொழிலகத்துக்குள் புகுந்த நீரை வெளியேற்றி, இயந்திரங்களை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல தொழி லகங்களில் பணியாளர்கள் இல்லா ததால் மூடிக் கிடக்கின்றன. ஒலிம் பியா தொழில்நுட்ப பூங்காவில் ராட்சஸ மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை

சென்னை மாநகரின் மத்தியில் இப்படியொரு தொழிற்பேட்டை இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில்கள் பயிற்சி நிறுவனம், மாநில அரசின் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் உள்பட சிறு தொழில் தொடர்பான பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல தொழிலகங்களும் இங்கு இயங்கி வந்துள்ளன. தற்போது உற்பத்தி சார்ந்த தொழில்கள் குறைந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், சேவைத்துறை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டி ஈக்காட்டுத் தாங்கல், அம்பாள் நகர், ஜாபர்கான்பேட்டை, ராமபுரம் பகுதிகளில் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்கள் பலவும் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்திகளை செய்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் அதிகம் கிடையாது. தங்களது தொழில் அனுபவத்தைக் கொண்டு, வங்கி கடன் உதவியோடு சிறிய அளவில் தொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக மாறியவர்கள் பலரும் இந்த பகுதியில் நிறைந்துள்ளனர். அதாவது வரவுக்கும் செலவுக்குமாக தங்களுக்கு தெரிந்த தொழிலை விட்டு வெளியேற வழியில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழில் முனைவோர்கள் நிறைந்த பகுதி இது.

அடையாறு ஆற்றில் செல்ல வேண்டிய வெள்ளம், கரையோரங்களை துவம்சம் செய்தது மட்டுமில்லாமல், இவர்களது வாழ்க்கையிலும் பெரும் சோகத்தை விதைத்துவிட்டுச் சென் றுள்ளது. இந்த வெள்ள பாதிப்பு அவர்களது வாழ்க்கையைச் சூறையாடியுள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. பல தொழில் நிறுவன உரிமையாளர்களை மீளா கடனுக்கும் இந்த வெள்ளம் தள்ளி யுள்ளது, குறு தொழில்களையும், தொழிற்பேட்டை சார்ந்து இயங்கிய தொழிலாளர்களையும்., கடனாளி களாகவும், பிறரது உதவிக்கு ஏங்கும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றி யுள்ளது இந்த மாமழை. அடையாறு வெள்ளத்தினால் அதிக பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதி இதுதான்.

மக்கள் தங்களது உடமைகளை இழந்து தவிப்பது ஒருபக்கம் என்றால் ஒரு தொழில் முனைவோரது வலி அதனினும் அதிகமானது என்றே சொல்ல வேண்டும். அம்பாள் நகரில் பாதிக்கப்பட்ட ஒரு தொழில் முனைவோரிடம் பாதிப்பின் தீவிரம் குறித்து கேட்டேன்.

இங்குள்ள பல நிறுவனங்களும் கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கின்றன. தவிர டையிங் லேத் பட்டரைகளும் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. கார் உதிரிபாக தயாரிப் புக்கான இயந்திரங்களை பரவலாக அனைத்து தொழில் நிறுவனங்களுமே இறக்குமதி செய்கிறது. இவை எல்லாமே தற்போது நீரில் மூழ்கி வீணாக போயுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து சிறு தொழில் நிறுவனங்களுமே பாதிப் படைந்துள்ளன.

உயிரை காக்கவோ தொழிலைக் காக்கவோ...

எத்தனை மழைகளிலும் தொழி லகத்துக்குள் வெள்ளம் வந்ததில்லை. அதாவது இப்படி ஒரு வெள்ளம், இந்த பகுதிவரை வரும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரவு வேலை முடித்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டோம். காலையில் வெள்ளம் ஏரியாவுக்குள் புகுந்துவிட்டது. நேரம் செல்ல செல்ல தெருவுக்குள் நுழைய முடியாத அளவுக்கு வெள்ளம். மதியத்துக்குள் இடுப்புக்குமேல் வெள்ளம் சூழ்ந்து விட்டது இந்த ஏரியாக்களில். வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் தேடுவதுதான் அப்போதைய நோக்கமாக இருந்தது. இதனால் தொழி லகங்களை குறித்து யோசிக்கவே இல்லை என்கின்றனர்.

அரசு நிறுவன இழப்புகள்

அடையாறு ஆற்று வெள்ளம் கிண்டி ஒலிம்பியா பார்க் பகுதியில் ஆறாக ஓடியதில் ஐடி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பல ஐடி நிறுவ னங்களும் உள்ளன. மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமும் (சிப்பெட்) மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை தயாரித்து வழங்குகிறது. தவிர வெளியிலிருந்து ஆர்டர்கள் பெற்று தயாரித்து வழங்கி வருகின்றனர். இங்குள்ள இயந்திரங்களும் மூழ்கியதில் அரசுக்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு தொழில்நுட்ப பயிற்சி பெறும் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த கருவிகள் ஒவ்வொன்றும் பல லட்சம் மதிப்பு கொண்டவை. திரும்ப இவற்றை வாங்க வேண்டும் என்றால் அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல், நிதி ஒதுக்கீடு என பல நடைமுறைகள் உள்ளன. இது இப்போதைக்கு சாத்திய மாகுமா என்பது தெரியாது. பழுதுபட்ட இயந்திரங்களை சரிசெய்யவே நாங்கள் பல வருடங்கள் காத்திருக்கும் சூழ் நிலையும் வரலாம் என்கிறார் ஒரு பயிற்சியாளர். மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான மண்டல பயிற்சி மையமும் இந்த வெள்ளத்துக்கு தப்பவில்லை. பல ஆவணங்களும் சேதமடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்னை மண்டலத்தில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றனர்.

அடையாறு ஆறு இந்த பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பின் மதிப்பு சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை இருக்கலாம் என்பதை மதிப்பிட்டுள்ளனர். உறுதியான மதிப்பு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் உற்பத்தி இழப்பின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளாக இருக்கும். அதைவிடவும் இங்குள்ள தொழில்முனைவோர்களின் சமூக மதிப்பு நம் கண்முன்னே சிக்கி சீரழியும் என்பதுதான் அதி துயரமாக இருக்கப்போகிறது என்பதும் முக்கியமானது.

மின் இணைப்புகளுக்கு எத்தனை நாளாகும்?

மின் பழுதுகளை நீக்கி சரிசெய்து சில இயந்திரங்களை இயக்க முடியும். ஆனால் இங்குள்ள அனைத்து நிறுவன மின் இணைப்புகளுமே திரும்ப சரி செய்ய வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டதில் பெரும்பான்மையினர் சிறு தொழில்முனைவோர்கள்தான். இந்த பகுதிகளில் தற்போதுவரை மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. திரும்ப மின் இணைப்பை கொண்டுவர எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை என்பதுதான் இப்போதைய கவலை. இதற்கான மீட்டர்கள் மற்றும் மின் இணைப்புகளை சரி செய்வது மாற்றுவதும் இப்போது இயலாத காரியம். நாங்கள் மீண்டு எழுந்தாலும் மின் வாரிய உதவி சரியான நேரத்தில் இருக்குமா என்பதும் தெரியாது. கிட்டத்தட்ட அடுத்த ஆறு மாதங்களுக்கு எங்கள் சோற்றுக்கு என்ன வழி என்பது தெரியவில்லை என்கின்றனர்.

தவிர எங்களது எல்லா இயந்திரங்களிலும் இது சாத்தியமில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்கள் எல்லாமே கம்ப்யூட்டரைஸ்டு செயல்பாடுகள் கொண்டவை. அதன் போர்டுகள் செயலிழந்துள்ளன. அதை புதிதாக மாற்ற வேண்டும். அவை உடனடியாகவும் கிடைக்காது. பொதுவாக இயந்திரங்களை பிரித்து கோர்த்தாலும், எங்கு நீர் புகுந்துள்ளது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. அதாவது வாழ்வா சாவா கட்டத்தில் இருக்கிறோம் என்றார்.

’’வங்கிக் கடன் உதவியோடு சமீபத்தில்தான் இயந்திரம் வாங்கினேன். கிட்டதட்ட மொத்த செலவுகளும் ஒரு கோடி ஆனது. இன்னும் உற்பத்தி தொடங்கப்படாத நிலையில் இயந்திரம் மூழ்கிவிட்டது. இந்த நஷ்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்த இயந்திரத்தை இறக்குமதி செய்து என் தொழிலை விரிவுபடுத்த ஆசைப்பட்ட என் கனவுகளும் இதனோடு தகர்ந்து போயுள்ளது என்று நம்பிக்கை உடைந்து பேசினார் ஒருவர்.

இந்த பகுதியில் உள்ள தொழிலகங்கள் ஒவ்வொன்றும் குறு தொழில் வகைகளை சேர்ந்தது. இரண்டு மூன்று தொழிலாளர்களோடு தொழில்முனைவோரும் உடலுழைப்பை செலுத்துபவர்களாக இருக்கின்றனர். வீடுகளும் அருகருகிலேயே இருக்கிறது. அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பொருட்களை பாதுகாப்பதற்கு எந்த வாய்ப்புகளை தரவில்லை.

- maheswaran.p@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...