Friday, December 4, 2015

100 ஆண்டில் இல்லாத மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதி




சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடையாற்றின் மேம்பாலத்தைக் கடந்து திரண்டு செல்லும் வெள்ள நீர். | படம்: பி.ஜோதிராமலிங்கம்
போட்டோ கேலரி
வெள்ளம் சூழ்ந்த சென்னையின் பேரவலத்தைப் பேசும் படங்கள்


சென்னையில் கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை அளவால் தலைநகரம் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதியுற்றுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், "தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும் பாலான பகுதிகளில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும். நீலகிரி, கோவை போன்ற மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். விட்டுவிட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்" என்றார்.

100 ஆண்டில் இல்லாத அளவு

சென்னையில் கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி 24 மணி நேரத்தில் 26.1 செ.மீ. மழை பெய்தது. இதுவே இதுவரை அதிக பட்ச மழை அளவாக இருந்தது. ஆனால், நேற்று காலை நிலவரப் படி சென்னையில் அதிக பட்சமாக 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக அளவாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

2 நாட்களாக இடைவிடாது கொட்டும் மழையால் மிதக்கும் சென்னை

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டும் கன மழையால் மாநகரமே வரலாறு காணாத அளவுக்கு வெள்ளத்தில் மிதக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கன மழையால் நிரம்பி வழியும் சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாற்றின் குறுக்கே உள்ள பாலங்களும் மூழ்கியுள்ளன. இதனால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.

அடையாற்றின் கரையோரங்களில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களின் மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. சாலைகள் ஆறுகள் போல காட்சிய ளிக்கின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் இணைக் கும் 100 அடி சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோயம் பேடு பேருந்து நிலையத்திலிருந்து மிகக்குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமான நிலையம் மூடல்

மீனம்பாக்கம் விமான நிலை யத்தின் ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. டிசம்பர் 6 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையின் புறநகர் பகுதிக ளான பொத்தேரி, ஊரப்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், முடிச்சூர், மன்னிவாக்கம், மேற்கு தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்மாடி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் 2-வது, 3-வது மாடிகளிலும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உள்ளகரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பட்ர வாக்கம், விநாயகபுரம், கொளத் தூர், பெரம்பூர், வியாசர்பாடி, சூளை, பட்டாளம், புரசைவாக்கம், காசி திரையரங்க பகுதி, அசோக் நகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலை களில் 5 அடி முதல் 8 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. பெரம் பூர் பேருந்து நிலையம் அருகே தெருவில் 5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி புதிய மேம்பாலத்தின் அருகிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு களுக்குள் 5 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

அண்ணாசாலையில் உள்ள மூசா காதிரி தர்காவுக்குள் மழை நீர் புகுந்தது. அந்த தர்கா வளாகத்தில் 2 அடி அளவுக்கு தண்ணீர் சூழ்ந் துள்ளது. அண்ணா சாலை அருகே கூவம் கால்வாய் கரையில் வசித்து வரும் பூதப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீனவர்களின் படகுகளை இரவல் வாங்கி போலீஸார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர். புறநகர் பகுதிகளில் பைபர் படகு, ரப்பர் படகு மூலம் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கு வதற்கு ஏற்பாடு செய்தனர். சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிகள், சமூக நலக் கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தும் இல்லாததால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, மாநிலத்தின் பிற பகுதிகளுடன் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை மாநகருக்கு வெளியூர்களில் இருந்து பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட வர முடியாமல் போனது. மேலும், தொடரும் மழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக நகரின் பல சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

இதனால் கடைகளுக்கு தேவையான பால், குடிநீர் கேன் போன்ற பொருட்களை பிற இடங்களிலிருந்து கொண்டு செல்ல முடியவில்லை. பெரும் பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்படவேயில்லை. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீர், பால் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024