Friday, December 4, 2015

அந்த டிசம்பர் 2-ஆம் நாள்...!


Dinamani


By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 02 December 2015 01:24 AM IST


போபால் விஷ வாயு பேரிடர் நினைவிருக்கிறதா? ஏதோ புகை மூட்டம்போல நினைவு வருகிறது, இல்லையா? பலருக்கு அந்த சம்பவத்தினால் வாழ்க்கையே புகை மூட்டம் ஆகிவிட்டது. அவர்கள் மட்டுமில்லை அந்த சம்பவத்திற்குப பின் பிறந்த குழந்தைகள்கூடப் பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்து புகை மூட்டமாகவே வாழ்கிறார்கள்.
1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நள்ளிரவு நேரம். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. துரும்பு பிடித்த குழாய்கள், கசிந்து கொண்டிருந்த அடைப்புத் தடுக்குகள் (வால்வ்) ஆகியவை காரணமா என்று தெரியவில்லை.
குழாய் உடைந்து தண்ணீர் அங்கிருந்த இ - 610 (உ-610) எண்ணுள்ள அந்தத் தொட்டியில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி.) என்கிற உயிர்க்கொல்லி ரசாயனம் தேக்கி வைத்திருந்த தொட்டி ஒன்றில் பாயத் தொடங்கியது.
மீதைல் ஐசோ சயனேட்டில் தண்ணீர் கலந்ததும், ஏறத்தாழ 40 டன் விஷவாயு உற்பத்தியாகி அடுத்த சில வினாடிகளில் சுற்றிலும் புகைமண்டலமாகப் பரவத் தொடங்கியது. எந்தவொரு ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமல்லவா?
ஆபத்து நிறைந்த யூனியன் கார்பைடின் போபால் பூச்சிமருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் இந்த அளவிலான வெப்பத்தையும், அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்கவில்லை அல்லது சரியாக வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பில் இருந்தன.
பிறகென்ன? புகைமண்டலம் மேலெழுந்து அந்தத் தொழிற்சாலையை அப்படியே சூழ்ந்து கொண்டுவிட்டது. இரவு நேரக் காற்றின் துணையுடன் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த போபால் நகரப் பகுதிகளையும் தனது மரணப் பிடியில் சிக்க வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விஷவாயு.
சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் நுரையீரல்களில் நுழைந்து மரண தாண்டவமாடத் தொடங்கிவிட்டிருந்தது அந்த உயிர்க்கொல்லி ரசாயன வாயு.
அதிகாலை ஒரு மணி அளவில், மூச்சுத் திணறலுடனும், இருமலுடனும் போபால் நகர மக்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் எங்கும் புகைமண்டலம். அருகில் இருப்பவர்களைக்கூடச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. கண்களில், எரியும் கொள்ளியைச் சொருகியதுபோல எரிச்சல். அங்குமிங்கும் மக்கள் ஓடத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு அங்கே ஏற்பட்ட கலவரச் சூழலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பலர். அங்குமிங்கும் பரபரப்பில் ஓடுபவர்களால் மிதிபட்டு இறந்த குழந்தைகளும், முதியவர்களும் கணக்கிலடங்கார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) என்கிற அரசு ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த முதல் நாள் இரவில் மட்டும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையைச் சுற்றிலும் வசிக்கும் ஏறத்தாழ 5.20 லட்சம் பேர்களின் ரத்தக்குழாய்களில் விஷவாயு நச்சு கலந்து அவர்களது அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2-ஆம் தேதி இரவின் விஷவாயுக் கசிவுக்குப் பிறகு, டிசம்பர் 3-ஆம் தேதி காலையிலிருந்து பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்று அனைத்தும் கலந்து ஒரு மிகக் கொடுமையான நாடகம் அரங்கேறத் தொடங்கியது. எல்லோரும் பொய் சொன்னார்கள். அனைவரும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையும், ஏமாளியான இந்திய தேசத்தையும் ஏமாற்றினார்கள். இதில் அரசும் முக்கியப் பங்கு வகித்தது என்பதுதான் உலக ஜனநாயக வரலாற்றில் மன்னிக்கவே முடியாத துரோகம்!
இதுபோன்ற ஒரு விபத்திற்கு தீர்வு காண்பதுபோல ஒரு திருப்திகரமான சட்டத்தை நம் அரசு இயற்றி இருக்கவேண்டும். அதற்கு பின் அந்த விபத்தை அடிப்படையாக கொண்டு பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் குறைபாடுடன்தான் காணப்படுகின்றன.
முதலில் போபால் விஷ வாயு கசிவு (மனுக்களை பரிசீலித்தல்) சட்டம் 1985 (Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act 1985) இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி அரசாங்கமே பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது. அதாவது உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அரசு தான் விபத்துக்கே காரணம்.
அவ்வாறிருக்கையில் அந்த அரசே பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுவேன் என்றால் அது தர்க்க ரீதியான முரண்பாடு. அரசு எப்படிக் காரணம் என்றால், அரசுதான் யூனியன் கார்பைட் கம்பெனிக்குப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்காமல், விஷவாயு தயார் செய்ய அனுமதித்தது!
இதற்கு முன்பே பல சிறு விபத்துகள் ஏற்பட்டிருந்தன. இருந்தும் அரசு அசட்டையாக இருந்துவிட்டது. பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனத்திற்கு பூச்சிமருந்துத் தயாரிப்பு ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கித் தன்னுடைய மக்களின் நலனை புறக்கணித்தது. ஆகையால் சட்டத்தின் பார்வையில் அரசே ஒரு கூட்டுக் குற்றவாளி.
அப்படியிருந்தும் பயிரை மேய்ந்தவர்களே வேலியாக நாங்கள் இருக்கிறோம் என்று மகுடம் சூட்டிகொண்டார்கள். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
"பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்கள். அவர்களால் இந்தக் கடினமான வழக்கை நடத்த முடியாது. வழக்கில் அரசு பங்கேற்காவிடில் அவர்கள் தோற்றுவிடுவார்கள்' என்பது தான் அரசுத் தரப்பு வழங்கிய விசித்திரமான வாதம்.
ஆனால், நடந்தது என்ன? மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று அளவிடும் முன்பாகவே யூனியன் கார்பைட் (UCC) உடன் ஒரு சமரசத்திற்கு அரசு வந்துவிட்டது. அந்த 1985}ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு முடிவு பெறுவதற்கு முன்பாக சமரசம் செய்து கொண்டு விட்டது.
மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்ட இழப்புத் தொகையில் 17% தொகைக்கு சமரசம் செய்து விட்டது. இதற்கிடையில், டவ் கெமிகல்ஸ் நிறுவனம் யூனியன் கார்பைட் நிறுவனத்தை அமெரிக்காவில் வாங்கியது. அவ்விரு ஸ்தாபனங்களின் ஒப்பந்தப்படி டவ் கெமிகல்ஸ் யூனியன் கார்பைடின் சொத்தை மட்டும் எடுத்துக்கொண்டது. யூனியன் கார்பைட் வழங்க வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட அதன் உடன்பாடுகள் அந்தரத்தில் விடப்பட்டன.
இவ்வளவு ஆண்டுகள் சென்றபின் பாதிப்பை குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகவும், இழப்பீடு கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு திருத்தல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது அரசு.
யூனியன் கார்பைட், டவ் செமிகல்ஸ் பின்னால் ஒளிந்துகொண்டது, டவ் கெமிகல்úஸா யூனியன் கார்பைட் கடன்பாடுகளுக்கு தான் பொறுப்பல்ல என்று சொல்லிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் தானே, அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன?
1991-இல் பொதுப் பொறுப்பு காப்பீட்டு சட்டம் இயற்றப்பட்டது (Public Liability Insurance Act). இந்த சட்டத்தின் அடிப்படையில் 56.56 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. அதில் 46.45 லட்சம் மட்டுமே ஒரு விபத்திற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், இது போன்ற பெரும் விபத்து நம் நாட்டில் நடக்கவேயில்லையா?
1997-இல் விசாகப்பட்டினத்தில் ஹெச்.பி.சி.எல். தொழிற்சாலை வெடித்தது. 2002-இல் ஐ.பி.எல். வடோதராவில் விஷ வாயு கசிந்து 250 பேர் பாதிக்கப்பட்டனர். 2008-இல் ஜாம்ஷெட்பூரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிந்து, அந்த விபத்தில் 150 பேர் பாதிக்கப்பட்டனர்.
2012-இல் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 19 பேர் உயிர் இழந்தனர். இன்னும் இது போலத் தொடர்கிறது பட்டியல். அவையெல்லாம் விபத்தே இல்லையா? இல்லை, அதில் பாதிக்கப்பட்டவர்கள் நம் கண்களில் படவில்லையா?
தேசிய சுற்றுப்புறச் சூழல் தீர்ப்பாயச் சட்டம் என்று ஒரு சட்டம் இயற்றினார்கள். அதில் அபாயகரமான பொருள்களைக் கையாளுவதால் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று ஒரு ஷரத்து இருந்தது. அந்த சட்டம் அமலுக்கே வரவில்லை.
பிறகு கிரீன் ட்ரிப்யூனல் சட்டம் வந்தது. அதில் இந்த ஷரத்து நீர்த்துப் போனது. எந்த விபத்து நேர்ந்தாலும் இழப்பீடு தருவதாக மாற்றப்பட்டது. இதனால் விஷ வாயு போன்ற அபாயகரமான பொருள்கள் சம்பந்தப்பட்ட பெரிய பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்ற பொறுப்பு வலியுறுத்தப் படாமல் போயிற்று.
இதே யூனியன் கார்பைட் அமெரிக்காவில் நிறுவியிருக்கும் தொழிற்சாலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அசிரத்தையாக இருக்கிறது. அவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லாத அக்கறை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?
வரும் காலத்தில் இது போன்று ஏதாவது நடந்தால், (நடக்கக் கூடாது, நடக்கக் கூடாது) அதற்கு ஒரு முழுமையான சட்டமே இன்னும் வரவில்லையே...
போபாலைப் பற்றி ஓர் ஆவணப் படம் பார்த்தேன். அதில் ஒரு பணியாளர் வருவார். தினமும் தன் இளம் மனைவியிடம் தொழிற்சாலையில் ஏதோ சரியாக இல்லை, பயமாக இருக்கிறது என்பார். யாரும் செவி சாய்க்கவில்லை. அவர் இறந்தார். அது மட்டுமல்ல, அவர்கள் பையன் நிரந்தர பாதிப்புடன் வாழ்கிறான். அந்த இளம் பெண் அழிக்கப்பட்ட வாழ்க்கையுடன் போராடுகிறாள்.
இப்பொழுது அவர் இளம் பெண் இல்லை 31 ஆண்டுகள் ஓடிவிட்டன. இது அந்த நிறுவனம் செய்த படுகொலை அல்லாமல் என்ன? அதுபோன்ற நிகழ்வுகளுக்கும் ஒரு சட்டம் வரவேண்டும்.
2014-இல் வரிசையாக ஆங்கில தினசரி ஒன்றில் போபால் பேரிடர் பன்முகங்களை விளக்கும் வகையில் தொடர்ந்து கட்டுரைகள் வெளிவந்தன. "தினமணி' நாளிதழிலும் "போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!' என்கிற தொடர் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைகளின் அம்சங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
புகை மூட்டத்துக்குள்ளே போபால் பேரிடர் குறித்த நினைவுகள் காணாமல் போய்விடக் கூடாது. இன்றும் அங்கே மக்கள் அதன் விளைவுடன் போராடுகிறார்கள். நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இனிமேலாவது வலுவான சட்டங்கள் வரவேண்டும். அப்படிச் சட்டங்கள் வருவதற்கு நாம் போராட வேண்டும்!
இதே யூனியன் கார்பைட் அமெரிக்காவில் நிறுவியிருக்கும் தொழிற்சாலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அசிரத்தையாக இருக்கிறது. அவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?
நம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லாத அக்கறை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024