Thursday, December 10, 2015

சுட்டி விகடன் - 15 Dec, 2015

"நான் சொன்னதும் மழை வந்துச்சா!"
தமிழ்நாட்டின்
ழைக்கு முன் மண் வாசனை வருதோ இல்லையோ... வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தொலைக்காட்சியில் வந்துவிடுவார். மழையால் விடுமுறையைக் கொண்டாடும் எங்களுக்கு, ரமணன் அங்கிள்தான்  சூப்பர் ஸ்டார். வட கிழக்குப் பருவ மழை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த ஒரு நாள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வானிலை ஆய்வு மையத்துக்குப் படையெடுத்தோம். ‘வானிலையை எப்படி ஆராய்கிறார்கள்?’ என்பதை விஷூவலாகவே விளக்கிக் காட்டினார்கள் ஆய்வுமைய ஊழியர்கள். வானிலை ஆராய்ச்சிகளுக்குக் கணக்கிடப்படும் கருவிகளைக் காட்டியதோடு, செயல்முறை விளக்கமும் அளித்தார்கள். பிறகு, ரமணன் அங்கிளோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கேட்ட அடை மழைக் கேள்விகள்...
‘‘ஃபேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல உங்களைக் கிண்டல் பண்ணி போட்டோ போடுறது தெரியுமா அங்கிள்?’’
‘‘அது உங்க வரைக்கும் தெரிஞ்சுபோச்சா? ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையுமே நான் பயன்படுத்துறது இல்லை. என்கூட வேலை பார்க்கிறவங்க சொல்வாங்க. நானும் ஜாலியா சிரிச்சுட்டு மறந்துடுவேன்.’’ 
‘‘வானிலை அறிக்கை என்றால் என்ன?’’
‘‘மழை பெய்யுறப்போ வெளியே எட்டிப்பார்த்து, ‘பெருசா மழை பெய்யுது’னு சொல்லலாம். அதையே ஆறேழு நாட்களுக்கு முன்னாடி சொல்வீங்களா? அப்படி மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கணிச்சுச் சொல்றதுதான் வானிலை அறிக்கை. செயற்கைக்கோள்கள், கருவிகள், கணக்குகள் அடிப்படையில் மழையைக் கணிச்சு சொல்லுவோம்.’’
‘‘சில சமயம் ‘கனமழை பெய்யும்’னு சொல்றீங்களே... மழைக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?”
‘‘7செ.மீ அளவைவிட அதிகமா பெய்யுற மழையை கனமழைனு சொல்வோம். 13 செ.மீ அளவைவிட அதிகமா பெய்தால், அது மித கனமழை. 25 செ.மீ அளவைவிட அதிகமா பெய்தால், அது அதி கனமழை.’’
‘’இத்தனை செ.மீ மழை பெய்ததுனு  எப்படிக் கணக்கிடுறீங்க?”
‘‘நான் சொல்றதைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க. ஒரு சதுர கிலோமீட்டர் அளவுள்ள இடத்தில், ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொட்டினா, தேங்கி இருக்கும் அந்தத் தண்ணீர்ல ஸ்கேலை வெச்சு அளந்துபார்த்தா, ஒரு செ.மீ அளவுக்கு இருக்கும். இதுவே, ஒரு செ.மீ கனமழை.’’
‘‘புயல் என்றால் என்ன?”
தண்ணி பள்ளத்தை நோக்கி ஓடுறமாதிரி, காற்று மேல்நோக்கி எழும்பும். ஈரமான காற்று மெள்ள மேலே எழும்பும். வெப்பமான காற்றாக இருந்தா, சீக்கிரமா மேலே போயிடும். இந்தக் காற்றின் நகர்வை, ‘சலனம்’னு சொல்வாங்க. மெள்ளப் போகிற ஈரக்காற்று ரொம்ப தூரத்துக்குப் போகாம, வானத்துலேயே தங்கும்போது, காற்றில் ஏற்படும் எதிர் சுழற்சிக்குப் (Anti clockvice) பெயர்தான் காற்றழுத்தத் தாழ்வு நிலை. இந்த நிலையில் காற்று சாதாரணமா 31 கி.மீ வேகத்தில் வீசும். அப்படி வீசாம, 61 கி.மீ வேகத்துக்கும் அதிகமா வீசினா அதுக்குப் பெயர்தான் புயல். கடும் புயல், மிகக் கடும்புயல்னு பல வகை இருக்கு.’’
‘‘புயல் உருவாவதை எப்படிக் கண்டுபிடிப்பீங்க?”
‘‘ ‘ஜெனிசிஸ் பொட்டென்ஷியல் பாராமீட்டர்’ங்கிற கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவோம். தமிழ்ல, ‘சாத்திய அலகு’னு சொல்லலாம். புயல் உருவாவதை முன்கூட்டியே கணிக்கும் கால்குலேஷன் இது. கடலின் வெப்பநிலை எப்படி இருக்கு? காற்று எந்தத் திசையில் வீசிக்கிட்டு இருக்கு? எந்தத் திசையில் வீசும் எனப் பல விஷயங்களைக் கணக்கிட்டு, ஏழெட்டு நாட்களுக்கு முன்னாடியே நமக்குக் காட்டும். அதைப் பார்த்துச் சொல்வோம்.’’
‘‘சில சமயம் மழை வரும்னு சொல்றீங்க. வெயில் அடிக்குது. வெயில் அடிக்கும்னு சொன்னா மழை பெய்யுதே அது ஏன்?”
‘‘நாம உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற இடத்துல இருந்து 36,000 கிலோ மீட்டருக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்கிற செயற்கைக்கோள்கள் அனுப்பும் சிக்னல்களின் அடிப்படையில் தகவல்களைத் திரட்டுவோம். அந்தத் தகவல்களின் அடிப்படையில், சில கணக்கு ஃபார்முலாவை அப்ளை பண்ணிப்பார்த்தோம்னா, ‘இந்தத் திசையில் புயல் வீசலாம். இந்த இடத்தில் கரையைக் கடக்கலாம்’னு முடிவு கிடைக்கும். ஆனா, கிடைக்கும் எல்லா முடிவுகளும் ஒரே மாதிரி இருக்காது. அதனால் சில கணிப்புகள் மாறும். பிறகு, கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கக்கூடிய முடிவுகளை மீண்டும் ஆராய்ச்சி பண்ணும்போது சரியான முடிவுகள் கிடைக்கும்.’’
‘‘கருமேகங்கள் என்றால் என்ன?”
‘‘மேகத்துல தண்ணீர் அதிகமா இருந்துச்சுனா, கறுப்பா தெரியும். அவ்வளவுதான். ‘நீருண்ட மேகங்கள்’னு அழகுத் தமிழ்ல சொல்லிக்கலாம்.’’
‘‘ஜோதிடத்தில் மழையை முன்கூட்டியே சொல்லியிருக்காங்கனு சொல்றாங்களே...’’
‘‘ஜோதிடத்தில் சொல்றதை உறுதிப்படுத்த முடியாது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல வர்ற செய்திகளை ஆராயாமல் நம்பக் கூடாது.’’
‘‘ எவ்வளவு செ.மீ அளவுக்கு மழை பெய்தால், பள்ளிகளுக்கு  விடுமுறை விடுவாங்க?’’
‘‘நானும் சின்ன வயசுல மழையினால் லீவு விட்டா ஜாலியா இருப்பேன். பள்ளிக்கு விடுமுறை விடுறது அரசாங்கம் எடுக்கிற முடிவு. ‘நாளைக்கு மழை வருமா?’னு மட்டும்தான் என்கிட்ட கேட்கணும். கொஞ்சம் விட்டா, நான்தான் மழையையே வரவைக்கிறதா சொல்லிடுவீங்களே’’ என ரமணன் அங்கிள் பதறி எழ, அரங்கம் முழுக்க இடிச் சிரிப்பு.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024