Thursday, December 10, 2015

வலி இல்லாத வாழ்க்கை .. டாக்டர் பிரபு திலக்

Return to frontpage

வலி இல்லாத வாழ்க்கை ஒன்று இருக்குமானால் அதுவே சொர்க்கம், அதுவே வாழ்க்கையின் அளவிட முடியாத ஆசீர்வாதம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட வரம் பலருக்கும் வாய்ப்பதில்லை.

பலருடைய வாழ்க்கையில் வலி என்பது நோயின் அறிகுறி என்ற நிலை மாறி, அதுவே நோயாக மாறிவிடுவதும் உண்டு. இப்படி வலியால் அவதிப்படுபவர்களின் தேவைக்குத் தீர்வு கொடுக்கும் மருத்துவத் துறை ‘நோய்த் தணிப்பு பேணுதல்’ எனப்படும் ‘வலி நிர்வாகத் துறை’. தலைவலியில் தொடங்கி முழங்கால் வலி, முதுகுத் தண்டு வலி, மூட்டுவலி, புற்றுநோய் வலி உள்படப் பலவற்றுக்கும் இத்துறை சிகிச்சை தருகிறது.

இன்றைய வாழ்க்கையில் சரிவிகித உணவுப் பழக்கம் இல்லாமை, போதிய உடற்பயிற்சி இல்லாமை, தவறான உடற்பயிற்சிகள், அதிகமான உடல் எடை, உடல் இளைக்கிறேன் எனச் சத்தான உணவை ஒதுக்குதல், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மை போன்றவை இளம் வயதிலேயே வலிகள் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள்.

இடுப்பு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் வலி நிர்வாகத் துறை தீர்வு தருகிறது. அல்ஜியாட் சிகிச்சையின் மூலம் பலருக்கும் வலி நிவாரணம் அளிக்க முடியும். எடுத்துக்காட்டாக, புற்றுநோய் ஏற்படுத்தும் வலியால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குக் கேங்கிலியான் பிளாக் (Ganglion Block) எனும் நவீன சிகிச்சை பயன் தரும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இத்துறை பற்றிய விழிப்புணர்வு சற்றுக் குறைவு. கடந்த 4 ஆண்டுகளாகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்துகூடப் பலர் இந்தச் சிகிச்சையைப் பெறும் அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்துவருகிறது.

ஜவ்வு பிதுங்குதல்

இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியாகப் பயணம் செய்யும்போது ஏற்படும் அதிர்வுகள், உட்கார்ந்த நிலையிலேயே பல மணி நேரம் வேலை பார்ப்பது, உடற்பயிற்சியின்போது அதிகப்படியான பளுவைத் தூக்குதல், உடல் எடை அதிகரிப்பு, எடை அதிகமுள்ள பொருட்களைப் பெண்கள் தூக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் தண்டுவட எலும்புகளுக்கு மத்தியில் ‘ஷாக் அப்சர்பர்’ போல வேலை செய்யும் ஜவ்வு பிதுங்குவதால் வலி ஏற்படுகின்றன.

சிலருக்கு இப்படிப் பிதுங்கிய ஜவ்வு, நரம்பை அழுத்துவதால் தாளமுடியாத வலி ஏற்படும். நாளடைவில் கால்கள் உணர்ச்சியற்றுப் போகக்கூடிய ஆபத்தும் உண்டு.

அல்ஜியாட் சிகிச்சை முறைகள் மூலம் அறுவைசிகிச்சையின்றி இந்த வலிகளையும், வலியைத் தோற்றுவிக்கும் மூலக் காரணங்களில் பலவற்றையும் குணப்படுத்தலாம்.

பெண்களும் இளைஞர்களும்

இளம் வயதினர் தேவையற்ற முரட்டுத்தனத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது முதுகுவலி, இடுப்புவலி ஏற்படலாம். அதிகப்படியான பளுவை முறையான பயிற்சியில்லாமல் தூக்கும்போதும், இவ்வலி ஏற்படும். டிஸ்க் பல்ஜ், டிஸ்க் புரோலாப்ஸ் போன்றவை ஏற்பட்டுத் தண்டுவடத்தின் நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஏற்படும் வலி, இடுப்பு மற்றும் கால்களுக்கும் பரவும். ஜவ்வுகள் கழுத்துப் பகுதியில் பிதுங்கும்போது, கைகளிலும் வலி ஏற்படும். இத்தகைய வலிகளுக்கு ஹைட்ரோசிஷன் (Hydrocision), நியூக்ளோடமி (Neucleatomy) போன்ற சிகிச்சைகள் பயன்படும்.

நாற்பது வயதுக்கு மேல் மெனோபாஸ் ஆரம்பித்துவிடுவதால் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைந்து முழங்கால், மூட்டு, இடுப்பு வலி போன்றவை பெண்களை அதிகம் பாதிக்கிறது. கர்ப்பப்பையை அகற்றிய பெண்களுக்கு இது இன்னும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே உடலியல் மாற்றங்களால் அவதிப்படும் அவர்களுக்கு, இந்த வலியும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை முடக்கலாம். இத்தகையோரின் வலிகளுக்கான தீர்வை கிளாஸ் 4-லேசர், அல்ட்ரா சவுண்ட், நெர்வ் பிளாக் கருவிகள் மூலம் தர முடியும்.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்றவை அதிகம் தாக்குகிற முதியவர்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்கு அறுவைசிகிச்சை செய்வது சிக்கலானது. இவர்களுக்கு அறுவை சிகிச்சையும் பக்க விளைவுகளும் இல்லாமல் வலி நிர்வாகத் துறையின் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

நோய்கள் தடையில்லை

டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற நோயால் ஏற்படக்கூடிய வலி மிகவும் மோசமானது. முகத்தில் அவ்வப்போது ஷாக் அடிப்பது போலிருக்கும், பல் விளக்க, முகம் கழுவப் போன்ற செயல்களைச் செய்யக்கூட மிகவும் வேதனையாக இருக்கும்.

குளிர் காலத்தில் பிரச்சினை மேலும் கடுமையாகும். மூளையிலுள்ள ரத்தக் குழாய்களும் நரம்புகளும் பின்னிக்கொள்வது, இதற்கு ஒரு காரணம். சுகுயு சிகிச்சை முறை இதற்கு நல்ல தீர்வு.

வலி நிர்வாகத் துறையின் மற்றொரு சிறப்பு வயது, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற எந்தவொரு விஷயமும் இந்தச் சிகிச்சை முறைக்குத் தடையில்லை. இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையை முடக்கிப்போடும் பலவிதமான வலிகளிலிருந்து விடுபடக் கத்தியின்றி, ரத்தமின்றி அல்ஜியாட் சிகிச்சையின் மூலம் தீர்வு கிடைக்கிறது.

கட்டுரையாளர், வலி நிவாரண நிபுணர்

தொடர்புக்கு: prabhuthilaak@painwin.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024