Tuesday, December 15, 2015

அழிவுக்கு காரணம் ஆக்கிரமிப்புதான்

logo

ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தையே கருணையோடு தமிழ்நாட்டை பார்க்கவைக்கும் வகையில், கனமழை பெய்து வெள்ளம்... வெள்ளம் எங்கு பார்த்தாலும் வெள்ளம் என்ற அளவில், ஒரு சமுத்திரத்தை போன்ற தோற்றத்தை சென்னை உள்பட தமிழகத்தில் உருவாக்கிவிட்டது. ஏரிகள் எல்லாம் நிறைந்து கரைபுரண்டு ஓடி, தங்கள் பாதையைவிட்டு திரும்பிய இடத்திற்கெல்லாம் சென்று சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இயற்கையின் பேரிடருக்கு யாரையும் காரணமாக சொல்லமுடியாது என்றாலும், பல சேதங்கள் நிச்சயமாக ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டதுதான் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அந்த பகுதியில் பொறுப்பாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்னையில் முன்பு மாநகராட்சி இணை ஆணையாளராக அபூர்வா இருந்தபோது பல ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றி ஆக்ஷன் அபூர்வா என்று பெயர் பெற்றார்.

சென்னையை அடுத்த முடிச்சூர் இப்போது வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இந்த தண்ணீரை எப்படி வடிகட்டுவது, எங்கே போய்விடுவது என்று எல்லோரும் தவித்தனர். இந்த நேரத்தில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா அதிரடி நடவடிக்கை எடுத்தார். அந்த வெள்ளத்துக்கு காரணமாக இருந்த அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களையும் ஜே.சி.பி. இயந்திரங்களைக்கொண்டு இடித்து அகற்றினார். ஆக, அதிகாரிகள் நினைத்தால் எந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றமுடியும் என்பதை இரு பெண் அதிகாரிகளும் நிரூபித்து விட்டார்கள்.

இவ்வளவு பெரிய சேதத்திற்கும் காரணம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புதான் என்பதை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், திறந்தவெளி இடங்கள் போன்றவற்றில் 4–ல் ஒருபகுதி கட்டிடங்களாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,600 ஏரிகள் ஒருகாலத்தில் இருந்த நிலைமாறி, இப்போது 3 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 19 ஏரிகள் 1980–ம் ஆண்டுகளில் 1,130 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து, இப்போது 645 ஹெக்டேருக்கும் குறைவாக ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. இந்தநிலை சென்னையில் மட்டும் இல்லை, தமிழ்நாடு முழுவதுமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய இடமாக நீர்நிலையாகத்தான் இருக்கிறது. அரசாங்கங்களே பல நீர்நிலைகளில் கட்டிடங்களை கட்டிவிட்டன. பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் ரேஷன் கார்டு, மின்சார வசதி, பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் நிச்சயமாக தண்டனைக்குரியவர்கள்தான். சென்னையிலும், முடிச்சூரிலும் இரு பெண் அதிகாரிகள் நினைத்தால் ஓரிரு நாட்களில் எல்லா ஆக்கிரமிப்புகளையும் இடித்து தள்ளமுடியும் என்றநிலை இருக்கும்போது, அதே சட்டத்தை கையில் எடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்தால், பாதிக்கப்படப்போவது ஆயிரக்கணக்கானவர்கள் என்றாலும், பாராட்டப்போவது 7 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக்கொண்ட ஒட்டுமொத்த தமிழகமும்தான். ஆக, வெள்ளத்திற்கு மீட்பு, நிவாரணம் ஆகிய பணிகளுக்கு அடுத்து சீரமைப்பை மேற்கொண்டு இருக்கும் தமிழக அரசு, ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட ஊக்குவிக்கவேண்டும். அதிகாரிகளையும் வெங்கையா நாயுடு சொன்னதுபோல, ஆக்கிரமிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...