Saturday, December 26, 2015

காற்று வாங்கப் போவோம்.


Dinamani


காற்று வாங்கப் போவோம்...!


By மன்னை. பாஸ்கர்

First Published : 25 December 2015 01:11 AM IST


சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.
இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள்.
காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். "விட்டாலிட்டி ஏர்' என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து வணிக முத்திரையுடன் விற்பனையைத் தொடங்கி விட்டது.
இப்போதைக்கு மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அந்நிறுவனத்தின் காற்று விற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் காற்று மாசு தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது சீன நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், வாகன உற்பத்திக் கூடங்கள் போன்றவற்றிலிருந்து பெருமளவு புகை வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர் காய்வதற்காக பெய்ஜிங் நகர வீடுகளில் நிலக்கரித் துண்டுகளை எரிப்பதால் வெளியேறும் அதிக அளவு புகையால் காற்று கடுமையாக மாசடைந்தது. இதனோடு பனிப்புகையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பல்வேறு சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். இதனால், கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெய்ஜிங்கில் பள்ளிக் கூடங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கனடாவின் விட்டாலிட்டி ஏர் நிறுவனம் சீனாவில் கால் பதித்து காற்று விற்பனையைத் தொடங்கியது. விற்பனை சூடுபிடிக்க உற்சாகமடைந்த அந்த நிறுவனம், சீனாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கள் நிறுவனத் தயாரிப்பை விற்க முகவர்களை நியமித்தது. ஒரு புட்டி காற்றின் விலை இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதாவது, சீனாவில் ஒரு தண்ணீர் புட்டியின் விலையை விட 50 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மலைத்தொடரின் உச்சியிலிருந்து அடைக்கப்பட்ட காற்றுப் புட்டிகளுக்கு மவுசும் விலையும் இன்னும் கொஞ்சம் அதிகம். இந்தக் காற்று 10 முதல் 12 மணி நேரம் வரை தூய்மையானதாக இருக்குமாம். இப்போது காற்று விற்பனை சீனாவில் கன ஜோராக நடக்கிறது.
தூய்மையான காற்றுப் புட்டிகளை வாங்கி பயன்படுத்துவதை ஓர் அந்தஸ்தாகவே கருதத் தொடங்கி விட்டனர் மேல்தட்டு மக்கள். குறிப்பாக பெண்களும், தொழில் அதிபர்களும் இந்த காற்றுப் புட்டிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
எங்கு சென்றாலும் தங்கள் கைப்பைகளில் காற்றுப் புட்டிகளை கையோடு எடுத்துச் செல்கின்றனர். காற்று மாசடைந்த பகுதிகளில் எப்போது தேவையோ அப்போது தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கைபேசிகளை எடுத்துச் செல்ல மறந்தாலும் காற்றுப் புட்டிகளை அவர்கள் மறப்பதில்லை. பெய்ஜிங்கில் சீனர்களின் நிலை அந்த அளவுக்கு பரிதாபகரமாகி விட்டது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதைப் பார்த்த கனடா நிறுவனம் தற்போது அதைப் பெருக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது. தூய்மையான காற்றின் அவசியம், மாசடைந்த காற்றால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளம்பரங்கள் செய்யத் தொடங்கி இருக்கிறது.
தங்கள் நிறுவனம் தூய்மையான காற்றை எப்படிப்பட்ட இடங்களில் இருந்து எடுக்கிறது? புட்டிகளில் எப்படி அடைக்கிறது? என்பதைப் பற்றி தனது இணையதளத்தில் புகைப்படங்களுடன் விரிவாக கூறியிருக்கிறது இந்த நிறுவனம்.
தனது நண்பருடன் சேர்ந்து விளையாட்டாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததாக கூறும் விட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மோசஸ் லாம், முதலில் ஒரு பாலிதீன் பையில் பான்ஃப் மலைத்தொடரின் காற்றைப் பிடித்து அடைத்து 50 பென்ஸ் என்ற விலைக்கு விற்றாராம்.
பின்னர், இரண்டாவது முறையாக ஒரு பாலிதீன் பையில் காற்றை விற்றபோது அதை விட மூன்று மடங்கு கூடுதல் விலை, அதாவது 160 பென்ஸ் கிடைத்ததாம். அப்போதுதான் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இப்போது விட்டாலிட்டி ஏர் நிறுவனம் பல நாடுகளில் கிளைகளையும் விற்பனை முகவர்களையும் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டது. உங்கள் ஊரில் நீங்களும் காற்று விற்பனை முகவராகலாம். அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் விண்ணப்பங்கள் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிறுவனம் காற்று மற்றும் ஆக்ஸிஜன் புட்டிகளை வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தீவிரமாக களமிறக்கியுள்ளது. சீனாவில் கொடி கட்டிப் பறக்கும் காற்று வியாபாரத்திற்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லையாம்.
ஆனாலும், தண்ணீர் புட்டிகள் இந்தியாவில் பெருமளவில் விற்பனையாவதால்,காற்றுக்கும் சந்தை கிடைக்கும் என்று காத்திருக்கிறது இந்நிறுவனம்.
அப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டு காற்று மாசு, வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்கால சந்ததியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
பொருள்களைத் தயாரித்து விற்று வந்த நிலை மாறி, இயற்கையாக கிடைப்பவற்றையும் காசாக்க முயற்சிக்கும் இந்த வணிக உலகத்தின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. ஓர் அளவுக்கு மேல் அவர்களை அனுமதிப்பதும் தவறுதானே!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024