Monday, December 28, 2015

நல்லுறவுக்கு வாசலைத் திறக்கும் நட்பு பயணம்!

logo
தெற்காசிய நாடுகளில் முக்கியமான நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் சுதந்திரத்திற்குப்பிறகு முக்கோணங்களாகவே இருந்தன. இந்த 3 நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருந்தால், இந்த பிராந்தியமே பெரும் முன்னேற்றத்தை காணமுடியும் என்று எல்லோர் உள்ளத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அத்தகைய சூழ்நிலை இதுவரையில் நிலவாமல் இருந்தது. பாகிஸ்தானுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் ஜவஹர்லால் நேரு, ராஜீவ்காந்தி ஆகியோர் சென்றிருக்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் 1999–ம் ஆண்டு முதலில், டெல்லி–லாகூர் இடையே பஸ் போக்குவரத்தை தொடங்கிவைத்து, முதல் பஸ்சில் அவரே பயணம் செய்தார். அதன்பிறகு, 2004–ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த சார்க் மாநாட்டில் வாஜ்பாய் கலந்துகொண்டார்.

இடையில் மன்மோகன்சிங் இரண்டு முறை பிரதமராக இருந்தபோதும், அவர் பாகிஸ்தானுக்கு சென்றதில்லை. ஆனால், அவர் ஒரு கனவை தெரிவித்தார். இந்தியாவில் அமிர்தசரஸ் நகரில் காலை உணவை உண்டுவிட்டு, மதிய சாப்பாட்டை பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் சாப்பிடவேண்டும் என்பதுதான் அந்த கனவு. அந்த கனவு அவர் காலத்தில் நிறைவேறாவிட்டாலும், அதை நரேந்திரமோடி இப்போது நிறைவேற்றிக்காட்டிவிட்டார். ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து புறப்பட்டு முதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் இறங்கி, அங்கு இந்திய நாட்டின் 974 கோடி ரூபாய் உதவியுடன் வாஜ்பாய் பெயரில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்துவைத்தார். டிசம்பர் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த பயணம் நடந்தது. அன்றுதான் வாஜ்பாய் பிறந்தநாள். முகமதுஅலி ஜின்னா பிறந்தநாள். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் பிறந்தநாள். காபூலில் இருந்து நரேந்திரமோடி, நவாஸ்ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு டெலிபோனில் வாழ்த்து சொன்னார். உடனே நவாஸ்ஷெரீப் ‘‘நான் இப்போது லாகூரில் இல்லை. ராவல்பிண்டியில் என் பேத்தி கல்யாணத்துக்காக வந்திருக்கிறேன். நீங்கள் காபூலில் இருந்து எங்கள் நாட்டுக்கு மேலே பறந்துதானே டெல்லிக்கு செல்ல வேண்டும். நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்துவிட்டு செல்லலாமே’’ என்று அழைப்பு விடுத்தவுடன், சற்றும் தாமதிக்காமல் அந்த அழைப்பை ஏற்ற நரேந்திரமோடி உடனடியாக பாகிஸ்தான் சென்றார்.

ஒரு இந்திய பிரதமர் பாகிஸ்தான் செல்வதென்றால் எவ்வளவோ முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும். ஆனால், அந்த மரபுகளை எல்லாம் மீறி உடனடியாக பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற நவாஸ்ஷெரீப், ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் அவரை அழைத்துக்கொண்டு ராவல்பிண்டி சென்றார். அங்கே நவாஸ்ஷெரீப்பின் தாயாரையும், மணப்பெண் உள்பட அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து ஒரு நெருங்கிய நண்பர் குடும்பத்தில் உரையாடுவதுபோல உரையாடி, இந்திய ஆடைகளை பரிசாக வழங்கிவிட்டு, இரவு 7.30 மணிக்கு டெல்லி திரும்பியிருக்கிறார்.

மோடியின் இந்த பயணத்தை நல்லெண்ண பயணம் என்று பாகிஸ்தான் வர்ணித்து இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா கூட இந்த பயணத்தை பெரிதும் வரவேற்று இருக்கிறது. இருநாடுகளுக்கும் நல்லுறவு நிலவினால் இந்த பிராந்தியத்துக்கே பெரிதும் பயன் அளிக்கும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மோடியின் இந்த சுற்றுப்பயணம் நிச்சயமாக இருநாட்டின் நல்லுறவுக்கு வாசலைத்திறக்கும் நட்பு பயணம்தான். இந்த நட்பு பயணத்தின் உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அடுத்தகட்டமாக இருநாட்டு வெளிவிவகாரத்துறை செயலாளர்கள் கூட்டம் மனக்கசப்புகளை மாற்றும் மாமருந்தாக அமையவேண்டும். விரைவில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு வரவேண்டும் என்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024