Monday, December 7, 2015

மாற வேண்டும் மனோபாவம்

Dinamani


By நா. குருசாமி

First Published : 05 December 2015 02:00 AM IST


பூகம்பம், நிலச்சரிவு, ஆழிப்பேரலை, மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போதும், அதன் பிறகு மேற்கொள்ளப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளின் போதும் மனதை நெகிழச் செய்யும் சம்பவங்களுடன், பாதிக்கப்பட்ட மக்களின் கோபதாபங்களும், எதிர்மறையான கருத்துகளும் வெளிப்படும். சென்னை மாநகரமும், அதன் புறநகர்ப் பகுதிகளும் தற்போது எதிர்கொண்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளின் போதும் இத்தகைய நேர்மறையான, எதிர்மறையான போக்குகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழக தீயணைப்புத் துறையினர், போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் முப்படையினர் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் மனம்திறந்து பாராட்ட வேண்டும்.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டு, உரிய நிவாரணம் கிடைத்திட உதவியவர்கள் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அவர்களது புகார்கள்தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, இந்த வெள்ளப் பாதிப்பை பயன்படுத்தி இயன்றவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவது போல உள்ளன.
பொதுவாக, எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதன்
விலை உயரத்தான் செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்காக, இயற்கைப் பேரிடரின் விளைவுகளை எதிர்கொண்டுள்ள மக்களிடமிருந்து பிடுங்கிய வரை லாபம் என்ற போக்குடன் செயல்படுவது மனிதாபிமானமற்றது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை, அவற்றின் நிர்ணய விலையைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக விற்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. முக்கியப் பண்டிகைகளின் போது பயணிகளின் கூட்டம் அதிகமிருந்தால், வழக்கத்தைவிட மிக அதிகக் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களைப் போல, வியாபாரிகளும், வர்த்தகர்களும், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களும் செயல்படுவது சரியல்ல.
பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவாவிடினும், அவர்களது மனவேதனையை மேலும் அதிகரிக்கும் விதத்தில் செயல்படாமல் இருப்பதே பேருதவியாக இருக்கும் என்பதை இத்தகையோர் உணர வேண்டும்.
இத்தகைய வியாபாரிகள், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதுபோல சில தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் செயற்கைச் சுவாசக் கருவிகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். மின்சாரம் தடைபட்டு, ஜெனரேட்டரையும் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டவுடனேயே அந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற தனியார் மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப் போக்கை வெறுமனே கண்டிப்பதோடு நின்றுவிடாமல், அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தொடர்ந்து மூன்று நாள்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் தடை காரணமாக செல்லிடப்பேசி கோபுரங்கள் செயலிழந்துவிட்டதால், உதவிக்கு மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். செல்லிடப்பேசி கோபுரங்களை ஜெனரேட்டர் மூலம் இயக்குவதற்கு டீசல் தேவை. ஆனால், எரிபொருள் சேவை வழங்கும்
மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சென்னையில் உள்ள தங்களது விநியோகஸ்தர்களுக்கு தேவையான அளவு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய எண்ணெய் நிறுவனங்களின் இத்தகையப் போக்கும் கண்டிக்கத்தக்கதாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தப் பணியில் அரசுடன் கைகோத்து செயல்பட முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் இன்னல்களைக் கொடுக்காமல் இருந்தாலே போதும் என்பதை மனதில் கொண்டு, வியாபாரிகளும், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்.
இந்த உலகில் நாம் சேர்க்கும் பணமும், பொருளும் நாம் மறையும் போது நம்முடன் வராது. எனவே, எப்படியாவது அதிகளவில் பணம் சேர்க்க வேண்டும் என நினைப்போர், தங்களது இந்த மனோபாவத்தை மாற்றிக் கொண்டால், அது அவர்களுக்கும், பிற மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024