Tuesday, December 1, 2015

எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு

Published: November 24, 2015 09:09 ISTUpdated: November 24, 2015 09:09 IST


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளியாகிவிட்டன. இப்போது பதவியில் இருப்போருக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் பல நன்மைகளை இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. ஊதியம், படிகள், ஓய்வூதியம் ஆகியவற்றில் 23.55% உயர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆறாவது ஊதியக்குழு 40% உயர்வைப் பரிந்துரைத்திருந்ததை ஒப்பிடும்போது இது குறைவு என்பதுடன் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் இப்போதைய பொருளாதார நிலைமை வலுவற்று இருப்பதுடன் நிதி நிலையும் நெருக்கடியில் இருப்பதை அனைத்துத் தரப்பினருமே அறிவர். அடிப்படை ஊதியத்தில் 16%, படிகளில் 63%, ஓய்வூதியத்தில் 24% என்று உயர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருப்போர் 47 லட்சம், ஓய்வு பெற்றோர் 52 லட்சம் என்பதால் இதற்காகும் செலவு மத்திய அரசுக்கு நிச்சயம் ஒரு சுமையாகத்தான் இருக்கும். இந்தப் பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டால் மொத்த உற்பத்தி மதிப்பில் 0.65% அளவுக்குச் செலவு அதிகரிக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டால் அதை அப்படியே மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்குவது சில மாநிலங்களில் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநிலங்களுக்கும் இதனால் செலவு அதிகரிக்கும். பொதுவாக, இப்போது சரக்குகளின் விலை குறைவாக இருப்பதால் இந்த ஊதிய உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயரக்கூடிய ஆபத்து இல்லை. மத்திய அரசுக்கு இந்தப் பரிந்துரைகளால் சுமார் ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். ஆனால், இந்தச் செலவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் உற்பத்தி, விற்பனை, நுகர்வு என்ற மூன்றும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பையும் பெருக்கும். அதே சமயம், விலைவாசி சற்றே உயர்ந்தால் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டாகக் கடைப்பிடித்த பணவீக்கக் கட்டுப்பாடு என்ற பத்தியம் அனைத்தும் பலனில்லாமல் போய்விடும். ஒவ்வொருமுறையும் ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோதும், சில்லறை விற்பனை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு பணவீக்கம் உயர்ந்ததே நம்முடைய அனுபவம். எனவே, அது மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்துக்கும் அதிகபட்ச ஊதியத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறைக்க வேண்டும். ஏகப்பட்ட ஊதிய நிலைகள் இருக்கக் கூடாது என்று ஊழியர்கள் கோரியிருந்தனர். கிரேடு பே, பே பேண்ட் ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்று ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது. பழைய ஊதிய விகிதங்களிலிருந்து புதிய ஊதிய விகிதங்களுக்கு மாறுவதற்கு ஊதியத்தை எப்படி உயர்த்திக் கணக்கிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சரியாகக் கணக்கிடாவிட்டால் இப்போதுள்ள ஊதிய விகித வேறுபாடுகள் அப்படியே தொடரும். பழைய ஓய்வூதியதாரர்களுக்கும் நடப்பு ஓய்வூதியதாரர்களுக்குமான ஓய்வூதியத்தைச் சீரமைக்க எத்தனை ஆண்டுகள் பணியில் இருந்தார், எத்தனை ஊதிய உயர்வுகளைப் பெற்றார் என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கக் கூறியிருக்கிறது. இதெல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுப் பரிந்துரைகள் வரும்போதும் மக்கள் எழுப்பும் கேள்விகள் இப்போதும் தொடர்கின்றன. சமூகத்தின் ஏனைய தரப்பினருக்குமான ஊதிய உயர்விலும் அரசு எப்போது இப்படி அக்கறை காட்டத் தொடங்கும்?

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...