Wednesday, December 23, 2015

அன்பாசிரியர் 10 - கிருஷ்ணவேணி: அரசுப் பள்ளிக்காக கடன் வாங்கி கல்வி புகட்டும் ஆசிரியை!


Return to frontpage




க.சே. ரமணி பிரபா தேவி

ஆசிரியர் ஒரு நல்ல மாணவரை உருவாக்குகிறார்; அவர் நூறு மாணவர்களை உருவாக்குகிறார்.

1986-ம் ஆண்டு. அரசுப் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று, மேலே படிக்காமல் வீட்டில் இருந்தார் மாணவி கிருஷ்ணவேணி. அப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அவரின் வீட்டுக்கு வந்தார் ஓர் ஆசிரியர். 'இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று ஏன் படிக்கவில்லை?' என்று கேட்க, வசதியில்லை என்றார் கிருஷ்ணவேணி. உடனே படிப்பதற்கு பணம் கட்டி, உடைகள் வாங்கிக்கொடுத்து, ஊக்கமும் அளித்தார் அந்த ஆசிரியர்.

இப்போது அந்த மாணவி, நல்லாசிரியர் விருது, மாநில அளவில் சிறந்த நடுநிலைப்பள்ளி விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சிறந்த சாதனை ஆசிரியர் விருது, தனியார் மெட்ரிக் பள்ளியின் அப்துல் கலாம் நினைவு சாதனை ஆசிரியர் விருது உள்ளிட்டவைகளுக்குச் சொந்தக்காரர். பள்ளி தலைமையாசிரியர், இலக்கிய ஆர்வலர், பேச்சாளர் என்று பல முகங்கள் கொண்டவர்.

எப்படி இந்தப் பயணம் சாத்தியமானது? - கிருஷ்ணவேணியே சொல்கிறார்.

"கணக்கெடுப்புக்கு வந்த ஆசிரியர், பலன் எதையும் எதிர்பார்க்காமல் என்னைப் படிக்க வைத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்தாலே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் ஆகலாம் என்ற நிலை இருந்தது. அவரால் மட்டும்தான் இன்று நான் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். அவர் என்னை உருவாக்கினார்; நான் மேலும் சிலரை உருவாக்குகிறேன்.

எங்களின் சின்னமுத்தூர் பள்ளி, இட வசதி இல்லாத காரணத்தால் அரை கி.மீ. இடைவெளிக்குப் பிரிந்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என தனித்தனியாக இருக்கிறது. இதனால் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அரசிடம் என்ன கேட்டாலும் இரண்டிரண்டாகக் கேட்டுப் பெற வேண்டும். முதலிரு வருடங்களில் கோயில் வளாகம், மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பொது இடங்களில் வகுப்புகள் நடந்திருக்கின்றன. ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் நடந்த காலமும் உண்டு.

இப்போது, வகுப்பறை முழுக்கப் படங்களால் நிரப்பியிருக்கிறோம். எங்கள் மாணவன் வீட்டில் எப்போதும் கீழேதான் உட்காருகிறான் என்பதால் பள்ளியில் யாரையும் தரையில் உட்கார அனுமதிப்பதில்லை. பெஞ்சுகள் வாங்கியிருக்கிறோம். ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு முழுக்கவும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டைல்ஸ் ஒட்டியிருக்கிறோம்.

பள்ளிக்காக லோன் வாங்கியவர்

இவை அனைத்துக்கும், அதிக நிதி தேவையாக இருந்தது. நன்கொடையாளர்கள் சிலர், தருவதாகக் கூறியிருந்த தொகையைக் கடைசி நேரத்தில் தரவில்லை. மூன்று லட்ச ரூபாய் பற்றாக்குறை காரணமாக வேலை பாதியிலேயே நின்றது. அதனால் வங்கி ஒன்றில் லோன் வாங்கி, கட்டிடத்தைக் கட்டி முடித்தோம். இப்போது தவணை முறையாக மாதாமாதம் 8,000 ரூபாய் கட்டி வருகிறேன். முத்தூரை அடுத்து, உள்ளே 1 1/2 கி.மீ. தாண்டி சின்னமுத்தூரில் இரண்டு பெரிய தனியார் பள்ளிகளுக்கு இடையில் கம்பீரமாக நிற்கிறது எங்கள் அரசுப்பள்ளி.

குஜராத்தில் ஆட்சியராக இருக்கும் நண்பர் மூலமாக, அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஸ்கைப்பில் உரையாடினோம். மொழி ஒரு தடையாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக அவர்களை அணுகினோம். உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகியவற்றில் பின் தங்கியிருக்கிறார்கள் குஜராத் குழந்தைகள்.

ஆரம்பகாலத்துக்கும், இப்போதைக்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?

ஆரம்பத்தில் கையைப் பிடித்து, எழுத, படிக்கக் கற்றுக் கொடுப்பதே கல்வி என்று நினைத்தேன். இப்போதோ ஒரு வார்த்தையை சொல்லித்தர நூறு முறைகள் இருக்கின்றன. தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். ஒன்று குறும்பு செய்தால், மற்றொன்று அழும், இன்னொன்று தூங்கும். இப்போது குழந்தைகள் அனைத்தையும் அரவணைக்கும் பாங்கு வந்திருப்பதாக உணர்கிறேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யாராக இருந்தாலும், மூன்று மாதங்களில் அவருக்கு தமிழ் எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்க என்னால் முடியும்.



எங்கள் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களும் கட்டாயம் ஆங்கிலம் எழுத / பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் எங்களின் ஒவ்வொரு மாணவனுக்கும், குறைந்தபட்சம் ஐந்நூறு ஆங்கிலச் சொற்கள் தெரியும். முதலில் வினைச்சொற்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கிறோம். ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் கதை, கவிதைகள் எழுத வேண்டும். இது எழுத்துத் திறனை மேம்படுத்துவதோடு, கற்பனையையும் சேர்த்து வளர்க்கிறது. இதுவரைக்கும் தொகுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள், மலராக வெளியிடப்படக் காத்து நிற்கின்றன.

அருவருப்புக்கு இடமில்லை

உங்கள் பள்ளியில் மட்டும் எப்படி எல்லா ஆசிரியர்களுமே உதவுகிறார்கள் என்று பலர் கேட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்குமே கவுன்சலிங்தான் காரணம். மாதமொரு முறை எங்கள் ஆசிரியர்களிடம் மாணவர்கள் குறித்துப் பேசுவேன். அப்போது, நம் குழந்தைக்கும், அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கக்கூடாது என்று கூறுவது வழக்கம். 'நம் மகன்/ மகள் என்றால் வேலை செய்ய வைப்போமா, இயலாமையால்தான் பெரும்பாலான ஏழை குழந்தைகள் அரசுப்பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை வேலை செய்யச்சொல்வது முறையா' என்று யோசிக்கச் சொன்னேன்.

'நம் குழந்தைகளிடம் அருவருப்பு வருவதில்லையே, பிறகெப்படி மற்ற குழந்தைகளிடம் மட்டும் அந்த எண்ணம் வருகிறது' என்று அவர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இப்போது துப்புரவுப் பணியாளர்களே தேவைப்படாமல் ஆசிரியர்களே எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறார்கள்.

மாதமொரு முறை பெற்றோர் சந்திப்பும் இங்கே உண்டு. அவர்களிடம் முறையாக எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறோம். இதனால் மாணவர்களின் சுத்தமான உடை, இரட்டை ஜடை, ஒழுங்காக நகம் வெட்டுவது உள்ளிட்டவைகளுக்கு பெற்றோரே பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

பாடம் சொன்ன மாணவர்?

'எல்லா மாணவர்களையும் பாரபட்சமில்லாமல் ஒன்றுபோல் நடத்த வேண்டும்' என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தது ஒரு மாணவன்தான். பொதுவாக நன்றாக படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்களுக்கு ஒரு பிரியம் இருக்கும். படிக்காதவர்கள் மீது அதட்டல், மிரட்டல் தொனி இருக்கும். ஒரு முறை ஆசிரியர்களைப் பற்றிய கருத்துகளை எழுதிக் கொடுக்குமாறு மாணவர்களிடத்தில் கேட்டிருந்தேன்.

அதில் ஒரு மாணவன், 'டீச்சர், ஒரு தடவையாவது நல்லா படிச்சு, உங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும்; நீங்க என்கிட்ட சிரிச்சுப் பேசணும்னு ஆசைப்பட்டேன்; ஆனா கடைசிவரை என்னால அதைப் பண்ண முடியல!' என்று எழுதியிருந்தான். எனக்கு சுரீரென்றது. அதற்குப் பிறகு அவனிடம் சகஜமாகப் பேசினாலும், நான் இதைப் படிச்சு வாங்கல டீச்சர் என்று படித்து முடித்துப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருந்தான். அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் எல்லா மாணவர்களுடனும் சமமாகப் பழக ஆரம்பித்தேன்.

எதிர்காலத் திட்டங்கள் பற்றி...

தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும், எங்கள் பள்ளியின் பெயர் பரவ வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறேன். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சீட் வாங்க வரிசையில் நிற்பது போல, அரசுப் பள்ளிகளிலும் வரிசையில் நிற்கும் நிலை வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை!''.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024