By ஆசிரியர்
First Published : 15 December 2015 01:05 AM IST
உச்சநீதிமன்றத்தின் 43-ஆவது தலைமை நீதிபதியாக தீரத் சிங் தாக்கூர் பதவி ஏற்றிருக்கிறார். கடந்த 2009 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி தாக்கூர் 2017 ஜனவரி 4-ஆம் தேதி இந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் தீரத் சிங் தாக்கூருக்கு அரசியல் பின்னணியொன்று உண்டு. இவரது தந்தை தேவிதாஸ் தாக்கூர், காஷ்மீரத்தில் பிரபலமான வழக்குரைஞராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மாநில அரசியலிலும் மிகவும் செல்வாக்குப் படைத்தவராகத் திகழ்ந்தவர். ஷேக் அப்துல்லா அமைச்சரவையில் தேவிதாஸ் தாக்கூர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிதியமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் சில காலம் பதவி வகித்தவர்.
தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டவுடன் நீதிபதி தீரத் சிங் தாக்கூர் வெளிப்படுத்தி இருக்கும் கருத்துகள் வரவேற்புக்குரியவை. "சகிப்புத் தன்மை இல்லாத நிலைமை' என்கிற பிரச்னை எதிர்க்கட்சிகளாலும், சில அறிவுஜீவிகளாலும் எழுப்பப்பட்டு, இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் வாழ்வது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.' சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் காலம், நீதித் துறையில் சுதந்திரம் பாதுகாக்கப்படும் காலம், அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் உறுதி செய்யப்படும் நிலைமை தொடரும் காலம் அப்படியொரு அச்சம் யாருக்கும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை, என்பதுதான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் வெளியிட்டிருக்கும் கருத்தின் சாராம்சம்.
"பலதரப்பட்ட நம்பிக்கைகளும் கலாசாரங்களும் உள்ள சமுதாயத்தின் அடிநாதமாக சகிப்புத்தன்மையும், ஒருவரை மற்றவர் மதிக்கும் பண்பும் காணப்படுவது உறுதி' என்று எடுத்துரைத்திருக்கும் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் கூறியிருக்கும் இன்னொரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசியல் சட்டப் பாதுகாப்பு என்பது நமது குடிமக்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் பிற நாட்டினருக்கும் பொருந்தும் என்பதுதான் அது.
பொதுவாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டிப் பேசும் நீதித் துறையின் அடிப்படைப் பிரச்னை பற்றி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எதுவுமே பேசாதது வியப்பை ஏற்படுத்துகிறது. இவருக்கு முன்னால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர்கள் அனைவரும் தங்களது முதல் சவால் என்று அறிவித்துப் பணியைத் தொடங்கி, தொடங்கிய இடத்திலேயே விட்டுவிட்டு ஓய்வுபெற்ற அந்தப் பிரச்னை, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.
நீதிபதி ஏ.எஸ். ஆனந்தில் தொடங்கிக் கடந்த கால் நூற்றாண்டு காலமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த 14 நீதிபதிகளும், பதவி ஏற்றுக் கொண்டவுடன், தங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்தான் என்று தவறாமல் தெரிவித்திருக்கிறார்கள்.
நிரம்பி வழியும் இந்திய சிறைச்சாலைகளில் அடைந்து கிடப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அநேகமாக நிரபராதிகளாக இருக்கக் கூடும். செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் பிணையில் வெளியே வந்து விடுகிறார்கள். சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி விடுதலையும் பெற்று விடுகிறார்கள். ஆனால், ஏழைகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவிக்கும் அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவு மறுக்கப்பட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகளாகத் தொடர்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் காணப்படும் தகவலின் அடிப்படையில் 2009 முதல் 2013 வரையிலான ஐந்தாண்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் உண்மை, நீதித் துறையில் அனுமதிக்கப்பட்ட அளவிலான நீதிபதிகள் இல்லை என்பதுதான். நீதித் துறையின் அனைத்து நீதிபதி நியமனங்களும் முறையாக நிரப்பப்பட்டால், தேங்கிக் கிடக்கும் வழக்குகள் கணிசமாகக் குறைந்துவிடும். அதைச் செய்வதில் ஏன் தயக்கமும் சுணக்கமும் என்று தெரியவில்லை.
2009-இல் தேங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கை 3.03 கோடி. 2013 கடைசியில் இதுவே 3.17 கோடியாக அதிகரித்திருந்தது. அத்தனை நீதிபதி நியமனங்களும் செய்யப்பட்டு, முறையாகவும், விரைவாகவும் வழக்குகள் விசாரிக்கப்பட்டிருந்தால் தேங்கி இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 1.12 கோடியாக மட்டுமே இருந்திருக்கும். நீதிபதிகள் ஓய்வு பெறும் காலம் முன்கூட்டியே தெரியும் என்கிற நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் ஏன் நீதித் துறை ஈடுபடுவதில்லை என்பதுதான் கேள்வி.
உச்சநீதிமன்றத்தில் 66,349 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 45,89,920 வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2,75,66,425 வழக்குகளும் ஆக மொத்தம் 3,22,22,694 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்கிறது உச்சநீதிமன்ற இணையதளப் புள்ளிவிவரம். 2017 ஜனவரி மாதம் தீரத் சிங் தாக்கூர் பதவி ஓய்வு பெறும்போது இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருதால் அதுதான் இவரது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இவருக்கு முன்னால் பதவி வகித்தவர்கள் சொன்னார்கள், செய்யவில்லை. தீரத் சிங் தாக்கூர் சொல்லவில்லை. அதனால், செய்கிறாரா என்று பார்ப்போம்!
No comments:
Post a Comment