Sunday, December 6, 2015

வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள்


சென்னை; முன்னாள் முதல்வர், அமரர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த வீடு வெள்ளத்தில் சிக்கி, அவர் சேகரித்து வைத்திருந்த பரிசுப் பொருட்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியிருக்கிறது. கனமழையால் பாதிக்காதவர் எவருமில்லை என்ற அளவில் மழையின் பாதிப்பு தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது. சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. 

இந்நிலையில் சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் இல்லமும் மழை நீரால் சூழப்பட்டது. முன்பகுதியில் எம்.ஜி.ஆரின் உறவினர்களும் பின்புறம் உள்ள கட்டிடத்தில் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியும் இயங்கிவருகிறது.

மழை நீர் சூழ்ந்ததால் காது கேளாத பள்ளியில் படித்து வரும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 2–வது மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர். கடந்த சில தினங்களாக தத்தளித்த அவர்களை மீனவர்கள் குழு படகுடன் சென்று மீட்டது.

இந்நிலையில் நேற்று அங்கு வெள்ளம் நீர் வடிய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் வசித்து வந்த எம்.ஜி.ஆரின் உறவினர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீண்டும் இல்லம் திரும்பினர். இதையடுத்து உடனடியாக எம்.ஜி.ஆர். இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கியது.
அப்போது தரைதளத்தில் எம்.ஜி.ஆர். தம் காலத்தில் பயன்படுத்திய கிராமபோன், பரிசுப்பொருட்கள், எம்.ஜி.ஆர். தொடர்பான ஆவணங்கள், எம்.ஜி.ஆர்.–ஜானகி அம்மாள் பயன்படுத்திய பொருட்கள் பல சேதமடைந்தும் பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டின் முன்பகுதியும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் எம்.ஜி.ஆர் அபிமானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வெள்ளத்தில் மூழ்கியது இது முதன்முறையல்ல. கடந்த 82 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அவரது தோட்டம் மூழ்கியது. 

அப்போது எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகி அம்மையாரும் மவுண்ட்ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தற்காலிகமாக சிலநாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024