Friday, December 4, 2015

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை!

Dinamani


By தி. இராசகோபாலன்

First Published : 03 December 2015 01:58 AM IST


அடாது பெய்த மழைநீராலும், விடாது பெய்த மழைநீராலும் நிரம்பிய ஏரி, குளங்களின் விளிம்புகளில் தளும்பிய தண்ணீர், இரண்டொரு நாள்களில் வடிந்துவிடும். ஆனால், அல்லற்பட்டு ஆற்றாது அழுத ஏழை எளியவர்களின் கண்ணீர், எத்தனை நாள் ஆனாலும் வடியாது. இன்றைக்கு மனிதர்களுக்கு மீன் விருந்து நடக்கின்றது, ஒருநாள் மீன்களுக்கு மனித விருந்து நடக்கும் எனச் சொன்ன வி.எஸ். காண்டேகரின் வாக்குப் பலிதமாயிற்றே!
தண்ணீரில் மூழ்கிய ஒருவனை, அத்தண்ணீர் ஒரே முழுக்கில் சாகடித்துவிடாதாம்! அவன் தப்பிப்பதற்கு அவனை மூன்று முறை மேலே கொண்டு வருமாம். அவன் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், கடைசியாகத்தான் சாகடிக்குமாம்!
மழை நம்மை மூன்று முறையன்று, முந்நூறு முறை, மூவாயிரம் முறை எச்சரித்து விட்டதே... நாம்தாம் பாடம் கற்கவில்லை.
பல்லவர்கள் காலத்தில் உத்திரமேரூரில் வயிரமோகன் என்ற குறுநில மன்னன் ஒரு மிகப்பெரிய ஏரியை வெட்டினான். அது வயிரமேகத் தடாகம் என வழங்கப்படுகிறது. அவ்வேரியின் அகலம் போதாதென்று, கி.பி. 802-இல் நந்திவர்மன் மகன் தந்திவர்மன் மேலும் அகலப்படுத்தினான். அவன் பின்னர் வந்த கம்பவர்மன், (கி.பி.868 - 900) கடல்போல் நீர் கொள்ளுமாறும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்காகவும், வயிரமேக தடாகத்தின் கரைகளை மேலும் உயர்த்தினான். பிற்காலப் பல்லவர் காலத்து உத்திரமேரூர்க் கல்வெட்டுக்கள் இருபத்தைந்தில், ஆறு கல்வெட்டுக்கள் அந்த ஏரியை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று சொல்கின்றன.
அவ்வேரியிலிருந்து பாசனத்திற்காக ஏழு வாய்க்கால்கள் வெட்டப்பட்டனவாம்.
1) கணபதி வாய்க்கால், 2) சுப்பிரமண்யர் வாய்க்கால், 3) ஸ்ரீதேவி வாய்க்கால், 4) சரசுவதி வாய்க்கால், 5) பார்வதி வாய்க்கால், 6) பகவதி வாய்க்கால், 7) பரமேசுவரன் வாய்க்கால் என்பன ஆகும். ஏரிகுளங்களைப் பராமரிப்பதற்கு ஏரி ஆயம் என ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆயத்துப் பெருமக்கள் தாம், எந்த நேரத்தில், எந்த வாய்க்காலைத் திறந்துவிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். சங்கக் காலத்தில் ஏரிகுளங்களைப் பராமரிப்பது, மன்னன் பணியாக இருந்தது.
பல்லவர் காலத்தில் மக்கள் பணியாகவும் மாறிற்று. அந்த ஏரியைப் பாதுகாப்பதற்கு அவ்வூர் மக்கள் பூமி தானம், சொர்ண தானம் (தங்கம்) போன்ற ஏழு தானங்களைச் செய்தார்களாம் (தகவல் டாக்டர் இரா. நாகசாமி, உத்திரமேரூர், பக்.35-38). கண்மாய்களைப் பாதுகாத்தலும், கலிங்குகளைக் கண்காணித்தலும் ஏரி ஆயத்தின் பணிகளாம். வாய்க்கால் வழி தண்ணீரைப் பெறுகின்ற விவசாயிகள் வரிகட்ட வேண்டும். தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தினால் தண்டனை உண்டு. இப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்தபோது, மறுபடியும் வெள்ளம் எப்படிப் பெருக்கெடுக்கும்?
ஒவ்வோர் ஆண்டும் ஏரியை ஆழப்படுத்துவார்கள். தோண்டிய மண்ணை எடுத்து, ஏரியின் கரைகளை மேலும் பலப்படுத்துவார்கள்.
ஏரிக்கரையை எப்போதும் வலிமையுடையதாக வைத்திருப்பதற்கு அக்கால மக்கள் செலுத்திய அக்கறை, அர்ப்பணிப்பைப் படித்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஏரிக்கரையைச் சுற்றி ஒரு கோல் அளவுக்கு நிலம் வாங்கி, அதனைத் தானமாகக் கொடுப்பார்கள். அதற்குப் பஹிர் பூமி (வெளிநிலம்) எனப் பெயர். இந்நிலத்தில் பயிர் செய்வதோ, வண்டிகளை ஓட்டுவதோ கூடாது.
கரையைச் சுற்றி வலுவான நிலம் இருந்தால்தான், கரை உடைந்து, உடைப்பு எடுக்காமல் இருக்குமாம். கரைகளைக் கெட்டிப்படுத்துவதற்காக அமைந்திருக்கும் குறுங்காடுகளை, புதர்களை யாரும் வெட்டினால் ஐந்து பவுன் தண்டனையாம். (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி ஆறு, எண்கள் 370-375).
வெள்ளம் வராமல் பாதுகாப்பதற்கும், வருகின்ற வெள்ளத்தை மடைமாற்றம் செய்வதற்கும் அமைக்கப்பட்ட மக்கள் தாம் அக்காலத்தில் வெள்ளாளர் என அழைக்கப்பட்டார்களாம் (தகவல்: தமிழ்நாட்டு வரலாறு, வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை, ப.83).
கூர்த்த அறிவுடைய அக்காலத்து மக்கள் குளங்கள், ஆறுகள் இல்லாத இடங்களில் தாம் ஏரிகளை வெட்டியிருக்கிறார்கள். கங்கைக்கரைவரை வென்ற இராசேந்திரசோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் எனும் ஏரியை வெட்டியது அதன் பொருட்டாக இருக்கலாம்.
தென் ஆற்காடு மாவட்டத்தில் திருக்காஞ்சி எனும் ஓர் ஏரி புயலால் உடைபட்டபோது, அதனை உள்ளூர் அரையன் என்ற தனிமனிதர், அந்த ஏரியின் கரையை அடைத்தாராம். ஏரிக்கரையின் இரண்டு பக்கங்களில் கல் அடுக்கி, கற்படைபோட்டுச் சேதம் விளையாதபடி கரை வலுப்படுத்தப்பட்டதாம். திருக்கச்சூருக்கு அருகே ஓர் ஏரி விரிவுபடுத்தப்பட்டது (தகவல்: கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சோழர்கள், பக்.760 - 761).
குலோத்துங்கச் சோழன் மகன் விக்கிரம சோழன் (கி.பி.125) காலத்திலும் இப்படியோர் ஏரியுடைப்பும் பெரு வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் கோவிலுக்குள் அடைக்கலம் அடைந்ததைக் கோவிலடிக் கல்வெட்டு ஒன்று, இவ்வூர்... மாதேவர் கோயிலில் திருமண்டபத்தில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து, பண்ணின பரிசாவது, காலம் பொல்லாததாய் நம்மூர் அழிந்து குடியோடிப் போய்க்கிடந்தமை என்பதாகத் தெரிவிக்கின்றது (தொகுதி: ஏழு, எண்.496).
அந்நேரத்தில் அரசனும், செல்வம் மிக்கவர்களும், தம்பெருங்கொடையால் மக்களை இயன்றவரையில் காப்பாற்றியதோடு, கோயிலதிகாரிகள் அன்னார்க்குக் கடன் கொடுத்து உதவி புரிந்ததாகவும் டி.வி. சதாசிவப்பண்டாரத்தார் தெரிவிக்கிறார் (சோழர் சரித்திரம், பக்.75-76).
இன்றைக்கு மக்கள் படுகின்றபாடு அன்றைக்கும் இருந்திருக்கிறது. ஆனால், அன்றைக்கு இருந்த மக்களுக்கு, அத்துயரச் சம்பவங்கள் மீண்டும் வரக்கூடாது என்பதிலே கவனமும் இருந்திருக்கின்றது.
ஏரிகளைக் காப்பதில் மன்னர்களுக்கு - மக்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி மகேசனுக்கும் இருந்திருக்கிறது. மதுராந்தகம் ஏரியைப் பெருமாள் காக்கின்றார் என்ற தொன்மத்திலே வரலாறும் இருப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது. 1798-ஆம் ஆண்டு மதுராந்தகம் ஏரி வெள்ளப்பெருக்கால் உடைப்பெடுத்து, அதுவொரு தீவாகவே ஆகிவிட்ட சூழ்நிலை.
மதுராந்தகம் ஏரி 13 சதுர மைல் பரப்பளவும் (34 சதுர கி.மீ. பரப்பளவு), 21 அடி ஆழமும் கொண்டது. அத்தகைய ஏரி இடிபாடுகளுக்கு உள்ளாகியதைக் கேட்ட அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் கர்னல் லயனல் பிளேஷ் (1795 - 1799) பேரதிர்ச்சிக்கு உள்ளாகி, ஏரிக்கரையிலேயே முகாமடித்துவிட்டார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்ற லயனல் பிளேஷ், பக்கத்தில் இராமர் கோயிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சலவைக் கற்களைக் கவனித்துவிட்டு, குருக்களாரை அழைத்து, அவற்றைப் பயன்படுத்தி, உடைப்புகளை அடைத்துவிடலாம் எனும் யோசனையைத் தெரிவித்தார்.
ஆங்கிலேயன், அவர்களைக் கேட்கவேண்டுமென்ற அவசியம் இல்லை அதனை எடுத்துக் கொள்வது, அவருடைய அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான்.
என்றாலும், நாணயமுடைய அந்த அதிகாரி பூசகர்களின் விருப்பத்தைக் கேட்டார். குருக்கள், அக்கற்கள் ஜானகிவல்லி தாயார் சன்னிதி கட்டுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். அதிகாரி மாற்று யோசனை கேட்டபொழுது, நாம் எல்லாம் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினால் ஏரியைக் காப்பாற்றிவிடலாம் எனப் பூசகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
உடன் அந்த அதிகாரியும் சேர்ந்து பிரார்த்தனை நடத்தி முடித்தவுடன், அந்த அதிகாரியின் கண்களுக்கு மட்டும், தொலைவில் இராம - இலக்குவனர் மட்டும் வில் அம்புகளோடு ஏரிக்கரையில் நிற்பதாகத் தென்பட்டதாம். ஏரியின் உடைப்புகளும் அடைப்பட்டனவாம்.
இச்செய்தியை அந்த அதிகாரியே கல்வெட்டில் செதுக்கி, ஆலய வளாகத்திற்குள் பதித்து வைத்திருக்கிறாராம் (இவரது சிறிய சிலை ஆலய வளாகத்திற்குள் இருக்கிறது). ஆங்கிலேயர்கள் மனிதர்களாக இருக்கும்போதுதான் சராசரியே தவிர, ஆளும் வர்க்கத்தாராக வருகின்றபொழுது நாணயமானவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
1985-ஆம் ஆண்டிலும் அதே மதுராந்தகம் ஏரியில் ஒரு பேரிடர் நேர்ந்தது. கன மான மழையால், மதுராந்தகம் ஏரியில் நாலாபக்கமும் உடைப்புக்கள் ஏற்பட்டு, மதுராந்தகம் ஒரு தீபகற்பத்திற்குள்ளேயே ஒரு தீவாகிவிட்டது. நடுத்தர மக்களும், குடிசைவாசிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். என்றாலும், அப்போதைய முதல்வர் எம்ஜி.ஆர்., நிர்வாக இயந்திரங்களைக் கடுமையாக முடுக்கி, போர்க்கால அடிப்படையில், துயரத்தில் துடித்தோரின் கண்ணீரைத் துடைத்தார்.
வாழ்க்கையில் படிப்பதற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. ஆனால், படித்தவண்ணம் நடக்கச் செய்வதற்குத்தான் பாடங்கள் இல்லை. ஓங்கி வளர்ந்த தென்னையில் ஓரடிக்கு ஓரடி தென்னையைச் சுற்றி வடுக்கள் இருக்கும். வளருகின்றபோது பழுத்த மட்டைகள், விழுவதற்கு முன்பு ஏற்படுத்திய வடுக்கள் அவை.
புதியதாக மரமேறுபவன், அந்த வடுக்களிலே கால் வைத்துத்தான் உச்சிக்குச் சென்று தேங்காயைப் பறிப்பான். சங்கப் புலவரிலிருந்து - பல்லவரைத் தொடர்ந்து - சோழர்களைக் கடந்து - ஆங்கிலேயர்கள் வரை, வடுக்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். நாம்தாம் வடுக்களிலே கால் வைக்காமல் சறுக்கிச் சறுக்கி விழுகின்றோம்.
பேரிடர்கள், காலங்கள் தோறும் நிகழுகின்றன. ஆனால், நிர்வாகம் செய்வதற்குத்தான் தகுந்த ஆள்கள் வருவதில்லை.
மழை நம்மை மூன்று முறையன்று, முந்நூறு முறை, மூவாயிரம் முறை எச்சரித்து விட்டதே... நாம்தாம் பாடம் கற்கவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024