கடந்த மே, ஜூன் மாதங்களிலிருந்து நவம்பர் முதல் வாரம் வரையும் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த சென்னை மாநகர மக்களை, நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து வெள்ளத்தில் தத்தளிக்க வைத்திருக்கிறது வடகிழக்கு பருவ மழை. வழக்கமாக வெள்ளத்தால் சூழப்படும் வேளச்சேரி, முடிச்சூர் போன்ற புறநகர் பகுதிகள் தவிர, தேனாம்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம் எனச் சென்னையின் மையப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. அண்ணா சாலையில் போக்குவரத்தைத் தடை செய்யும் அளவுக்கு வெள்ளத்தின் தீவிரத்தைச் சென்னை மக்கள் அப்போதுதான் பார்த்தார்கள். தரைத் தளத்தில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, முதல்தளம், இரண்டாம் தளத்தில் உள்ள வீடுகளில் கூட வெள்ளம் நுழைந்து, ஏராளமான மக்களை மொட்டை மாடிக்கும் வீதிகளுக்கும் விரட்டியடித்தது.
இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு வெள்ளம் மிகுதியானது எப்படி சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் திறந்து விடப்பட்ட உபரி நீர் மட்டுமே பேரழிவுக்குக் காரணமா, அடையாறு, கூவம் ஆறுகளுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வந்தது என்பன போன்ற பல கேள்விகள் இப்போது மக்களிடம் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காணச் சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்களின் நீர் நிலைகள், நில அமைவுகள் பற்றி அறிந்து கொள்வதும் மிக அவசியமாகும். இந்த 3 மாவட்டங்களில் சிறியதும், பெரியதுமாக மொத்தம் சுமார் 3 ஆயிரத்து 700 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக மதுராந்தகம், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி மற்றும் கொளவாய் ஏரிகள் உள்ளன.
காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாமல் ஏரி, காஞ்சி நகரப் பகுதியில் செல்லும் வேகவதி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் ஏரியாக உள்ளது.
மாவட்டத்தின் மையப்பகுதியில் செல்லும் பாலாறு நதி காஞ்சிபுரம், வாலா ஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகக் கல்பாக்கம் அடுத்த வாய லூர் கிராமத்தில் கடலில் கலக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாயில் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது.
திருப்போரூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கொளவாய் ஏரிக்குச் சென்று, புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கலங்கல் வழியாக நீஞ்சல் மடுவில் கலக்கிறது. பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் மணிமங்கலம் வழியாக அடையாற்றில் கலக்கிறது.
உத்திரமேரூர் ஏரியின் உபரி நீர் இரண்டு பகுதியாக வெளியேறுகிறது. இதில் ஒரு பகுதி தண்ணீர் சங்கிலி தொடராக அப்பகுதியில் உள்ள கிராம ஏரிகளை அடைந்து கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளை நிரப்பி கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் மீண்டும் கிளியாற்றில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், கடப்பேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடுவே பயணித்து ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.
இவை தவிரத் திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள், சென்னை புறநகர் பகுதிகளாகக் கருதப்படும் கேளம்பாக்கம், தையூர், கோவளம் வழியாகப் பக்கிங்காம் கால்வாயில் கலக்கின்றன. தற்போதைய தொடர் மழையில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கரைகள் பலவீனம் காரணமாக 75 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 587 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 649 ஏரிகள் என 1,236 ஏரிகள் உள்ளன.
மாவட்டப் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 337 ஏரிகள் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ளன. ஆரணி ஆற்றின் வடிநில உப கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் உள்ளன. சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 3 ஏரிகள் தவிர மற்ற ஏரிகள், மழைக்காலத்தில் சங்கிலி தொடர் ஏரிகளாக நிரம்பி உபரி நீர் கூவம், கொசஸ்தலை, ஆரணி, நந்தியாறு நதிகள் மூலம் எண்ணூர், நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் கடலில் கலக்கின்றன.
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி?
தீபாவளி பண்டிகையின்போதே கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் பிறகு நவம்பர் 13-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 326 மிமீ மழை பதிவானது. மீண்டும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் 15-ம் தேதி மட்டும் 230 மிமீ முதல் 370 மிமீ வரை மழை பதிவானது. அப்போதே இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீரை வெளியேற்றின.
இந்தச் சூழலில் நவம்பர் 30 முதல் மூன்று நாட்கள் விடாது கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி பலத்த மழை கொட்டியது. அன்றைய தினம் தாம்பரத்தில் 494 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 470 மிமீ மழை பதிவானது.
பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரி களிலிருந்து உபரி நீர் திறந்து விடப் பட்டது. குறிப்பாகச் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் துல்லியமான கணக்கீடுகள் இல்லாவிட்டாலும் கூட அடையாற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை வெள்ள நீர் சென்றதாகக் கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சம் 29 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் அடையாற்றில் 90 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் சென்றது எப்படி என்பதுதான் முக்கியமானது.
மாகாணியம் மலையம்பட்டு பகுதியில் தொடங்கும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட உபரி நீர் உடனடியாக அடையாற்றில் சேர்ந்து விடும்.
இது தவிர வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங் காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர் ஏரி, கோவூர் ஏரி, மாங்காடு, பெரியபணிச்சேரி எனப் பல ஏரிகளின் உபரி நீர் அடையாற்றுக்குதான் வந்தாக வேண்டும். காட்டாங்கொளத்தூர் ஏரி, பொத்தேரியில் உள்ள காவனூர் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் வெளியேறவும் அடையாறுதான் வழி.
மேலும் பாப்பான்கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்களும் அடையாறுக்குத்தான் நீரைக் கொண்டு வருகின்றன.
இவ்வாறு கடந்த 1-ம் தேதி பெய்த மழையின்போது ஆதனூர் ஏரி, மணிமங்கலம் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் திருநீர்மலை பகுதியில் ஒன்று சேர்ந்தபோது அடையாற்றில் மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக அமைந்தது.
அதே நேரத்தில் முழு அண்டா தண்ணீரைத் திடீரெனக் கவிழ்த்தது போலச் சென்னை மாநகர எல்லைக்குள்ளும் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. மாநகர எல்லையில் பெருகிய வெள்ள நீர் முழுவதும் அடையாற்றிலும், கூவத்திலும்தான் வடிந்தன. ஆக, செம்பரம்பாக்கத்துக்கு கிழக்கே குன்றத்தூர், அனகாபுத்தூர், மதனந்தபுரம், பொழிச்சலூர், விமான நிலையம், ராணுவப் பகுதி, மணப்பாக்கம், கே.கே.நகரை ஒட்டிய பகுதிகள், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார் எனக் கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லத் தண்ணீரின் அளவும் பெருகவே, வினாடிக்குச் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டது.
இன்னொருபுறம் சென்னை பெருநகரத்தில் சிஎம்டிஏ வரையறை எல்லைக்குள் மட்டுமே சிறியதும், பெரியதுமாக 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றில் தொடர் கனமழை காரணமாகப் பல்லாவரம், பீர்க்கன்கரணை, இரும்புலியூர், பெரும்பாக்கம், கடப்பேரி, மடிப்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, குரோம்பேட்டை வீரராகவா ஏரி, ராஜகீழ்ப்பாக்கம், கோவிலம்பாக்கம், நாராயணபுரம் எனச் 27 ஏரிகள் நிரம்பி உடைப்பு எடுத்தது. இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கேளம்பாக்கம் என சென்னையின் தென்பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது.
கூவம், கொசஸ்தலை ஆறுகள்
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் ஏரியில் தொடங்கும் கூவம் ஆறு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் 72 கிமீ பயணித்து, சென்னை-நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தற்போதைய பெருமழையின்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 45 ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரி நீர் கூவம் நதியில் பெருகியது. இதனால் கூவம் நதி செல்லும் வானகரம், நெற்குன்றம், பாடிக்குப்பம், என்எஸ்கே நகர், செனாய் நகர், சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களை ஒட்டிய சென்னை மாநகரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. கடந்த 1-ம் தேதி மட்டும் கூவம் நதியில் வினாடிக்குச் சுமார் 25 ஆயிரம் கன அடி நீர் சென்றதாகத் தகவல்.
ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகி, வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரி வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் நுழைந்து எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கும் கொசஸ்தலைஆற்றின் நீளம் சுமார் 136 கிமீ. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஏரி, ஞாயிறு ஏரி, சடையங்குப்பம் ஏரி உள்ளிட்ட 213 ஏரிகளின் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நவம்பர் 16 முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை மட்டும் 19 டிஎம்சி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே வங்காள விரிகுடாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக நவம்பர் 24-ம் தேதி வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி மழை நீர், கடலில் கலந்துள்ளது.
அதேபோல் ஆந்திர மாநிலம், நகரி மலையடிவாரத்தில் உருவாகும் ஆரணி ஆறு திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செழியம்பேடு ஆழ் ஏரி, எளாவூர் காட்டேரி உள்ளிட்ட 211 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.
ஆக ஒரே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதாலும், அதே நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே சமயத்தில் கொட்டித் தீர்த்த கனமழையாலுமே இந்த 3 மாவட்டங்களிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மேலும் எண்ணிலடங்கா நீர்நிலைகளை ஆக்கிரமித்தது, மழை நீர் வடிகால்களாகத் திகழும் பெரிய ஆறுகள், சிறிய கால்வாய்கள் தூர்வாராதது போன்றவைதான் வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிரதானக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
தற்போதைய மழை வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவது நமது கைகளில்தான் இருக்கிறது. அதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.
பேரிடர் கால வெள்ளத் தடுப்பு சாத்தியமே
பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் ஆர்.தங்கையா
சென்னை மாநகரைப் பொருத்தமட்டில் பெரும்பாலான பகுதிகள் சராசரி கடல் மட்டத்திலிருந்து 10 முதல் 30 அடி உயரத்தில் உள்ளன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லச் சரிவாக இருந்தால் மழை நீர் வேகமாகக் கடலுக்குச் சென்று விடும். ஆனால் சென்னை மாநகரின் நில அமைவு என்பது மிகப் பெரும்பாலான பகுதிகளில் சரிவாக இல்லாமல் ஒரே தளமாக உள்ளது. இதன் காரணமாக நிலத்துக்கு வந்து சேரும் மழை நீர் கடலுக்குச் சென்று சேருவதற்குப் பிற பகுதிகளை விடச் சற்றுக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும்.
இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதிகளில் மழை கனமழையாகிக் கனமழை மிகத் மிக தீவிரக் கனமழையாக மாறியதால் ஒட்டுமொத்தச் சென்னை மாநகரமே ஒரு பெரிய குளம் போல் மாறியது. அதே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியதால் வழிந்த உபரி நீர் அடையாறு, கூவம் நதிகள் வழியே சென்னைக்குள் புகுந்தது.
இது தவிர இங்குள்ள மண் வகை இன்னொரு முக்கிய காரணம். இங்கு வடசென்னை மணல் சார்ந்த பகுதியாகவும், மத்தியச் சென்னை களிமண் பூமியாகவும், தென்சென்னை பாறைப் பகுதியாகவும் உள்ளது. மணற்பாங்கான வடசென்னை பகுதியில் மழை நீர் வேகமாகத் தரைக்குள் உறிஞ்சப்படும். ஆனால் களிமண் மற்றும் பாறை நிலங்களில் மழை நீர் மிக மிக மெதுவாகவே உறிஞ்சப்படும். இதனாலேயே இந்த மண் வகைகள் சார்ந்த மத்தியச் சென்னை, தென்சென்னை பகுதிகளில் கனமழை பெய்யும்போது பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இயற்கையிலேயே உருவான இத்தகைய நில அமைவு தவிர, கட்டிடங்கள் கட்டுவதற்காக நீர்நிலைகளை அழித்த நம் மனிதர்களின் செயற்கையான செயல்பாடுகள்தான் பேரழிவு ஏற்பட முக்கியக் காரணம். தனி மனிதன் மட்டுமின்றி, நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டிய மத்திய, மாநில அரசுகளே அந்த நீர்நிலைகளை அழித்ததுதான் பெரும் சோகம். நம்மூரில் உள்ள வள்ளுவர் கோட்டம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கோயம்பேடு சந்தை போன்ற பிரதான இடங்கள் கூட நீர்நிலைகளை அழித்து உருவான இடங்கள்தான்.
எனினும், இப்போது கூட இத்தகைய இயற்கை பேரிடர்களை எளிதாக எதிர்கொள்ளலாம். அதற்கான அறிவியல் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. உதாரணமாக ஏரிகளின் உபரி நீர் நுழையும் நகரின் மேற்கு புறத்தில் சிறிய தடுப்புகளை உருவாக்கலாம். அங்கிருந்து குழாய்களைப் பதித்துக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெள்ள நீரை நகருக்கு வெளியே கொண்டு சென்று கடலில் கலக்கச் செய்யலாம்.
தேவை நீர்வழிச் சாலை
‘நவாட் டெக்’ அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ்
வறட்சி, வெள்ளம் இரண்டையுமே சமாளிக்க முடியும். அதற்கான தீர்வுதான் நீர்வழிச் சாலைத் திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள நதிகளை மட்டுமின்றி, நாட்டின் பெரும்பாலான நதிகளைப் பிணைக்கலாம்.
சமதளத்தில் அமையக் கூடிய இந்த நீர்வழிச் சாலை மூலம் ஓரிடத்தில் வெள்ளம் ஏற்பட்டால், வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு பகுதியோடு வெள்ள நீரை உடனே பகிர்ந்து கொள்ள முடியும். இந்தத் திட்டத்தை ஆந்திரத்தில் செயல்படுத்த அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகத் தீவிரமாக உள்ளார். தெலங்கானா மாநிலமும் நீர்வழிச் சாலை அமைக்க ஆர்வமாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்கெனவே விவாதித்துள்ளோம். ‘நவீன நீர்வழிச் சாலைகள் மூலம் அனைத்து ஆறுகளையும் இணைப்போம்’ என்று 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டில் நீர்வழிச் சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment