By புது தில்லி,
First Published : 30 December 2015 02:55 AM IST
இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடிப் பேராக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் குறித்து நான் முன்பு கருத்து தெரிவித்தபோது, இன்னும் 2 ஆண்டுகளில் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை 50 கோடியாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தேன்.
ஆனால், இந்தியாவில் தற்போதே 40 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கையில், அடுத்த ஆண்டே 50 கோடி பேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என்பது தெரிகிறது என்றார் அவர். "டிஜிட்டல் இந்தியா' திட்டம் குறித்து ரவிசங்கர் பிரசாத் பேசியபோது, வரும் ஆண்டுகளில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு, கல்வி, சுகாதார சேவைகளுக்கு "டிஜிட்டல் இந்தியா' திட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா? என்பது உறுதி செய்யப்படும். "டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், இணைய வழிக் கல்வி வழங்குவது, தொலைத்தொடர்பு வசதிகள் வாயிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, கிராம மையப்பகுதிகளில் வை ஃபை வசதியுடன் எல்இடி விளக்கு பொருத்தப்பட்ட மையத்தை அமைப்பது உள்ளிட்டவற்றில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
No comments:
Post a Comment