Saturday, December 19, 2015

தேவை, சட்டத்திருத்தம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 December 2015 01:15 AM IST


நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கு இந்தியா முழுவதும் பேசப்பட்டதைப் போலவே, இந்த வழக்கில் விடுதலையாகவுள்ள இளம்வயதுக் குற்றவாளியும் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறார். இவரை விடுதலை செய்வதா, தண்டனையை நீட்டிப்பதா? என்கிற விவாதம் இந்தியா முழுவதும் பலதரப்பிலும் பல விதமாக விவாதிக்கப்படுகிறது.
2012, டிசம்பர் 16-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த இச்சம்பவத்தில் நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைதான 6 குற்றவாளிகளில் ஒருவரான 18 வயதுக்கு உள்பட்டவர் வளரிளம்பருவக் குற்றவாளி, கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளைக் கழித்துள்ளபோதிலும் அவரை விடுதலை செய்யக்கூடாது என்று நிர்பயாவின் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தண்டனையை நீட்டிக்கவும் இயலாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த இளம்வயதுக் குற்றவாளிதான், அந்த 6 பேரில் மிகவும் மோசமாக நடந்துகொண்ட நபர். வல்லுறவுடன் நில்லாமல், இரும்புக் குழாய் மூலம் நிர்பயாவின் உறுப்பைச் சிதைத்த நபர். இச்செயல்தான் நிர்பயாவின் குடல் கிழியும்விதமாக படுகாயத்தை ஏற்படுத்தி, 13 நாள் சிகிச்சை பலனின்றி இறக்கக் காரணமாக இருந்தது. இந்த நபர், சம்பவம் நடந்த நாளில், 18 வயது நிரம்பாத இளம்வயதுக் குற்றவாளி என்பது இவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
மற்றவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தும், இந்த இளம் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோதே, இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்தன. கொடுங்குற்றம் புரியும் இளம்குற்றவாளிகளை, வயதுவந்தவர்களாகக் கருதி, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மத்திய அரசு கடந்த மே மாதம், சிறார் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மக்களவையில் மசோதா தாக்கல் செய்தது. "கொடுங்குற்றம் புரியும் சிறார்கள் 16 வயது நிரம்பியவராக இருந்தால், அவர் உளவியல் ரீதியாக சிறுவனாக இருக்கிறாரா, வளர்ந்த நபருக்குரிய மனப்பக்குவம் கொண்டிருக்கிறாரா என்பதை ஒரு உளவியல் குழு உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அறிக்கையில் அவரை 18 வயதுள்ளவராகக் கருதி, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்' என்கிற இத்திருத்தங்களுடன் சட்ட வரைவு மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறவில்லை.
சிறார் வயதைக் குறைக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கிறது. ஒரு வழக்குக்காக சிறார் வயதைக் குறைத்து, இளம்வயதுக் குற்றவாளிகளை வழக்கமான நீதிமன்றத்தில் நிறுத்தத் தொடங்கினால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என்று தன்னார்வ அமைப்புகள், சிறார் உளவியல் சார்ந்த ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வராத நிலையில், நீதிமன்றமும் இந்த விவகாரத்தில், இளம்வயதுக் குற்றவாளியின் விடுதலையைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தண்டனையை நீட்டிக்கவோ செய்யாது.
இந்த இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனையுடன் வெளியேறுவதை நிர்பயாவின் பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இளம்வயதுக் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என்றுதான் நிர்பயாவின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த தீர்ப்பின் இறுதியில் நிர்பயாவின் தாய், "குற்றவாளி வென்றான். நாங்கள் தோற்றுவிட்டோம்' என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வழக்கை நீதிமன்றம் விதிவிலக்காகக் கருதி, தண்டனை நீட்டிப்போ அல்லது விடுதலையை ரத்துசெய்யவோ உத்தரவிடுமெனில், இதே அளவுகோல் நாட்டின் அனைத்து சிறார்கள் மீதான பாலியல் வழக்குகளிலும் அளிக்கப்படும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அச்சம்.
இந்தியாவில் குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளைச் சந்திக்கும் சிறார்கள், மொத்தக் குற்ற அளவில் 1.2% மட்டுமே. இவர்களில் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை மிகமிக குறைவு. ஆகவே, வயது வரம்பைக் குறைக்கக் கூடாது என்ற வாதம் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடும் சிறார்களில் பெரும்பாலோர் ஏழ்மையில் உள்ளவர்கள். இவர்களது வாழ்க்கைச் சூழலும், அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்ட வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள்தான் அவர்களை மோசமானவர்களாக மாற்றுகிறது. இதற்கான தீர்வுகளும், இத்தகைய சிறார்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதிலும் கவனம் செலுத்தாமல், வெறும் வயது வரம்பைக் குறைக்கக்கூடாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆனாலும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய நவீன உலகில், பாலியல் குற்ற வழக்குகளுக்கு ஆளாகும் மாணவர்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என தினமும் சிலர் கைதாகிக் கொண்டே இருக்கின்றனர். இரு நாள்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளியில் 17 மடிக்கணினி திருடிய மூன்று மாணவர்களை விசாரித்தபோது, அவர்கள் ஒரு நாற்பது வயது நபரைக் கொன்று, 15 சவரன் திருடியதும் தெரியவந்துள்ளது.
16 வயது நிரம்பிய இளம்குற்றவாளியின் மனப்பக்குவம் 18 வயதைக் கடந்தவருக்கு உரியதா என்பதை உளவியல் குழு தீர்மானிப்பதும், அதன் பரிந்துரைப்படி வழக்கு விசாரணை நடத்தப்படுவதுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும். வல்லுறவுக் குற்றமாக மாற்றப்படும் இளம்வயது காதல்களுக்கும் இந்தக் குழு விசாரணையே நியாயம் கிடைக்கச் செய்யும்.
சிறார் சட்டத்தில் திருத்தங்கள் மிக மிக அவசியம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024