Monday, December 28, 2015

பொறுப்பின்மையும், பசிக் கொடுமையும்

Dinamani


By மாலன்

First Published : 28 December 2015 01:20 AM IST


இரவு விடியத் தொடங்கிய நேரத்தில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. வானத்தில் சூரியன் வரவில்லை என்றாலும் மழை ஓய்ந்திருந்தது. இழந்தது என்ன, இருப்பது என்ன, இழந்ததை எப்படி மீட்பது, இருப்பதை எப்படிக் காப்பது என்று கவலைகள் மனதை மொய்க்க, அடைக்கலம் புகுந்திருந்த அண்டை வீட்டு மாடியிலிருந்து, சொந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் அவர்.
அப்போது வந்த ஒரு தகவல் அவர் இதயத்தைப் பதறச் செய்தது. செம்பரம்பாக்கம் உடையப்போகிறது என்றது செய்தி. செய்தி அல்ல தகவல்.
யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் வதந்தியை அந்த யாரோ ஒருவர் மற்றொருவருக்கு அனுப்ப, அவர் பிறிதொருவருக்கு அனுப்ப, அவர் வேறொருவருக்கு அனுப்ப, அவர் இன்னொருவருக்கு அனுப்ப, அவர் எதிர்வீட்டுக்காரரின் நண்பரிடம் சொல்ல, நண்பர் சகலைக்குச் சொல்ல, சகலை சகாவிற்குச் சொல்ல, சகா மனைவிக்குச் சொல்ல, மனைவி தோழிக்குச் சொல்ல, தோழி தன் கணவனுக்குச் சொல்ல, கணவன் பாஸுக்குச் சொல்ல, பாஸ் பக்கத்து வீட்டுக்காரரிடம் பகிர்ந்து கொள்ள, இனி ஒரு நிமிடம் கூடத் தாமதியாதீர்கள். உடனே புறப்படுங்கள் என்று அவர் எச்சரிக்க, உள்ளம் கொந்தளித்தது. உயிராசை உந்தித் தள்ளியது.
இனி ஒரு வெள்ளமா? என மனம் மருண்டது. இருக்காது! இருக்காது! என்று இன்னொரு மனம் சொன்னது, உயிரென்று நம்பி உடன் வந்த மனைவியைக் காப்பாற்றுவதா, மழலைகளைக் காப்பாற்றுவதா, ஓடி ஓடி உழைத்து ஒரு குருவியைப் போலச் சேகரித்த செல்வத்தில் மிஞ்சி நிற்பதைக் காப்பாற்றுவதா? மூளை குழம்பியது. தப்பித்துப் போகும் தருணத்தில் வெள்ளம் எதிர்வந்து அடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று அச்சம் மேலிட்டது.
இறப்போ, மீட்சியோ இருக்கிற இடத்திலேயே இருந்து விடலாமா என்று ஓர் எண்ணம் ஓடியது. இதுதான் விதி என்றால் இனி நாம் என்ன செய்ய? என்று ஒரு விரக்தி பிறந்தது. இருப்பதுதான் பிரச்னை, இறப்பதில் என்ன பிரச்னை என்றொரு வெள்ள வேதாந்தம் உள்ளத்தை ஒரு கணம் கடந்தது.
உண்மையா என உறுதி செய்து கொள்ள உள்ளம் தவித்தது. அக்கம் பக்கம் தொலைபேசி வேலை செய்யவில்லை. மின்சாரம் போன காரணத்தால் சக்தி இழந்து செல்லிடப்பேசி காலமாகி விட்டிருந்தது. இரு சக்கர வாகனம் இயங்க மறுத்தது. முழங்காலளவு நீரில் முக்கால் கிலோ மீட்டர் நடந்து, திறந்திருந்த கடைகள் நான்கைந்தில் விசாரித்து, உயிரோடு இருந்த ஒரு தொலைபேசியைக் கண்டுபிடித்து என்னை அழைத்தார் அவர்.
அர்ஜெண்ட் சார் என்று ஆரம்பித்தார். பதற்றத்தில் குரல் நடுங்கியது. ஆறுதல் சொல்ல ஆசைதான். ஆனால், அதற்கெல்லாம் அவகாசமில்லை. காரணம், அவரது அவசரம். சொல்லுங்க என்றேன் சுருக்கமாக. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டது என்று சொல்கிறார்களே உண்மையா என்றார்.
யார் சொன்னது?
வாட்ஸ் அப்பில் வந்ததாம்.
அது புரளி. அது உண்மையாக இருந்தால் நண்பரே நீங்களும் நானும் இப்போது உரையாடிக் கொண்டிருக்க முடியாது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்போம். உண்மையில்லைதானே சார்? நிஜத்தை சொல்லுங்க. உண்மை இல்லைதானே? மனைவியையும் குழந்தைகளையும் தனியா விட்டு வந்திருக்கேன்.
"உண்மை இல்லை'.
நன்றி என்று கூடச் சொல்லாமல் நண்பர் தொலைபேசியை வைத்து விட்டார். அந்தக் கணத்தில் அவரை நிமிர வைத்த நிம்மதியை என்னால் நினைத்துப் பார்க்க முடிந்தது.
அதேபோல, அந்த மிரட்சியும் என் நெஞ்சில் நெடுநேரம் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பேரை குலைநடுங்கச் செய்யும் ஆதாரமற்ற செய்திகளை ஆரம்பித்து வைப்பது யார்? ஏற்கெனவே, பேரிடரில் பீதி வசப்பட்டு இருப்பவர்களை மிரளச் செய்வதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்? அவர்கள் மனிதர்கள்தானா? அடுத்தவரை அழ வைத்து அதில் ஆனந்தம் காண்கிற கல்நெஞ்சர்களா? அவர்களுக்குள் மனம் என்ற ஒன்று இயங்குகிறதா? வக்கிரமே வாழ்க்கை லட்சியமா?
கண்டுபிடிக்க முடியாது. காரணம்? வாட்ஸ் அப்பிற்கு வாய் உண்டு, முகம் இல்லை. தகவல் அனுப்புபவரின் எண் அதில் இருக்கும் என்பதென்னவோ உண்மைதான். அந்த எண்ணுக்குரியவரின் எண்ணமாகத்தான் அந்தத் தகவல் இருக்க வேண்டும் என்பதில்லை. வந்ததைப் பந்தியில் வைப்பவர்கள்தான் வாட்ஸ் அப்பில் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் செய்திகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தோம். இப்போது எதிர்வினைகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம், வாட்ஸ் அப் வழியாக.
வாட்ஸ் அப் என்பது ஓர் ஊடகம். ஊடகத்தில் இயங்குகிறவர்கள், ஊடகத்தை இயக்குகிறவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஓடியிருக்கும். பீப் பிரச்னையை ஊடகங்கள் ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. கடந்த மாதம் முழுவதும் அவர்கள் கடைவாயில் பீஃப் (பசு இறைச்சி) மாட்டிக் கொண்டிருந்தது. இப்போது பீப். இது பெண்களின் தசைகள் பற்றிய கவிச்சி.
இணையத்தில் பரப்பியது நானல்ல என்று இப்போது பிரச்னை பெரிதான பின் சம்பந்தப்பட்டவர்கள் கையை உயர்த்திச் சரணம் பாடுகிறார்கள். கரணம் போடுகிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், எழுதியதும் இசைத்ததும் யார்? அந்த எழுத்திற்குப் பின்னால் இருக்கும் மனம் எத்தகையது? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையில் திளைக்குமோ ஒரு கவி மனம்?
அந்தரங்க உபயோகத்திற்கு என்றாலும்கூட அதற்குள் புரையோடிக் கிடக்கும் வக்கிரம் அவர்களை மனநோயாளிகள் என்று அடையாளம் காட்டவில்லையா?
இந்த வக்கிரம் பற்றிக் கருத்துக் கேட்டு இளையராஜாவிடம் ஒலிவாங்கியை நீட்டுகிறார் ஒரு செய்தியாளர். இளையராஜாவிடம் கேள்வி கேட்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால், இடம், பொருள், ஏவல், இங்கிதம், இடக்கர் அடக்கல் எனச் சில இலக்கணங்கள் இதழியலிலும் உண்டு.
தண்ணீரில் தத்தளித்தவர்களுக்குத் தங்களின் சிரமம் பாராது, உதவிய தன்னார்வலர்களைப் பாராட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் இளையராஜா. மனிதர்களின் மாண்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் சமூகத்தைச் செப்பம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அந்த இடத்திலா விடலைகளின் ஆபாசத்திற்கு விளக்கம் கேட்க வேண்டும்
அந்தச் செய்தியாளரின் நோக்கம் பீப் பாடலுக்குக் கண்டனம் பெறுவதல்ல. ஒரு இசைஞானிக்கும் இளம்தலைமுறை இரைச்சல் ஞானிக்குமிடையே சிண்டு முடிந்துவிட ஏதேனும் கயிறு கிடைக்குமா என்று நூல்விட்டுப் பார்ப்பது. எரிகிற கொள்ளியில் இரண்டைப் பிடுங்கி இன்னும் எதையேனும் பற்ற வைக்க முடியுமா எனப் பார்ப்பது.
அந்தத் தவிப்பிற்கு என்ன காரணம்? ஊடகங்கள் இன்று பகாசுரப் பசியோடு அலைகின்றன. இருபத்திநான்கு மணி நேரமும் எதையாவது மென்று துப்ப அவர்களுக்கு ஏதாவது செய்தி வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்லிவிட்டுப் போவதில் ஒன்றும் சுவாரஸ்யமில்லை என்று அவர்கள் நம்புவதால், நாட்டு நடப்புகளுக்குள் நாடகத்தைப் புகுத்த வேண்டிய கடமை அவர்களைக் கண்சிமிட்டி அழைக்கிறது.
அதன் இன்னொரு வெளிப்பாடுதான் இப்போது நாம் காணும் இரவு நேர விவாதக் காட்சிகள். அவற்றில் விவரம் அறிந்து பேசுவோர், அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களை அதிகம் காண முடிவதில்லை. விஷயங்களை விளம்பச் சொல்லும் வித்தகர்களையோ, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சூட்சமம் அறிந்த வல்லுநர்களையோ அடிக்கடி பார்க்க முடிவதில்லை.
எதிராளியைப் பேச விடாமல் இரைவது, எல்லோரும் ஏக காலத்தில் கூச்சல் போட்டு எவர் பேசுவதையும் புரிந்து கொள்ள முடியாமல் செய்வது, அரை உண்மைகளை அவிழ்த்து விடுவது, முழுப் பூசணியை மூடி மறைப்பது, கண்மூடித்தனமான கட்சி விசுவாசத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற எல்லாவிதமான அமர்க்களத்தோடும் அறுபது நிமிடங்கள் கடந்து மறைகின்றன. மார்கழியில் மட்டும்தான் சென்னையில் இசைவிழா. ஆனால் திங்கள் முதல் வெள்ளிவரை தினம் தினம் டிவியில் இரவு நேர இரைச்சல் விழா.
சமூகப் பொறுப்பென்பது சிறிதும் இல்லாதவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஒரு புறம்; ஊடகங்களுக்கு உருவாகியிருக்கும் பயங்கரப் பசி இன்னொரு புறம். சாறு பிழியும் சக்கரங்களுக்கு இடையில் அகப்பட்ட கரும்பைப் போல இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டவன் தமிழன். பாரதி எழுதியது போல், ஒட்டகத்திற்கு ஓர் இடத்திலா கோணல்? தமிழனுக்கு ஒரு விதத்திலா துன்பம்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னை வந்த நாள்களில் என்னைத் திகைக்க வைத்த காட்சிகளில் ஒன்று காகிதம் தின்னும் காளைகள். திருவல்லிக்கேணி ஜாம்பஜார் அருகே, சுவரொட்டிகளைச் சுவைத்துத் தின்கிற காளைமாடுகளை அநேகமாகத் தினமும் கண்டிருக்கிறேன். புல் தின்னாத புலிகளையும், காகிதம் தின்னும் கழுதைகளையும் பற்றிப் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
ஆனால், காகிதம் தின்னும் காளைகளை சென்னையில்தான் கண்டேன். யோசித்துப் பார்த்த போது ஒன்று புரிந்தது, காளைகள் கண்டதையும் தின்னக் காரணம் பசி. அடிவயிற்றில் எரியும் அகோரப்பசி. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா?
சமகாலச் சமூகத்தில் மாடுகள் மனிதர்களைப் போல மாறுவதும், மனிதர்கள் மாடுகளைப் போல ஆவதும் ஆச்சரியத்திற்கு மட்டுமல்ல, அனுதாபத்திற்கும் உரியதுதான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024