By சென்னை,
First Published : 04 December 2015 03:32 AM IST
சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரிலிருந்து வியாழக்கிழமை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தில்லி புறப்பட்டுச் செல்லும் முன்பாக, பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு, கடற்கரை சாலையில் உள்ள சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமான தள அலுவலகத்தில் நடந்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூடுதல் மீட்புக் குழுக்கள்-பிரதமர் உறுதி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான சேதங்களைக் கருத்தில் கொண்டு, மீட்பு-நிவாரணப் பணிகளில் மேலும் 10 ராணுவக் குழுக்களையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கூடுதலாக 10 ராணுவக் குழுக்களையும், தேசிய மீட்புப் படையைச் சேர்ந்த 20 குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதுகுறித்து உரிய துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உடனடியாக குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம்: கடந்த 23-ஆம் தேதியன்று பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து சந்திப்பின் போது நினைவூட்டிய முதல்வர் ஜெயலலிதா, மீட்பு-நிவாரணப் பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவை எனவும், ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.
மேலும், வெள்ளச் சேதங்களைப் பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைத்தமைக்கும், ரூ.940 கோடியை நிவாரண நிதியாக வழங்கியதற்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். இந்த ரூ.940 கோடி தொகையில், ரூ.133.79 கோடியானது, கடந்த 2014-15 ஆம் நிதியாண்டின் மாநில பேரிடர் மீட்பு நிதியின் பாக்கித் தொகையாகும் என்று தெரிவித்த முதல்வர், மேலும் ரூ.254.62 கோடியானது நிகழ் நிதியாண்டில் மாநில பேரிடர் மீட்பு நிதிக்கான இரண்டாவது தவணைத் தொகையாகும் எனத் தெரிவித்தார்.
இந்தத் தொகைகள் மாநில அரசால் ஏற்கெனவே செலவிடப்பட்டன என்பதைச் சுட்டிக் காட்டிய முதல்வர், மத்திய அரசு ஒதுக்கிய ரூ.940 கோடியில் ரூ.552 கோடியானது 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்ட தமிழகத்துக்கான செலவினத் தொகையாகும். அது, தனித்த திட்டங்களுக்காக வழங்கப்பட்டதே தவிர வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அல்ல என்பதை பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும் சேதங்கள்: கடந்த 23-ஆம் தேதியன்று தங்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்ட சேதங்களைக் காட்டிலும் இப்போது மேலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, மேலும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக கூடுதல் அறிக்கையைத் தயார் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, அந்த அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் தெரிவித்தார்.
கவலை தெரிவித்த பிரதமர்: தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். மேலும், மாநிலத்தில் ஏற்பட்ட கவலைத்தரத்தக்க நிலை குறித்து அவர் தனது கவலைகளைத் தெரிவித்தார். சென்னை நகரம் என்பது வளர்ச்சியின் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் அப்போது தெரிவித்தார்.
ரூ.5,000 கோடி அளிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர்
ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ரூ.1000 கோடியை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக விடுவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: சென்னை வெள்ளப் பாதிப்பு உள்பட தமிழக வெள்ளச் சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment