சர்ச்சைக்குரிய பேச்சுகள், நடத்தைகளை தன்னுடைய அரசியல் கலாச்சாரமாகவே மாற்றிக்கொண்டிருக்கும் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இம்முறை ஒருபடி மேலே போய் ஊடகச் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்துத் துப்பியிருக்கிறார். மேலும், தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, “இதே கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? பத்திரிகையாளர்களா நீங்கள்” என்றும் கேட்டிருக்கிறார். அதிர்ச்சியையும் அவமானத்தையும் தரும் நிகழ்வு இது.
பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொள்வது விஜயகாந்துக்குப் புதிதல்ல. பொது நிகழ்ச்சிகளில் தன்னுடைய கட்சி நிர்வாகியைப் பொதுமக்கள் முன்னிலையில் அவர் அறைந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன் கட்சி வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அவர் அடித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் ஒருமுறை செய்தியாளரை, “நாய்” என்று திட்டியிருக்கிறார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில் “தூக்கி அடித்துவிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் பல முறை கடுமையாகப் பாய்ந்திருக்கிறார். குறிப்பிட வேண்டிய விஷயம், ஊடகவியலாளர்களை அவர் அணுகும்விதமே பேச்சில் மட்டும் அல்ல; உடல்மொழியிலும் கீழ்த்தரமானது என்பதுதான்.
ஊடகத் துறையும் ஊடகவியலாளர்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எல்லாத் துறைகளிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருப்பதுபோலவே நிச்சயம் ஊடகத் துறையிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், அடிப்படையில் ஊடகத் துறையையும் ஊடகவியலாளர்களையும் எது இயக்குகிறது என்பது முக்கியம். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் அடிப்படையில் வெறுமனே ஒரு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்ல; மக்களின் பிரதிநிதிகள். மக்களுடைய குரல், மக்களுடைய கேள்விகளே ஊடகவியலாளர்கள் குரலாகவும் கேள்விகளாகவும் வெளியே வருகின்றன; அப்படித்தான் அவை வெளிவர வேண்டும். ஆகையால், ஊடகவியலாளர்களின் குரலை மக்களின் குரலாகவே பாவிக்க வேண்டும். குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது அவர்களுடைய அடிப்படை ஜனநாயகக் கடமைகளில் ஒன்று.
முதல்வர் ஜெயலலிதா இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, அடிக்கடிச் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்பது. ஆனால், செய்தியாளர்களை அவர் சந்திப்பதே இல்லை. அமைச்சர்களும் மிக மிக அரிதாகவே ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்கள். இத்தகைய சூழலில், ஊடகவியலாளர்கள் செய்யக்கூடிய காரியம் ஒன்றுதான், அரசுக்கு மக்கள் தரப்பிலிருந்து செல்ல வேண்டிய கருத்துகளையும் விமர்சனங்களையும் தம் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிப்பது. தம்மாலான அளவில் ஊடகங்கள் அதைச் செய்துகொண்டே இருக்கின்றன. இடையில் பல காலம் இதே விஜயகாந்தும்கூட செய்தியாளர்கள் சந்திப்பை முற்றிலும் தவிர்த்தார். அப்போது ஊடகவியலாளர்கள் செய்ய முடிந்ததென்ன? அரசியல் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான உறவு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் ஊடகங்களிலிருந்து விலகியிருப்பது/தமக்கேற்ற ஊதுகுழலாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது ஜனநாயக இழுக்கு.
சட்டசபையில் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் தொடர்பான ஆளுங்கட்சியினருடனான வாக்குவாதத்தின் உச்சத்தில், நாக்கைத் துருத்தியபடியும், கையை நீட்டியும், கோபமாகப் பேசினார் விஜயகாந்த். அதோடு, எதிர்க்கட்சிகளுக்குச் சட்டசபையில் உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று சொல்லி சட்டசபை செல்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆளுங்கட்சி மட்டும் அல்ல; ஆக்கபூர்வமான, உயிர்த்துடிப்பான எதிர்க்கட்சிகளும் சேர்ந்துதான் ஒரு அரசை உந்தித்தள்ளுகின்றன. செயல்படாமை தொடர்பாக ஒரு விவாதம் நடந்தால், அதில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தன்னையும் விடுவித்துக்கொள்ள முடியாது. தமிழகம் கொந்தளிப்பான பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொண்டபோது எதிர்க்கட்சித் தலைவர் என்னவானார் என்பதே தெரியாமல் இருந்ததை மறந்துவிட முடியாது.
வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மக்கள் சிக்கியிருக்கும் சூழலில்கூட ஊடகங்கள் வழியே மக்களைச் சந்திக்காமல், ‘வாட்ஸ்அப் உரை’ நிகழ்த்தும் ஒரு முதல்வர், கேள்வி கேட்கும் ஊடகங்களை நோக்கி ‘தூ’ என்று வெறுப்பை உமிழும் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் சமகாலத் தலைவர்களை நினைத்துப்பார்க்கையில் வேதனையே எஞ்சுகிறது. இருவரும் ஒன்றுசேர்ந்துதானே கடந்த தேர்தலில் மக்களைச் சந்தித்தீர்கள், வாக்குக் கேட்டீர்கள், நல்லாட்சி கொடுப்போம் என்றீர்கள். மக்கள் செய்த தவறென்ன; வாக்களித்ததா? ஊடகங்களிடமிருந்து விலகுபவர்கள், மக்களிடமிருந்தும் விலகுகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை!
No comments:
Post a Comment