Monday, December 7, 2015

இது வேகத் தடை மட்டுமே!

Dinamani



By ஆசிரியர்

First Published : 07 December 2015 01:21 AM IST


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னையைக் கிழித்துப்போட்ட பேய்மழையில் மூழ்கிப்போனது. இந்தச் செய்தி பலரால் படிக்கப்படாமலும், பார்க்கப்படாமலும் கடந்து போய்விட்டது. கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றிலும்கூட ஏற்றம்பெற்ற பதிவுகள் மிகச் சிலவே. சமூக ஊடகங்களும் வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தன.
÷இந்தத் தீர்ப்பு குறித்து சில அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த எதிர்வினைகளுக்கு யாரும் முக்கியத்துவம் தர இயலவில்லை. மக்கள் கவனம் முழுதும் சென்னையின் வெள்ளத்தையே நோக்கி இருந்தன. வெள்ளத்தால் ஒளி ஊடகங்கள் செயல்பட இயலாத நிலைமை. செயல்பட்ட ஊடகங்களுக்கும் மழை வெள்ளத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாயம். ஆகவே, 7 பேர் தண்டனை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சில விநாடிகளில் வாசிக்கப்பட்டு முடிந்துபோனது.
÷இருப்பினும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது, சட்டச் சிக்கல் மீதான விளக்கமே என்பதையும், இவர்களது விடுதலையை முற்றிலுமாகத் தடுத்துவிடும் எதுவும் அத்தீர்ப்பில் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இது நிச்சயமாக, தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. இத்தீர்ப்பு, இந்த 7 பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட வேகத் தடை மட்டுமே.
÷சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம், சி.பி.ஐ.யை தன் பொறுப்பில் வைத்திருக்கும் மத்திய அரசுக்கே உள்ளது என்றும், ஆகவே, தொடர்புடைய அரசு முடிவு செய்ய வேண்டும் என்கின்றபோது, இந்த வழக்கில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். அத்தகைய நிலையில் மாநில அரசு இந்தக் கைதிகளை விடுவிக்கும்போது, "மத்திய அரசுடன் ஆலோசனை செய்து' என்று சொல்லப்படும் வார்த்தைக்கு "மத்திய அரசின் அனுமதியுடன்' என்று பொருள் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
÷இதன்படி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தமிழக அரசு விடுவித்தது தவறு அல்ல. மத்திய அரசுப் புலனாய்வு நிறுவனங்கள் தொடர்புடைய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்பதால், மத்திய அரசிடம் அனுமதி பெற்று விடுவித்திருக்க வேண்டும் என்பதைத்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
÷ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய கருணை மனுக்களை பரிசீலிப்பதில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மேலதிகமான காலதாமதத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இவர்களது தண்டனையை ஆயுள் சிறைத்தண்டனையாக குறைக்கலாம் என்று கூறியது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கருதி விடுவிக்க வேண்டும் என்று தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
÷தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக, தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமன்றி, ஏற்கெனவே ஆயுள் கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட 4 பேரையும் சேர்த்து 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அன்றைய தினம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்ததாலும், இது ராஜீவ் காந்தி விவகாரம் என்பதாலும், இந்த விடுதலை ஜெயலலிதாவின் பிறந்தநாள் (பிப்ரவரி 24-ஆம் தேதி) வெற்றிக் கொண்டாட்டமாக மாறிவிடும் என்ற அரசியல் காரணங்களாலும் உடனடியாக தடை உத்தரவு பெற்றது அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு. இந்த விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியபோதிலும், அது வெறும் தகவலாகவே கருதப்பட்டது. அனுமதி கோரியதாகக் கருதப்படவில்லை.
÷ஆகவே, தமிழக அரசு, தற்போது உச்சநீதிமன்றம் காட்டியுள்ள வழிகாட்டுதலின் படி, ஆலோசனையாக இல்லாமல் அனுமதி கோரிக் கடிதம் எழுதலாம். இதை மறுக்கக் கூடிய அல்லது ராஜீவ் காந்தி விவகாரம் என்பதால் தயக்கம் காட்டக்கூடிய அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. ஆகவே, உடனடியாக அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனுமதி அளிக்காவிட்டால், அதற்கான விமர்சனங்களை ஏற்க வேண்டியது மத்திய அரசுதானே தவிர, மாநில அரசோ, ஜெயலலிதாவோ அல்ல.
÷இரண்டாவதாக, குற்றவாளிக்குத் தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் சட்டம் வழிவகுக்கவில்லை என்றும், குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
÷ஆகவே, இந்த 7 பேரும் மீண்டும் தங்கள் விடுதலை குறித்து மனு கொடுக்கவும், ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதைப்போல 14 ஆண்டுகள் சிறையில் கழித்த தங்களை விடுதலை செய்யக் கோரவும் இத்தீர்ப்பு இடமளிக்கிறது.
÷குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப, 14 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகும் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கச் செய்வதை சிறப்பு நேர்வாகக் கருதலாம் என்கிற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தால், இவர்களது தண்டனையை சிறப்பு நேர்வாகக் கருதி, சிறையில் நீடிக்க விடுவதா அல்லது விடுவிப்பதா என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்த தமிழக அரசு கோரலாம்.
÷விடுதலை விவகாரம் இத்தோடு முடியவில்லை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024