Wednesday, December 23, 2015

சிதறிக் கிடக்கும் நியாயங்கள்…நிர்பயாக்கள்! By உமா ஷக்தி First Published : 23 December 2015 12:39 PM IST

Dinamani

இளம் குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வது சரி / தவறு. இது ஒரு தவறான முன் உதாரணமாகி விடக் கூடும் என்று இரு தரப்பிலும் வாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும். இந்த வேளையில் நம் முன் நிற்கக் கூடிய சில கேள்விகளுக்கு மனசாட்சிக்கு உட்பட்டு பதில் தேடவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி. நாடே வெட்கித் தலைகுனிந்து நின்ற ஓர் கருப்பு தினம். ’லைஃப் ஆஃப் பை’ எனும் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு இளம் பிசியோதெரப்பி மாணவி நிர்பயா (ஜோதி சிங் பாண்டே) மற்றும் அவளது தோழன் அவிந்ர பிரதாப் பாண்டே இருவரும் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். குறைந்த பயணிகள் கொண்ட அந்தப் பேருந்து அவளுக்கு யமனாக மாறப் போகிறது என்று நிர்பயா அப்போது அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் ” ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பலியானார்” என்று செய்தித்தாள்களில் படித்து அதிர்ந்து போகாதவர்களே இருக்கமுடியாது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளும் பிடிபட்டனர். அவர்களில் ராம்சிங் என்பவன் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மற்ற நால்வர்களான முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது (ஆனால் 2014 மார்ச் மாதம் அவர்கள் மேல் முறையீடு செய்ததால் தூக்குதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது). அந்தக் கடைசி ஒருவனுக்கு அப்போது 17 வயதே நிரம்பியிருந்ததால் இருந்ததால், அவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அவனுக்கு அதிகபட்ச தண்டையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய தண்டனைக் காலம் தற்போது சட்டப்படி முடிந்து விட்டதால் அவன் விடுதலை செய்யப்பட்டான். அந்த ஆறு குற்றவாளிகளில் ராம்சிங்கும் இளம் குற்றவாளியும் தான் தான் மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்கள் என்று காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது அவனுக்கு இருபத்தியோரு வயதாகிவிட்டதால், இதற்கு மேல் சிறுவர் சீர்திருத்தக் காப்பதில் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அவனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் அவனைப் பற்றிய விபரங்களையோ புகைப்படத்தையோ வெளியிடாமல், ஒரு ரகசிய இடத்தில் அவனை விடுவித்துள்ளனர். தவிர குறிப்பிட்ட காலம் வரை அவனைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளது மத்திய அரசு சிறார் காப்பகத்திலிருந்து வெளியேறிய அவனுக்கு ரூ. 10,000 நிதியுதவியும் அளித்துள்ளார்களாம். இதை விடக் கொடுமையான தகவல் இந்த மூன்று வருடங்களில் அவனுடைய மனநிலையில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை என்பதுதான். குற்றவுணர்வு கூட இல்லாமல் அவன் இனி தில்லி தெருக்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதே வேதனைக்கும் விவாதத்திற்கும் உரிய விஷயமாகி உள்ளது. அவனுடைய தண்டனை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று, தில்லி பெண்கள் கமிஷன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, விசாரணை நடத்திய நீதிமன்றம், அடுத்த நாளே அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சிறுவனின் (தற்போதைய வயது 20) தண்டனையை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை என உச்சநீதிமன்றம் கூறி விட்டது. சட்டத்தில் இடமில்லாத நிலையில், ஒருவரின் உரிமையை கோர்ட் பறித்துக்கொள்ள முடியாது என்று கோர்ட் அழுத்தம் திருத்தமாக கூறி, பெண்கள் கமிஷன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா சம்பவத்தை தொர்ந்து, 6 மாதங்கள் முன்பு, சிறுவர்கள் நீதி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. இதன்படி கொடும் குற்றங்கள் செய்திருந்தால், 16 வயதாகியிருந்தாலும்கூட, அந்த குற்றவாளி சிறார் என கருதப்படமாட்டார். பிற குற்றவாளியை போலவே கருதப்பட வேண்டும். இந்த சட்ட திருத்தம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் ஒத்துழைப்பு இன்மையால் 6 மாதங்களாக இச்சட்டம், கிடப்பில் கிடக்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம்.

இது தொடர்பாக அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான 3 பேர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி லீலாசேத், கோபாலசுப்பிரமணியம் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இது குறித்து நீதிபதி ஜெ.எஸ்.வர்மா செய்தியாளர்களிடம் அப்போது பேசிய போது, நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக கூறினார். காவல் நிலையங்களில் 25 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், சிறார்களுக்கான வயது உச்சவரம்மை 18 லிருந்து 16 குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக வர்மா கூறினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக வர்மா தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்க கூடாது என்றபோதிலும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க அரசியல் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்க முடியாது என்றும் ஜே,சி வர்மா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாலியல் பலாத்கார குற்றவாளிகள் போலீசாராக இருந்தாலும், அரசு அதிகாரிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 630 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை வர்மா கமிஷன் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லை.

லெஸ்லி வுட் இயக்கி பிபிசியில் ஒளிபரப்பான ‘இந்தியாவின் மகள்’ காணொலியை நம் நாட்டில் உடனடியாக தடை செய்துவிட்டார்கள். இளம் குற்றவாளியான அவனுக்கு விடுதலை அளித்ததுடன் அவனுடைய முகத்தை ஊடகங்களில் வெளியிட அனுமதிக்கவில்லை.

என்ன மாதிரியான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? முழுமையான அகிம்சையும் பின்பற்றாத முழுமையான தண்டனைகளும் கொடுக்க இயலாத ஒரு அரைவேக்காடான அரசியலும் சட்டமும் கொண்ட ஒரு நாடாக நம் நாடு தேங்கிக் கிடப்பதைப் பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிராக இத்தகைய கொடூரமான கொலை பாதகச் செயலை செய்பவர்களை வயது வரம்பு பார்த்து விடுவிப்பது என்ன நியாயம்? மதுரையை எரித்த கண்ணகியைப் போல் உயிர்த்தெழுந்து நிர்பயாக்களே தங்களுக்கான நீதியை தேடிக் கொள்ளவேண்டுமா? மக்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளனவா அல்லது பாதுகாப்பற்ற ஒரு மனநிலையில் இந்தியப் பெண்கள் தினமும் படிக்கவும் பிழைக்கவும் உயிரையும் அதைவிட பெரிதான அவரிகள் நினைக்கும் மானத்தையும் பணயம் வைக்க வேண்டுமா? என்று பல விடையற்ற கேள்விகளை மனம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

நகம் வெட்டுகையில் தப்பித் தவறி நம் கரங்களாலேயே சதையையும் சேர்த்து வெட்டிக் கொள்கையில் வலியால் எப்படித் துடிக்கிறோம். அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உடல் சிதைந்து கிடந்த நிலையில், இரும்புக் கழியை அவள் உடலுக்குள் செலுத்தி சிறுகுடலை வெளியே எடுத்துள்ளார்கள் என்று தெரிந்த போது நெஞ்சம் பதைத்துத் பதறித் தவித்தது. துடிதுடித்து இறந்து போவதற்கு முன் அவளுக்குள் எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்? அவளுடைய கனவுகளை களவாடிக் கருகக் செய்ய யாருக்கு உரிமை இருக்க முடியும்? படிப்பு வேலை வாழ்க்கை திருமணம் என்று எல்லோருக்கும் கிடைக்கும் சந்தோஷங்களை சிதைக்க விதி அந்த ஆறு பேரின் சாயலில் வந்து சேர்ந்ததா?

கற்பனையிலும் நினைக்க முடியாத அளவுக்கு கொடூரமான செயலில் ஈடுபட்டவனுக்கு விடுதலைலும் வெளிநாட்டுக்கு அனுப்பி கடைசி கட்ட சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிர் இழந்த நிர்பயாவுக்கு மரணம் தண்டனையாகவும் கிடைத்திருப்பது இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய சட்டத்தின் அடிப்படைகளை மாற்றாத வரை இது போன்ற தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிகழ்வுகள் தொடரும். நமது குற்றவியல் சட்டங்கள் அந்தந்த வழக்குகளுக்கு ஏற்ற வகையில் விசாரணைகளைச் செய்து அதன் சூழலுக்கேற்ப தீர்ப்பு சொல்லும் அளவுக்கு மாற்றப்படவேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட்டு நீதித் துறையில் காலத்துக்கு ஏற்ற வகையில் சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வழக்கைப் பொருத்தவரையில் இக்குற்றத்தை செய்தவன் நிச்சயம் சிறுவனாக இருக்க முடியாது. மனத்தளவில் அவன் ஒரு வக்கிரமான வன்செயலைச் செய்தவன். எனவே அதை முன் நிறுத்தித்தான் குற்றத்தின் அளவை கணிக்க வேண்டும். இனியேனும் வயதை வைத்து குற்றவாளியை வகைப்படுத்தக் கூடாது என சட்டத்தில் அதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் நிர்ப்பயா என்பது இந்நாட்டின் யாராலும் அழிக்க முடியாத நிரந்தரக் கறையாகி விடும்.

சமூகத்தின் பொக்கிஷங்களாக கருத வேண்டிய குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்புச் சட்டங்களை பொறுப்புணர்வுடன் நடைமுறைக்கு சாத்தியமாகும் விதமாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டு வல்லுறவு போன்ற கொடூரமான குற்றங்களை செய்பவர்களை சமூகத்தில் அடையாளப்படுத்த வேண்டும். மனவக்கிரம் முற்றிய அந்த நோயாளிகளை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். வல்லுறவு சம்பவங்கள் நிகழும் காலகட்டத்தில் மட்டும் பொதுமக்களும் ஊடகங்களும் மட்டும் உரக்கப் பேசுவதும் அதன் அரவம் அடங்கியபின் சொந்த விஷயம், அடுத்த செய்தி என்று அவரவர் வேலைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். கொந்தளிப்பான மனநிலையில் அச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக குரல் எழுப்புவதோ உணர்ச்சி வசப்பட்டு போராடுவதோ அந்தந்த நேர வெளிப்பாடுகளே அன்றி வேறு எந்த உருப்படியான தீர்வையும் அளிக்காது. இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நம் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா வாச்சாத்தி கிராமத்தில் காவல் துறை மற்றும் வனத்துறையினர் பதினெட்டு பெண்களை இழுத்துச் சென்று நிகழ்த்திய கொடூரச் செயலுக்கு தண்டனை கிடைக்க இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. எனவே இது போன்ற கொடிய குற்றங்களுக்கு அவசரச் சட்டத்தில் உடனடியாக தண்டனை கிடைப்பது தான் குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி. தாமதிக்கப்ப்டும் ஒவ்வொரு தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதியெனவே கொள்ளலாம். தண்டனைகள் மற்றும் குற்றங்களை குறைத்துவிடும் என்றும் சொல்ல முடியாது. சமூகத்தில் பல சீர் திருத்தங்கள் நிகழ்ந்தால் தவிர அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது.

16 வயது கொடூரக் குற்றவாளிகளுக்கும் இனி கடும் தண்டனை என்று சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது என்பது சற்று ஆறுதலான செய்தி. நிலுவையில் இருக்கும் சட்டத்திருத்தங்களை அமல்படுத்தியும், அந்தந்த வழக்குகளுக்கு ஏற்ப புதுச் சட்டங்கள் இயற்றவும் அரசு முன்வர வேண்டும்.

தவிர சமூகத்தில் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் குழந்தைகளை வளர்க்க்க ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களை எப்போது சக உயிராக மதிக்க இச்சமூகம் கற்றுக் கொள்கிறதோ அப்போது தான் பெண்கள் பாதுகாப்புடன் வாழத் தகுந்த இடமாக நாடு மாறும். முழுமையான மாற்றம் ஏற்படவேண்டும் எனில் வீட்டில் சொல்லிக் கொடுக்கும் இப்பழக்கம் பள்ளியிலும் தொடர வேண்டும். அதற்கேற்ற வகையில் நம்முடைய கல்வி பாடத் திட்ட முறைகள் மாற வேண்டும். கேடு கெட்ட செயல்கள் இனி நிகழாமல் இருக்க ஒரு தரமான சமூகத்தை நாம் தான் கட்டமைக்க வேண்டும். அப்போது நிர்பயாக்களின் ஓலம் நிச்சயம் கேட்காது. கேட்க வேண்டாம்.



***

இன்று கொல்லும் தெய்வம்



சொந்த வீட்டில் அக்கம்பக்கத்தில் என

நீளும் அந்தக் கைகளின்

முதல் அத்துமீறல்..

அச்சமும் அருவருப்பும்

புரியாமையும் கலந்து

எங்கள் குழந்தைமையை திருடிக்

கொன்று சுவைத்தீர்கள்!

பிறிதொரு நாளில்

பள்ளியில் கல்லூரியில்

வீதியில் அலுவலகத்தில்

என எங்கெங்கும்

ராட்சச நிழலாக

ஊர்ந்து தொடர்கின்றன

அழுகிப் புழுத்த விரல்கள்…

இது புனிதமான தேசம்

அவர்களை கொல்ல வேண்டாம்

வன்புணரத்தான் செய்வார்கள்

அதனால் என்ன?

காது கேளாத அவர்களிடம்

அகிம்சையை போதியுங்கள்

மனநலம் பிசகியவர்களிடம்

கருணை காட்டி

உங்களை நிருவிக் கொள்ளுங்கள்

உங்கள் கருணையின்

கரங்களின் அன்பெனும் வெப்பம்

அமிலமாகட்டும்.

நியாயங்கள் அப்போது

அறம் சார்ந்தவை ஆகிவிடும்

மன்னிப்புக்களை தண்டனையாகும்

வீணான சட்டங்களை

தீயில் கொளுத்திவிட்டு

அந்த நெருப்பில்

நிர்பயாக்களுக்கு சிறு

வெளிச்சம் காட்டுங்கள்!

சிறியதும் பெரியதுமாக

நாடு முழுவதும்

பெருகி வரும் எங்களில்

சிலர் உடனுக்குடன் இறந்துவிடுகிறோம்

அல்லது கொலை செய்யப்படுகிறோம்

பலர் உயிர் சுமக்கும்

பிரேதங்களாக இருக்கிறோம்..

சிதைக்கப்பட்ட உடல்களில்

மிச்சமிருக்கும் ஆன்ம பலத்தால்

பலி கொடுப்போம்

எம்மைத் தீண்டிய ஒவ்வொரு

கரங்களையும் வேர் அறுப்போம்!

ஆதி காலந்தோறும்

அசுரர்களை வதைக்கவே

இறைவிகள் தோன்றினார்கள்..

எங்கள் சதைப் பிய்த்து உடல் கிழித்த

உங்கள் மண்டையோடுகளும் குடல்களும்

வெப்பமான ரத்தம் மட்டுமே கேட்கும்

காளிகளாக உருபெற்றுவிட்டோம்.

- உமா ஷக்தி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024