Tuesday, December 22, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 13 - சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் .......... டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

அவன்/அவள் ரொம்ப தைரியசாலிப்பா. இதுக்கெல்லாம் கலங்கிட மாட்டாங்க. ஒண்ணும் தப்பா நடக்காது. பார்த்துக்கலாம்’ என்று யாரைப் பற்றியும் தவறாகப் புரிதலை வைத்துக்கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தைரியமானவர்கள்கூடச் சில நேரம் தடுமாறக்கூடும்.

தற்கொலை முயற்சிக்குப் பல நோக்கங்கள் உண்டு. பெரும்பாலும் மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், உலகப் பிரச்சினைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், வீட்டிலுள்ளவர்களை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துவதுண்டு. சிலவேளைகளில் இந்த மிரட்டல் முயற்சிகள் உயிருக்கு ஆபத்தாகவும் முடிவடையும்.

எதிர்பாலினத்தின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதற்கு, தற்கொலை முயற்சியை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்திப் பார்ப்பது உண்டு. சிலர் தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே, ‘எதற்கும் ஒரு தற்கொலை முயற்சியைச் செய்துவிட்டால் பாதுகாப்பு’ என நினைத்து விபரீத முயற்சிகளில் இறங்குவார்கள்.

தற்கொலை ஒரு தியாகமா?

எமில் டர்ஹெய்ம் என்ற சமூக உளவியலாளர் தற்கொலைகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளார். அதில் ஒருவகை சமுதாய நலனுக்காகவோ, மற்றவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலோகூட சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிவது. சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அப்படிப்பட்டவன். தான் தற்கொலைக்கு முயற்சித்ததற்கு, அவன் சொன்ன காரணம் வித்தியாசமானது. பொதுவாகவே அதிகப்படியான சட்டதிட்டங்களைப் பேசும் அவன், வகுப்பில் ஆசிரியர் மொபைல் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளான். பின்பு, இந்தக் காரணத்தை எழுதி வைத்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொண்டால், தனது சாவுக்குப் பின்னாலாவது இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்படாது என்பதுதான் அவனுடைய எண்ணம்.

இதுபோலப் பல இடங்களில் விவாதங்களில் ஈடுபடுவது அவனுக்கு வாடிக்கை. விசாரித்ததில் மனநலப் பாதிப்புகளுக்கான பல அறிகுறிகள் அவனிடம் இருந்தன. இன்னொரு சிறுவன் தான் செத்தாலாவது தனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் விஷம் குடித்துள்ளான். இதுபோன்ற விபரீத முயற்சிகள் வளர்இளம் பருவத்தில் சில நேரம் வரலாம். ஆனால், இந்த முயற்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படு வதில்லை என்பதுதான் உண்மை.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

தற்கொலை எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ‘இவ்வளவு தைரியமானவனா இப்படிச் செய்தான்’ என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படிப்பட்டவரையும் சில வேளைகளில் சாய்த்துவிடும். ஆனால், வளர்இளம் பருவத்தினரில் சிலர் எப்போதும் ஆபத்தின் வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள். படிப்பில் மந்தம், தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை, தேர்வுகளில் அடிக்கடி தோல்வி, போதைப்பொருட்கள் பயன்பாடு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சின்ன வயதில் தாயை இழந்தவர்கள், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல்ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.

ஏற்கெனவே குடும்ப நபர்கள் யாரேனும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினர் அதிகப் பாதிப்புக்குள்ளாகலாம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் 5 - ஹைடிராக்சி டிரிப்டமைன் (5-HT ) என்ற ரசாயனத்தைத் தீர்மானிக்கும் மரபணுக் கள் முக்கியப் பங்கு வகிப்பதுடன், பரம்பரையாகப் பாதிக்கும் நிலையும் உள்ளது. ஒருவர் ஒருமுறை தற்கொலை மிரட்டலோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ வெளிப்படுத்தினால், அவர்கள் எப்போதுமே ஆபத்துக்கு உரியவர்கள்தான். அவர்களுடைய செயல்பாடுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

குணரீதியான மாற்றங்கள்

வளர்இளம் பருவத்தினர் சிலருக்கு வேலையே அவ்வப்போதுத் தற்கொலை மிரட்டல்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாகத்தான் இருக்கும்.

குறிப்பிட்ட குணத்தோடு ஒன்றிப்போன அவர்களிடம், வேறு பல மாற்றங்களும் காணப்படும். யாரிடமும் ஒத்துப்போகாமல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்துவிடுவது, எளிதில் உறவுகளை முறித்துக்கொள்வது, தனக்கு மட்டுமே வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற மனோபாவம், காதல் வலைகளில் மாறிமாறிச் சிக்கிக்கொள்வது, இளம் வயதில் பாலுறவு மற்றும் போதைப் பழக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி தங்கள் கையைப் பிளேடால் கிழித்துக்கொள்வது, சூடுபோட்டுக்கொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஆகிய குணநல மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து காணப்படலாம். இதற்குப் பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு (Borderline Personality Disorder ) என்று பெயர். இவர்களுக்கு மாத்திரைகளோடு மனநல ஆலோசனையும் கட்டாயம் தேவை.

எந்த வகை ஆபத்தானது?

விடலைப் பருவத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் இருக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்தால், அவர் செய்த முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கலாம். யாரும் இல்லாத, காப்பாற்ற வழியில்லாத இடங்களைத் தேர்வு செய்வது, ரயில் முன்னால் அல்லது மாடியிலிருந்து விழுவது, கடிதம் எழுதிவைப்பது, விஷம் அருந்தியதைக் கடைசிவரைக்கும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது போன்றவை தீவிரமான தற்கொலை எண்ணங்களின் வெளிப்பாடு.

ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்க மாத்திரை கேட்டிருக்கிறான். அவர்கள் இரண்டு மாத்திரைக்கு மேல் கொடுக்க மறுத்ததால், பல கடைகளில் இரண்டிரண்டு மாத்திரைகளாக, பல நாட்களாகச் சேகரித்துவைத்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இத்தகைய நபர்கள் கண்டிப்பாகத் தீவிர மனநல ஆலோசனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இவர்கள் மனநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பு அதிகம்.

(அடுத்த முறை: நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024