Thursday, December 10, 2015

குறள் இனிது: பத்திரமாகப் பார்த்துக்குங்க..

Return to frontpage

சில வருடங்களுக்கு முன்பு, திருச்சியில் எங்கள் வங்கியின் கோட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமை மாலை 4 மணி இருக்கும். தொப்பலாக நனைந்திருந்த ஒரு பெரியவர் பதற்றமாக உள்ளே வந்தார். ‘போச்சு, எல்லாம் போச்சு. மூன்றே நாட்களில் அறுபது ஆயிரம் போச்சு. ஏடிஎம் அட்டை என்னிடம் இருக்கும் பொழுதே பணத்தைக் காணோம். எல்லோரும் உள் கூட்டு’ என்று மூச்சு விடாமல் படபடப்பாகப் பேசினார். அவரை ஆசுவாசப்படுத்தி நடந்தவைகளைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டோம். ஏடிஎம் அட்டையைக் கொடுங்கள் என்றவுடன் “அது என்னுடன் எப்பொழுதும் பத்திரமாக இருக்கும். தூங்கும் பொழுது கூட தலையணைக்குக் கீழேதான் இருக்கும்” என்று சொல்லி, பாண்ட்டில் இருந்த சீக்ரெட் பாக்கெட்டிலிருந்து கார்டை வெளியில் எடுத்துக் கொடுத்தார். அட்டையின் பின்பக்கம் 2525 என்று எழுதி இருந்தார். அவரைக் கேட்டதற்கு அது பின்நம்பர் என்றார். இதை அட்டையில் எழுதலாமா என்று கேட்டதற்கு, அட்டை தன்னிடம் எப்பொழுதும் இருப்பதாகப் பதில் அளித்தார். பின்னர் நாங்கள் ஏடிஎம் காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ கிளிப்பிங் மூலமாக, அவர் கணக்கில் மூன்று நாட்கள் இரவு 11 மணிக்கு பணம் எடுத்தவரை அவருக்குக் காண்பித்தோம். மனிதர் பதறிப்போய் விட்டார். பணம் எடுத்தது அவருடைய செல்ல மகன்தான் என்று அடையாளம் காட்டி, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்.மிகக் கவனமாகத் தம்பொருட்களைப் பாதுகாப்பவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். ஏடிஎம் பின்நம்பரை ஏடிஎம் கார்டில் எழுதுவது என்பது, பீரோவைப் பூட்டி அதிலேயே சாவியைத் தொங்க விடுவதற்கு ஒப்பானதாகும். பின் நம்பர் எளிதில் கணிக்க முடியாததாக இருப்பது நலம். உதாரணமாக உங்கள் வாகனத்தின் பதிவுஎண், வீட்டுஇலக்கம், பிறந்த வருடம் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அதனை அடிக்கடி மாற்ற வேண்டும். ஏடிஎம்-ல் அதற்கு வசதி உண்டு. நீங்கள் இணையதளம் மூலம் உங்கள் வங்கிக் கணக்கை உபயோகிப்பவர் என்றால் இன்னமும் கவனம் தேவை. உங்கள் கடவுச்சொல் (Password) சில எழுத்துக்கள், சில எண்கள், குறியீடுகள்(*!;போன்றவை) கலந்ததாக இருக்க வேண்டும். ABCD1234 போன்ற எளிதில் யூகிக்கக் கூடியவை கூடாது. மேலும் முன்பின் தெரியாதவர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ உங்கள் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டால் கொடுக்கக் கூடாது. அவ்வகை மின்னஞ்சல்களுடன் வரும் இணைப்புகளை க்ளிக் செய்வதும் ஆபத்தானது.

இவை மூலம் உங்கள் கணிணியில் வைரஸ் பரவக் கூடும். உங்களைப் பற்றிய விவரங்களை எடுத்து தவறாக பயன்படுத்த ஏதுவாகும். திறமை மிக்க மன்னனுக்கும் தன் அரணை வலிமையாக வைத்துக் கொள்வது நல்லது என்கிறார் வள்ளுவர். இன்றைய கணிணி உலகில் கடவுச்சொற்கள் தானே நமது பாதுகாப்புச் சுவர்?

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும் (குறள் - 492)

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024