Sunday, December 6, 2015

அரசுக்கு சில ஆலோசனைகள்...


..Dinamani


By ஆசிரியர்

First Published : 03 December 2015 01:56 AM IST


இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும். திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர். ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
முகாம்களுக்கு வராமல் வெளியே இருக்கும் சென்னை மக்கள் சொல்லொணா சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மீட்புப் படையினர் படகுடன் வீடு தேடி வந்து மீட்டுச் சென்றபோதிலும், குழந்தைகள், பெண்களை மட்டும் அனுப்பிவிட்டு ஆண்களும் பெரியவர்களும் இன்னமும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளம் புகுந்த வீடுகளில் கிடைத்தது லாபம் என்று திருடர்கள் புகுந்து விடுகிறார்கள். அந்த அச்சத்தாலேயே இன்னமும் முற்றிலுமாக வெளியேறாமல் இருக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களது வீட்டில் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் உணவு சமைக்கப் போதுமான பொருள்கள் உள்ளன. ஆனால், சமைப்பதற்கான தண்ணீர்தான் இல்லை.
மழை வெள்ளம் தெருவெல்லாம் ஆறாய்ப் பெருகி ஓடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மின் இணைப்பைத் துண்டித்து விட்டிருக்கிறது. அதனால், மோட்டார் வேலை செய்யாத நிலையில், தண்ணீர் இல்லாமல் குடும்பங்கள் அவதிப்படுகின்றன.
சென்னை மக்களுக்கு மிக இன்றியமையாத் தேவை பாதுகாக்கப்பட்ட குடிநீர். இதைக் குடிநீர் வாரியம் மட்டுமே வழங்கிட முடியாது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தப் பேரிடர் காலத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்க முன்வர வேண்டும். ஒரு குடும்பத்துக்கு இத்தனை லிட்டர் என அளந்து கொடுத்தாலும் வரவேற்புக்குரியதே.
ஊர் முழுவதும் வெள்ளமும் சாக்கடையும் கலந்து கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளின் நீர்கூடத் தூய்மையானதாக இல்லை. இந்நிலையில், குடிநீர் விநியோகம்தான் சென்னை மாநகராட்சியின் முன்பாக உள்ள மிகக்கடினமான சவால். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமல் போனால், தொற்று நோய்களும், விஷ ஜுரமும் பரவும் வாய்ப்பு ஏராளம். அந்த நிலைமையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாகிவிடும்.
இதுபோன்ற அடைமழை, புயல், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து, விஷக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அரசு நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பும், நிவாரணமும் வழங்குவதில் கவனம் செலுத்தும் அதேவேளையில், மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிவிடுதல் அவசியம்.
அனைத்துக் குடிநீர்க் குழாய்களையும் சரிபார்த்து, சாக்கடை கலக்கவில்லை என்பதை உறுதி செய்து, குடிநீர் விநியோகத்தை சீராக்கும்வரை, லாரிகள் மூலம் குடிநீரை விநியோகிப்பதே பாதுகாப்பானது. இதற்குப் போதுமான லாரிகள் சென்னை மாநகராட்சியில் கிடையாது. ஆனால் வெள்ளம் பாதிக்காத தமிழகத்தின் பல்வேறு நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள குடிநீர் லாரிகளை சில மாதங்களுக்கு சென்னைக்கு அனுப்பிவைக்கும்படி செய்தால், இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக அமையும். அரசுக்கு பொருள்செலவும் பெரிதாக இருக்காது.
மழைவெள்ளம் மண்ணுக்குள் இறங்காமல் தேங்கி நிற்கிறது. ஒரு நூற்றாண்டு காலம் சரியான மழையில்லாமல், விவசாயம் இல்லாமல் இறுகிப்போன மண்ணில் வெள்ளநீர் உடனடியாக இறங்கவில்லை என்றாலும், மெல்ல மெல்ல ஊறிச்செல்லும். முன்பு திடமான கட்டாந்தரை என்று கருதப்பட்ட நிலம், இந்த வெள்ளம் மண்ணுக்குள் இறங்கியபிறகு அவ்வாறாக இருக்காது. அடிமண் இளகும்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆட்டம் காணவும், நிலைகுலையவும் வாய்ப்புள்ளது. ஆகவே பொறியாளர் குழுவினர் பரிசோதிக்கவும், இந்தப் பகுதியில் மண் ஆய்வு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீருக்கு அடுத்தபடியான சவால் சாலைகள். சென்னை மாநகரச் சாலைகள் அனைத்துமே இந்த மழையிலும் வெள்ளநீரிலும் பெயர்ந்துகொண்டுவிட்டன. சாலைகளை முழுமையாக மாற்றியமைத்தாக வேண்டும். தார்ச் சாலைகளுக்கு எதிரி மழைநீர்தான். ஆகவே, இன்று இயற்கை தந்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னையில் பிளாஸ்டிக் கலந்த தார்ச் சாலைகளை அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளலாம்.
அரசியல்வாதிகள் அகற்ற மறுத்த ஆக்கிரமிப்புகளை இயற்கை தானே அகற்றியிருக்கிறது. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடராதபடி பார்த்துக்கொள்வதுதான் சென்னை மாநகராட்சி செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை. இவர்களுக்கு மாற்று வாழிடங்கள் அளிக்காமல், அதே இடத்தில் மீண்டும் பாதுகாப்பாக வீடு கட்டித்தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வாக்குவங்கி அரசியல் நடத்தக்கூடும். தேர்தல் நெருக்கத்தில் இத்தகைய அரசியலுக்கு இப்போது அடிபணிந்தால், மீண்டும் பாதிக்கப்படப்போவது இதே சென்னை, இதே மக்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டியதில்லை.
அரசின் உடனடிக் கடமை குடிநீர் வழங்குதலும், சாலையைச் செப்பனிடுவதும்தான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024