சென்னை,
இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் தாய்தான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது திருமணம்
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபா. இவருக்கும், மேனன்பாபு என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு காவியாஸ்ரீ என்ற மூன்றரை வயது மகள் உள்ளார். மேனன்பாபு மதுவுக்கு அடிமையாகி, கடந்த 2013–ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் மகளுடன், சுபா வசித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சுசீந்திரன் என்பவருடன் 2–வது திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து 3–வது நாளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தை காவியாஸ்ரீயை, முதல் கணவர் மேனன்பாபுவின் தாயார் காளியம்மாள் மற்றும் சிலர் வேனில் கடத்தி சென்றுவிட்டனர்.
ஆட்கொணர்வு மனு
இதுகுறித்து மணல்மேடு போலீசில் சுபா புகார் செய்தார். போலீசார் குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்தாலும், மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தன் குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சுபா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காளியம்மாள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
உரிமை உள்ளது
முதல் கணவர் இறந்தபிறகு, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற திருமணம் சட்டவிரோதம் கிடையாது. தமிழக அரசு கூட விதவை மறுமணத்தை ஊக்குவிக்கிறது.
சுபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தான் பெற்ற குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற உரிமை கொண்டாட முடியாது என்று காளியம்மாள் தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது. மேலும், சுபாவை திருமணம் செய்துள்ள சுசீந்திரனும், குழந்தையை பொறுப்புள்ள தந்தையாக பார்த்துக் கொள்வதாகவும், அவளுக்கு தேவையான கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒப்படைக்கவேண்டும்
எனவே, மறு திருமணம் செய்துகொண்ட மனுதாரருக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மீது உரிமை கொண்டாட உரிமை உள்ளது. அவர்தான் முழு உரிமை படைத்த இயற்கையான பாதுகாவலர்.
எனவே, குழந்தையை காளியம்மாள் உடனடியாக சுபாவிடம் ஒப்படைக்கவேண்டும். இதற்கு அனைத்து உதவிகளையும் மணல்மேடு போலீசார் செய்து கொடுக்கவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment