By ஆசிரியர்
First Published : 14 December 2015 01:21 AM IST
இன்றைய சூழலில் பொதுமக்களை மிகவும் பாதிக்கும் பிரச்னை மருத்துவ வசதி. குறிப்பாக, மருத்துவச் செலவு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல தொடங்கப்பட்ட பிறகு, மருத்துவம் என்பது சேவை என்பது போய், இளைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் அது வெறும் வியாபாரமாக மட்டுமே கருதப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மேலைநாடுகளில் மருத்துவம் வியாபாரமாக மட்டுமே கருதப்படுவது என்பது உண்மை. ஆனால், அங்கே மருத்துவ காப்பீடு பரவலாக்கப்பட்டு காப்பீடு மூலம் அனைத்து மக்களும் வசதி பெறுவதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தவறான மருத்துவமோ, மருத்துவர்களின் கவனக் குறைவோ, மருத்துவ தர்மத்தை மீறுவதோ, மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெரும் தொகையை இழப்பீடாக பெறுகிறார்கள். டேபிள் டென்னீஸ் வீரர் சந்திரசேகரும் நடிகை ஸ்ரீதேவியும் உதாரணங்கள்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த தலைமுறை மருத்துவர்களிடம் காணப்பட்ட சேவை மனப்பான்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் புதிய மருத்துவர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டு, அதேநேரத்தில், இளைய தலைமுறை மருத்துவர்கள் சிலர், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்துவதும், இலவச சிகிச்சை வழங்குவதும், வலிய போய் கிராமங்களில் சேவை புரிவதும் பாராட்டுக்குரிய, மறுக்க முடியாத உண்மை. இதற்கு திருஷ்டி பரிகாரமாக, வியாபார நோக்கில் செயல்படும், கவனக் குறைவுடன் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் பலர், இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.
சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் 130 மருத்துவர்கள் மீது தொழில் தர்மத்தை மீறியதற்காகவும், தவறான சிகிச்சை முறைகளை கையாண்டதற்காகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டது வரவேற்க வேண்டிய செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உண்மையில் நடக்கப் போவது என்னவென்றால், இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெறும் காகிதத்தால் இருக்கப் போகிறது என்பதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இதனால் கிஞ்சித்தும் பாதிக்கப்படப் போவதில்லை என்பதுதான்.
தொழில் தர்மத்தை மீறுகின்ற மருத்துவர்கள், கவனக் குறைவாக சிகிச்சை அளிப்பவர்கள் ஆகியோர் தண்டிக்கப்படுவது என்பது அவசியம். காரணம், அவர்கள் மனித உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, தங்களை நம்பி சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளின் நம்பிக்கையை தகர்க்கிறார்கள் என்பதும்கூட. இதை பொறுப்புணர்வுடன் மருத்துவம் பார்ப்பவர்கள் வலியுறுத்துவார்கள் என்பது நிச்சயம்.
கவனக்குறைவுடன் செயல்படுகின்ற, தொழில் தர்மத்தை மீறுகின்ற மருத்துவர்கள் குறித்து புகார் வந்தால் அதை விசாரிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்திய மருத்துவக் கழகத்துக்கு அதிகாரம் உண்டு. ஒரு மாதத்திலிருந்து 7 ஆண்டுகள் வரை அந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக் கழகம் தடை விதிக்க முடியும். இந்த வழிமுறைகள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டவை. இதற்கான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்தும் பொறுப்பு இந்திய மருத்துவக் கழகத்துக்கும் மாநில மருத்துவக் கழகங்களுக்கும் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலவரம்புக்குள், மருத்துவர்கள் மீது கூறப்படும் புகார்களை விசாரித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மாநில மருத்துவக் கழகங்களுக்கு உண்டு. அப்படி எடுக்கப்பட்ட முடிவின்மீது அதிருப்தி இருக்குமேயானால், மருத்துவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இந்திய மருத்துவக் கழகத்திடம் மேல்முறையீடு செய்யலாம்.
இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறி. மிகக் குறைந்த அளவு மருத்துவர்கள்தான் தண்டிக்கவோ, கண்டிக்கவோப் படுகிறார்கள். புகார் தெரிவித்தவர்கள் விசாரணை என்கிற பெயரில் அலைக்கழிக்கப்படுவதும், நெடுந்தூரம் பயணித்து ஒவ்வொரு விசாரணையை எதிர்கொள்வதும் வேதனையான உண்மை. இவ்வளவு செய்த பிறகும், கடைசியில் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிற நிஜத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.
தவறிழைத்ததற்காக இந்திய மருத்துவக் கழகம் தண்டிக்கப் பரிந்துரைத்தவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் பதிவு தற்காலிக முடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மாநில மருத்துவக் கழகங்கள் அந்த மருத்துவர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெறுவதற்காக காலம் தாழ்த்துவது என்பது வழக்கமாகிவிட்டது.
நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுவிட்டால், தவறிழைத்த மருத்துவர்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அந்த தடை நீங்குவதற்கு பல ஆண்டுகள் கடந்து விடும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் சலித்து ஓய்ந்துவிடுவார்கள். சில புகார்களில் இந்திய மருத்துவக் கழகம் தண்டித்தப் பிறகு, மறு விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டு, தண்டனையிலிருந்து தப்பியவர்களும் உண்டு.
மருத்துவம் என்பது மகத்தான சேவை. பல மருத்துவர்கள் நோயாளிகளால் தெய்வமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். மருத்துவத்தை சேவையாகவும் தொண்டாகவும் மேற்கொள்பவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்து போற்றப்படுகிறார்கள். இந்த நிலையில், இந்திய மருத்துவக் கழகம் தவறிழைக்கும் மருத்துவர்களை இனம் கண்டு தண்டிக்காமல் விட்டால் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களையும் மக்கள் வெறுக்கும் நிலைமை ஏற்பட்டு விடும்.
No comments:
Post a Comment