Sunday, December 6, 2015

மழை சற்று ஓய்ந்ததால் சென்னை மக்கள் நிம்மதி; ஒரு சில பகுதிகளில் இயல்புநிலை மெதுவாக திரும்புகிறது; இன்னும் வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு-- நிவாரண பணிகள் தீவிரம்; வெளியூர்களுக்கு பஸ்- ரெயில்கள் ஓட தொடங்கின

logo
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST

மழை சற்று ஓய்ந்ததால் சென்னை நகரில் சில பகுதிகளில் மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது. வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு–நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள் ஓட தொடங்கின.
`
சென்னை,

கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து உலுக்கிவிட்டது.

மீட்புப்பணி

மழை வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். உணவு, பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர், மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இயல்புநிலை திரும்புகிறது

தற்போது மழை சற்று ஓய்ந்து இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் விடுவிப்பது குறைந்துள்ளதால் அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளத்தின் அளவு சற்று குறைந்து உள்ளது. சில பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கி இருப்பதால், அங்கு மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப்பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தினர். ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து இருந்தனர்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்கள் குவிந்தன.

மின்சார ரெயில் சேவை

மழை வெள்ளத்தால் பாதித்திருந்த சென்னை புற நகர் மின்சார ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்திருந்தாலும், தற்போது எழும்பூர்–தாம்பரம் இடையே மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு சேவையை பொறுத்தமட்டில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகள், செல்போன் சேவைகள் ஓரளவு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன.

தென் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளத்தால் மின் விபத்துக்கள் நேராமல் தடுக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இப்போது நிலைமைக்கேற்ப, மின் சப்ளை மீண்டும் தொடங்கி உள்ளது.

வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஏராளமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் மற்றும் சென்னை வழியாக செல்லும் ரெயில்களும் நாளை (7–ந் தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. என்றாலும் நேற்று முதல் ரெயில்கள் ஓடத் தொடங்கின.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கான கட்டணம் (கிளார்க் கட்டணம் மட்டும் கழித்து) முழுமையாக திரும்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.டி.ஆர். என்னும் டிக்கெட் டெபாசிட் ரசீதை அளித்து கட்டணங்களை திரும்பப் பெறலாம்.

டிசம்பர் 1–ந் தேதியில் இருந்து ரத்தான டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 4–ந் தேதியில் இருந்து 10–ந் தேதி வரையில் டிக்கெட் டெபாசிட் ரசீது வழங்கப்படும். ரெயில் புறப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு ‘ரீபண்ட்’ விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிவாரண பணிகள் தீவிரம்

மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. வெள்ளம் வடியாத இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புறநகர் பகுதிகளான மணலி, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், பழைய மாமல்லபுரம் சாலை, வரதராஜபுரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை போட்டன.

ராணுவ தளபதி தகவல்

மழை, வெள்ளத்தின் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி தல்பீர் சிங், சென்னை வந்து உள்ளார். நேற்று அவர் 2–வது நாளாக விமானத்தில் பறந்து வெள்ள சேத நிலைமையை ஆய்வு செய்தார். அவருடன் பொது கட்டளை அதிகாரியும் சென்று இருந்தார்.

இது தொடர்பாக ராணுவம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘சிவில் நிர்வாகத்துக்கு தேவைப்படுகிறவரை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள், மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். தேவைக்கேற்ப கூடுதலான படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கூடுதலான பொறியியல் சாதனங்களுடன், மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என ராணுவ தளபதி தல்பீர் சிங் தெரிவித்து இருக்கிறார் என கூறப்பட்டு உள்ளது.

தாம்பரம்

வெள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்து 500 பேரை ராணுவத்தினர் பத்திரமான இடங்களுக்கு மீட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

‘தாம்பரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், டிபன்ஸ் காலனி, தி.நகர், கோட்டூர்புரம், காசி தியேட்டர், பெருங்குடி மற்றும் பிற பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியில் உள்ளன. வெள்ளத்தால் ஏற்படுகிற உடல் நல பாதிப்புகளை சந்திக்கிற வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருந்தகங்களுடன் அமைப்பதற்கு ராணுவம் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது’ எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை

ராணுவ வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தாம்பரம், முடிச்சூர், கோட்டூர்புரம், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளையும், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் பணிகளையும், அந்த படையின் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

16 ஆயிரம் பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு–நிவாரண பணியில் 20 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குழு, இப்போது புதிதாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ஏறத்தாழ 1,600 வீரர்கள், ஐம்பது குழுக்களாக பிரிந்து மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 21 அதிகாரிகளும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர். எங்கள் படையினர், இதுவரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த அளவுக்கு வீரர்களை ஈடுபடுத்தியது இல்லை.

200 படகுகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் தவித்த 16 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இரவு–பகலாக...

தொடர்ந்து மீட்புப் பணி இரவு–பகலாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பொருட்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், மீண்டும் மழை தொடங்குவதற்கு முன் நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில் எங்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் கூட்டம்

இதற்கிடையே டெல்லியில் சி.எம்.ஜி. என்னும் நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டம், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ராணுவம், உணவு, ரெயில்வே, விவசாயம், சுகாதாரம், தொலை தொடர்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத்துறை, தேசிய பேரிடர் படை உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை வெள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இயன்றவரையில் குடிநீர், பால், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சென்றடைவதற்கு தேவையான பணிகளை முழுவீச்சில் நடத்துமாறு அதிகாரிகளுக்கு ராஜீவ் மகரிஷி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024