Thursday, December 10, 2015

ஆனந்த விகடன் - 16 Dec, 2015

vikatan.com
வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
ப.திருமாவேலன்
‘‘மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும் அதனால் சேதங்கள் விளைவதையும் தவிர்க்க இயலாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசியதைப் படித்தால், ‘நியாயம்தானே’ என்று தோன்றும்!
‘போர் என்ற ஒன்று நடந்தால் மக்கள் இறக்கத்தானே செய்வார்கள்?’ என்று சொன்னவர்தானே இந்த ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்தி யோசித்தால்தான், ‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ என்ற சமாளிப்பும், ‘இதெல்லாம் தலைவிதி’ என்ற சால்ஜாப்பும் புலப்படும். ‘எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக் குற்றம் சொல்லலாமா?’ என்றால், ‘ஆக்கவும் அழிக்கவும் வல்லது அரசு’ என்பதால் அதுதானே பொறுப்பேற்க வேண்டும்? `நான் உத்தரவிட்டேன், எனது தலைமையிலான அரசு, எனது அரசு' என்று எல்லாவற்றுக்கும் தானே என்று சொல்லிக்கொள்கிற ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலத்தில் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட விதம், ‘எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
ஏரிகளைக் காப்பாற்றவில்லை, ஏரிகளைத் தூர்வாரவில்லை, நீர்நிலைகள் வீடுகளாக மாற்றப் பட்டுவிட்டன, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வசதி செய்யப்படவில்லை, மழைநீரை சேகரிக்கவில்லை, பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்தவில்லை, உலக அழிவுகளில் இருந்து பாடம் கற்கவில்லை, தமிழ்நாட்டில் எவை எல்லாம் பேரிடர் பகுதிகள் என இனம் காணவில்லை, கடல் அறிவியல் அறியவில்லை, புவி அறிவியல் புரியவில்லை, வளி மண்டல அறிவியல் தெரியவில்லை.... என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு ஜெயலலிதாவைக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தனிப்பட்ட ஜெயலலிதாவால் இதில் எதையும் செய்ய முடியாது. ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் எதையும் செய்திருக்கவும் முடியாது. ஆனால், ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, இந்த ஒரு மாத காலத்தில் தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் நூறாண்டுகளில் பார்க்காத துன்ப துயரத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
பூகம்பத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்துப்போனபோது ஒரு விஞ்ஞானியிடம் போய் அதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.அவர் சொன்னார், ‘‘பூகம்பத்தால் இத்தனை ஆயிரம் பேர் சாகவில்லை. கட்டடங்களால் செத்துப் போனார்கள்” என்று!
அதேமாதிரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் வரலாறு காணாத வதை முகாமாக மாறியதற்குக் காரணம் மழை மட்டும் அல்ல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரசும்தான்!
ரமணன் சொன்னால் போதுமா?
மழை எப்போது வரும், எப்போது நிற்கும்,  இது கனமழையா, அதிக கனமழையா, இது புயலா, வடகிழக்கு பருவமழையா? - இது எதுவுமே மக்களுக்குத் தெரியாது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் மழை வரும், வானம் வெளுத்துவிட்டால் மழை வராது - இது மட்டும்தான் மக்களுக்குப் புரிந்த அறிவியல். இவ்வளவு மழை பெய்யும், இதனால் பாதிப்பு இவ்வளவு இருக்கும் என மக்களுக்குத் தெரியாததால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சொல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இந்த ஒரு மாதத்தில் ஒரே ஓர் அறிக்கையாவது அரசாங்கத்திடம் இருந்து வந்ததா?
‘அதுதான் ரமணன் சொல்லிவிட்டாரே...’ எனச் சொல்லலாம். ரமணனின் வேலை மழை வருமா, அது கனமழையா என அறிவிப்பது மட்டும் தான். அதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும் எனச் சொல்வது ரமணனின் வேலை அல்ல. பருவ நிலை மாற்றத்தை அறிவிக்கிற ரமணன், மக்களைப் பயமுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது அவரது பணி நெறிமுறைகளில் ஒன்று. எனவே, அவர் `புயல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார். `காற்றழுத்தத் தாழ்வு நிலை’ என்று சொல்வார். ஆனால், அது மக்க ளுக்குப் புரியுமா? `புயல்’ என்று சொன்னால்தான் மக்களுக்குப் புரியும்.
புரியும் மொழியில் அரசு அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலவரம் சொல்வதைப்போல இந்த ஒரு மாத காலம் இதற்காக ஓர் அதிகாரியைப் போட்டு பருவநிலை நிலவரம் சொல்லி இருந்தாலே, மக்கள் பாதிப் பேரின் துன்பம் குறைந்திருக்கும். தாழ்வான ஏரிப் பகுதியில் இருப்பவர்கள் இடம் மாறி இருப்பார்கள். பலர் வெளியூர் போயிருக்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தருகிறது, உலகின் பல்வேறு நாடுகளின் பருவநிலை மாற்ற இணைய தளங்களில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்குத் தகவல் தருவதைவிட தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு என்ன வேலை... புகைப்படங் களை வெட்டி ஒட்டுவது மட்டும்தானா?
இதை எல்லாம் ஏன் செய்யவில்லை என்றால் மழை வருவதையே, மழை பெய்வதையே இவர்கள் மறைக்க நினைத்தார்கள். சொத்துப் பரிமாற்றங் களை மறைக்கலாம்; ஒவ்வொருவர் தலையிலும் பெய்யும் மழையை மறைக்க முடியுமா? நாட்டில் அதிக மழை பெய்ததற்கு ஜெயலலிதா காரணம் அல்ல. அவர் நினைத்தாலும் மழையைத் தடுக்க முடியாது. ஆனால், அவர் நினைத்திருந்தால் மழையின் பாதிப்பைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
`இந்தந்த நாட்களில் மழை பெய்யும், இதுவரை பார்க்காத பெருமழையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பிட்ட மாவட்டத்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அரசு இன்னின்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளது, இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என அறிக்கை விடுத்து பொதுமக்களை தயார்ப்படுத்தாமல் மௌனம் சாதித்ததுதான் பேரழிவுக்கு பெரிய காரணம்!
மாற்று இடம் அறியாத மக்கள்!
மழை கொட்டித் தீர்த்துவிட்டது. அடையாறு, கூவம் ஆற்றோரங்களில் வசிப்பவர்களுக்கு உடனடியாக அருகில் இருந்த பள்ளிகளில் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து தரப்பட்டன. மாநகராட்சி சமூகநலக்கூடங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் போய் அந்த மக்கள் தங்கிவிட்டார்கள். ஆனால், இந்த மழை ஆற்றோரங்களில் இருப்பவர்களை மட்டுமல்ல, நகர்ப்பகுதியில் இருப்பவர்களையும் அதிகமாகப் போட்டுத் தாக்கியது. இந்த மக்கள் எங்கே போவது எனத் தெரியாமல் தவித்த தவிப்பே அழிவின் உச்சம்.
முதல் மாடியையே மூழ்கடிக்கும் தண்ணீர் வந்த பிறகு... போட்டுகளில் வெளியேறிய மக்கள் தரைக்கு வந்த பிறகு... போகும் இடம் தெரியாமல் தவித்தார்கள். நோயாளியான வயது முதிர்ந்த பெற்றோரையும், பால் மணம் மாறாப் பிஞ்சுக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு சாலையில் சொந்த நாட்டு அகதிகளைப்போல நின்றார்கள். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்களோடு தொடர்புகொள்ள செல்போன் வேலை செய்யவில்லை, நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை அறிய மின்சாரம் இல்லை; கும்மிருட்டு. போகும் இடம் தெரிந்தாலும் வாகனம் எதுவும் கிடையாது; கடைகள் கிடையாது; உணவகங்கள் கிடையாது; பணம் எடுக்க ஏ.டி.எம் கிடையாது; ‘அரசாங்கமும் கிடையாது’ என்பதை அப்போதுதான் மக்கள் உணர்ந்தார்கள்.
`எல்லா பள்ளிக்கூடங்களையும் திறந்துவையுங்கள், அனைத்துத் திருமண மண்டபங்களையும் திறந்துவிடுங்கள், யாரும் வந்து தங்கலாம்' என்று அரசாங்கம் ஒரே ஓர் அறிக்கை விட்டிருந்தால் மக்களுக்கு பெரிய நம்பிக்கை பிறந்திருக்கும். ‘நான் இருக்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மக்களிடம் பேசும்போது ஜெயலலிதா சொன்னார். ஆனால் செய்தாரா? பெரிய பெரிய நிறுவனங் களில் வேலை பார்த்து, லட்சக்கணக்கில் பணம் போட்டு வீடு வாங்கி, கௌரமாக வாழ்வதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் இரவு உடைகளோடு மனைவி பிள்ளைகளைக் கையில் பிடித்தபடி வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஏதோ ஒரு சேவா சங்கம் கொண்டுவந்த சாம்பார் சாதத்தை முட்டி மோதி வாங்கி, கண்ணீரும் கம்பலையுமாக சாப்பிட்ட காட்சி நல்லாட்சியில் பார்க்க வேண்டிய காட்சியே அல்ல. வேளச்சேரி மக்களுக்கு இந்த இடம், அண்ணாநகர் வாசிகளுக்கு இந்த இடம் என அறிவித்துச் சோறு போடக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையா... மனம் இல்லையா... நேரம் இல்லையா?
ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காகவும் சிறையில் இருந்து விடுதலையாவதற்காகவும் கோடிக் கணக்கில் யாகம் நடத்தி, விருந்து படைத்த மந்திரி துரைகள் எங்கே போனார்கள்... கான்ட் ராக்டர்கள், கமிஷன்காரர்கள் எங்கே போனார்கள்... சாலை போடுவதாகச் சுருட்டியவர்கள் சாம்பார் சாதம் போட்டாலாவது பாவம் குறைந்திருக்குமே? ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?’ என்று பாரதி கேட்டது அடிமை தேசத்தில்... அம்மா தேசத்திலுமா?
அத்தியாவசியப் பொருட்களுக்கே அலைச்சல்!
பாலுக்கு அலைந்த பரிதாபக் காட்சிகளே சென்னையில் அதிகம். ‘பால் இல்லை’ என்று எல்லாக் கடைகளிலும் எழுதிப் போட்டார்கள். ‘பால் பவுடர்’ இல்லை என்று மருந்துக் கடைகளில் எழுதி வைத்தார்கள். அரை லிட்டர் பால் கிடைக்காதா என்று அலைந்த முகங்கள் ஏக்கத்தால் வெளிறிப் போயிருந்தன. இரண்டு மூன்று சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆவின் பால் லாரி வரவில்லை என்று முதல் நாள் சொன்னார்கள். சாலைகள் சரியான பிறகும் புறநகர் பகுதிக்கு பால் வரவில்லை. இதைவிட அநியாயம், பால் பூத்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை. ஆனால், தனியார் கடைகளில் ஆவின் பால் தாராளமாகக் கிடைத்தது. 20 ரூபாய் பால் பாக்கெட், 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தனியார் கடை களுக்கு மட்டும் தனியாக ஆவின் நிறுவனத்தை அரசாங்கத்துக்குத் தெரியாமல் யாராவது நடத்த முடியுமா? ஒரு வைத்தியநாதனைக் கைது செய்து வெளியே விட்டுவிட்டார்கள். இன்னும் ஆயிரம் வைத்தியநாதன்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது. ‘60 ரூபாய்க்கு விற்பது நியாயமா?' என்று கேட்டால், ‘50 ரூபாய்க்கு நான் வாங்கி வந்திருக்கேன்’ என்று கடைக்காரர் சொல்கிறார். அப்படியானால் 50 ரூபாய்க்கு விற்றவர் யாருக்கு பங்கு தர விற்கிறார் என்று கேட்டால், அதற்கும்  அவதூறு வழக்கு பாயுமோ?
30 ரூபாய் வாட்டர் கேன் 90 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காய்கறிகள் விலை சொல்லவே வேண்டாம். `கிடைத்தது லாபம்' என வியாபாரிகள் கொள்ளை அடிக்க, கேட்பார் இல்லாத அதிகாரிகள் இருப்பதுதானே காரணம்? பேரழிவுக் காலத்தில் அம்மா உணவகங்கள், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், உணவுப் பொருள் கிடங்குகள் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தி 
இருந்தால், மக்கள் அன்றாட உணவுப் பொருட்களுக்காக அலைந்து திரிந்ததைத் தடுத்திருக்க முடியும்.
இந்தக் காரியங்களை ஒழுங்காகப் பார்த்திருந்தால் மக்கள் எத்தகைய மழையையும் தாங்கும் தைரியத்தைப் பெற்றிருப்பார்கள். அதைச் செய்யாமல், ஓர் அரசாங்கம் தலைமறைவு ஆனது தான் தமிழ்நாட்டு மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. நாளை இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டோருக்கு தலைக்கு 5,000 ரூபாய் கொடுக்கலாம், ஆபத்து நேரத்தில் வராமல், ஆறு மாதங்கள் கழித்து பணம் கொடுத்தால் அந்த மனிதனுக்கும் பயன்படாது... தேர்தலுக்கும் பயன்படாது!
வரலாற்று மழை மட்டுமா... வரலாற்றுப் பிழையும் இதுதான்! 

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...