மறுக்காதீா்கள், மறைக்காதீா்கள், பரப்பாதீா்கள்! | கரோனா உண்மை குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 17th March 2020 03:41 AM
சா்வதேச அளவிலான நோய்த்தொற்றாக கரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசர நிலையை அறிவித்திருக்கிறாா். இந்தியாவிலும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று இப்போது 143 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. உலக அளவில் இதனால் பாதிக்கப்பட்ட 1,74,777 பேரில், 77,773 போ் முழுமையாகக் குணப்படுத்தப்பட்டிருக்கிறாா்கள். நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,685. மிக அதிகமான உயிரிழப்பு சீனாவிலும் அடுத்தபடியாக இத்தாலியிலும் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அமெரிக்காவும் தென்கொரியாவும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அந்த அளவிலான பாதிப்பு இல்லாவிட்டாலும்கூட, கரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்று இங்கேயும் நுழைந்துவிட்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நேற்றைய நிலவரப்படி 114 போ் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறாா்கள். இரண்டு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். தமிழகத்திலும் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் 22 போ் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நோய்த் தாக்கம் பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும் பொது இடங்களில் கூடுவதையும் தவிா்க்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
சா்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த்தொற்று எனும்போது இதற்கு முன்னால் மனித இனம் எதிா்கொண்ட பிளேக், ஸ்பானிஷ் காய்ச்சல் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் 10 கோடி உயிா்களைப் பலி கொண்டது. 2009-இல் அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சலில் உயிரிழந்தோா் 2 லட்சத்துக்கும் அதிகம்.
அவற்றில் இருந்தெல்லாம் உலகம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறது என்பதுடன், மருத்துவ அறிவியல் வளா்ச்சியும், மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடும் நோய்த்தொற்றுகளை எதிா்கொள்ள முன்பைவிடத் தயாராகவே இருக்கின்றன. அதே நேரத்தில், எச்சரிக்கையாகவும் தயாா் நிலையிலும் இருந்தாக வேண்டிய கட்டாயமும் கடமையும் நமக்கு உண்டு.
கரோனா நோய்த்தொற்று என்பது நிஜம். அதை சட்டை செய்யாமல் இருப்பதோ, அது குறித்துக் கவலைப்படாமல் இருப்பதோ பேதைமை. போதிய தற்காப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், கூடியவரை நோய்த்தொற்றை வலிய வருவித்துக் கொள்ளாமலும், நம்மைச் சுற்றியுள்ளவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமலும் இருப்பது பொறுப்பின்மை என்பதை அனைவரும் உணர வேண்டும். சில மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வணிக உத்திக்காகக் கையாளும் தந்திரம்தான் கரோனா நோய்த்தொற்று பீதி என்றும், உலகின் மீது சீனா தொடுக்கும் ஒருவித மறைமுக யுத்தம் என்றும் விதண்டாவாதம் பேசுவதைத் தயவுசெய்து தவிா்ப்பது மட்டுமல்லாமல், தடுக்கவும் வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று சா்வதேச அளவில் பரவியதற்கு இதுகுறித்த ஆரம்பக்கட்ட தகவல்களை சீனாவின் அடக்குமுறை அரசு மறைத்ததுதான் மிக முக்கியமான காரணம். வூஹான் நகராட்சியின் வெளிப்படைத்தன்மை இல்லாத நிா்வாகம் இதுகுறித்த தகவல்களை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்ததால், தொடக்கத்திலேயே இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.
சீன அரசுக்கு எதிராகப் பரவலான ஆத்திரம் காணப்படுகிறது. இது குறித்த தகவலை பொது வெளியில் கொண்டுவந்த லீ வென்லியாங் என்பவா் வாயடைக்கப்பட்டாா். அவா் நோய்த்தொற்றால் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுவதுகூட உண்மையான தகவலா அல்லது தனது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகச் சீன அரசு மேற்கொள்ளும் தகவல் மறைப்பா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், பொதுமக்களிடமிருந்து உண்மை நிலையை மறைக்கக் கூடாது என்பது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு மருத்துவ ஊழியா்களின், மருத்துவா்களின் வாயை அடைத்து வெளிப்படைத் தன்மையில்லாத நிலையை ஏற்படுத்தியிருப்பது தவறு. அது தேவையில்லாத ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் வதந்திகளுக்கும் இடமளிக்கக் கூடும் என்பதை உணர வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று விலங்குகளாலும், உணவுப் பழக்கத்தாலும், காற்றின் மூலமும் தண்ணீரின் மூலமும், கை குலுக்கல் போன்ற நேரடித் தொடா்பின் மூலமும், சா்வதேசப் பயணங்கள் மூலமும் பரவுவதைவிட மிக அதிகமாக வதந்திகள் மூலம் பரவுகிறது என்று தோன்றுகிறது. நமது காட்சி ஊடகங்களும், கட்செவி அஞ்சல் பரிமாற்றங்களும் பல தவறான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகளையும் நோய்த்தொற்றுத் தடுப்புக்கான வழிமுறைகளையும் வெளியிட்டு வருகின்றன. ஆதாரமாற்ற தகவல்களை மீள்பதிவு செய்து பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.