பெருந்தொகை ரூபாய் நோட்டுக்கும், சில்லறை நோட்டுக்குமான பிரச்னையில் சிக்கித்தவிக்கிறார்கள் சாமானிய மக்கள்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பு, கிட்டத்தட்ட சாமானிய மக்களை முடக்கி போட்டுள்ளது. கடந்த 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் சரித்தரத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கு முக்கியமான பங்கு வகிக்கும் தருணங்கள் அரிதாகவே வரும். அப்படியான சந்தர்ப்பம் தான் இது. மக்கள் சில கஷ்டங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இரு தினங்களில் நிலைமை சீராகும்," என பேசினார்.
"செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். இரு தினங்களில் நிலைமை சீரடையும். பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.நவம்பர் 25ம் தேதி வரை 4 ஆயிரம் பணம் எடுக்கலாம். அதன் பின்னர் அது மாற்றியமைக்கப்படும்," எனவும் மோடி தெரிவித்திருந்தார்.
2 நாட்கள் இப்போது 20 நாட்களாகி விட்டன. ஆனால் நிலைமை சீரடையவில்லை. சொல்லப்போனால் மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது. பிரதமர் மோடி சொன்னது ஒன்று. ஆனால் இப்போது நடப்பது ஒன்று.
அரசின் மிக மோசமான திட்டமிடலால் சாமானிய மக்கள்சொல்ல முடியாத சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மோசமான இந்த 20 நாட்கள்...
டிசம்பர் 30ம் தேதி வரை பணத்தை மாற்றிக்கொள்ளலாம். நவம்பர் 25ம் தேதி வரை ஒருவர் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவித்திருந்தார் மோடி. நவம்பர் 25ம் தேதிக்கு பின்னர் இந்த வரம்பு உயர்த்தப்படும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் 'நவம்பர் 25ம் தேதி வரை மட்டுமே மாற்ற முடியும். அதன் பின்னர் வங்கிகளில் மாற்ற முடியாது' என அறிவித்து விட்டார்.
உங்களிடம் சில 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றால் அதை மாற்ற நீங்கள் ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டும்.ஒரு நாளைக்கு 2 ஆயிரம் தான் தரப்படும். நெருக்கடியான சூழலை சொன்னால், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயை பெறலாம். கோயமுத்தூரில் இருந்து உங்களிடம் உள்ள 2 ஆயிரத்தை மாற்ற நீங்கள் சென்னை வந்து சென்றால் உங்களுக்கு மிக குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகும்.
திருவாரூரில் இருந்து வந்த ஒருவர் ரிசர்வ் வங்கியில் தன்னிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ரூபாய் நாணயங்கள் 200ஐ வாங்கி சென்றிருக்கிறார். "நான் இங்கு வந்த ரயில் கட்டணம், உணவு எல்லாம் சேர்த்து ஆயிரத்துக்கும் மேல் செலவாகி விட்டது. என்னுடைய உழைப்பு விரையமாகி இருக்கிறது. 30ம் தேதி வரை மாற்றலாம் என்றார்கள். இப்போது ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற முடியும் என சொல்லி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றார்.
வங்கிகளிலேயே பணமில்லை
மறுபுறம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் வங்கிகள் பணமில்லை. நிலைமை சீரடைய 2 நாட்கள் எனச்சொன்னது இப்போது 50 நாட்கள் ஆகியிருக்கிறது. ஏற்கனவே 20 நாட்கள் கழிந்து விட்டது. ஏ.டி.எம்., வங்கி என எங்கும் பணமில்லை. புதியதாக வருவதாக சொல்லப்பட்ட ரூ.500 பணம் இன்னும் பெரும்பான்மை மக்களை சென்று சேரவில்லை.
செயல்பாட்டில் இல்லை என ஏ.டி.எம். மையங்களும், பணமில்லை என வங்கிகளும் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டிருக்கின்றன. ஏ.டி.எம். மையங்களில் அறிவித்த நாள் முதல் இந்த நிலை தான் என்பதால் அதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கிகளிலேயே பணமில்லை என்றால், நிலைமையின் விபரீதம் அதிர்ச்சியளிக்கிறது.
என்ன தான் நடக்கிறது என சாமானிய மக்களுக்கு புரியவில்லை. புரியவைக்கவும், சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை.
தொடர் பரிதவிப்பில் சாமானியர்கள்
பிரதமர் மோடி அறிவித்த போது 'கறுப்பு பணம் ஒழியும், கள்ள நோட்டுகள் இனி இருக்காது. ஊழல் என்பது காணாமல் போய் விடும்' என்றே சாமானியர்கள் நினைத்தார்கள். நம்பினார்கள். சொல்லாப்போனால் இன்னும் பெரும்பான்மையானோர் நம்புகிறார்கள். ஆனால் இந்த 20 நாட்களில் இவையெல்லாம் சாத்தியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளதை மறுக்க முடியவில்லை. எந்த பணக்காரர்களும் வங்கியில் வரிசையில் நின்று பணத்தை செலுத்தவில்லை. 'கணக்கில் வராத பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை. பெரும்பகுதி தங்கமாக, ரியல் எஸ்டேட்களில் முடங்கி இருக்கிறது. இதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை' என்ற பேச்சு பரவலாக கேட்கத்துவங்கியுள்ளது.
இந்த 20 நாட்களில் பல இடங்களில் புதியதாக வந்த 2000 ரூபாய் நோட்டின் கள்ள நோட்டுகள் வரத்துவங்கி விட்டன. 'ஆயிரம் ரூபாயை ஒழித்து விட்டு, 2 ஆயிரம் ரூபாய் கொண்டு வருவது ஊழலை எப்படி ஒழிக்கும். ஊழல் செய்த பணத்தை பதுக்குவதை இது எளிதாக்கத்தானே செய்யும்' என்ற கேள்வியையும் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.
ஆனால் இன்னும் பொறுமையோடு தான் இருக்கிறான் சாமானியர்கள். 'கையில் பணமில்லை. அத்தியாவசிய செலவுகளை கூட செய்ய முடியவில்லை. வேலை இல்லை. தொழில் முடங்கி விட்டது' என ஏராளமான சிரமங்களுக்கிடையே விரைவில் பிரச்னை சரியாகும் என்று பொறுமையோடு காத்திருக்கிறார்கள் சாமானியர்கள்.
"இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். மக்கள் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள். ஒருவேளை நாட்டில் கலவரமே வெடிக்கலாம்" என உச்சநீதிமன்றமே கவலைப்பட்டது. ஆனால் அரசிடம் அந்த கவலை இருப்பதாக தெரியவில்லை.
2 நாட்கள் ஏன் 50 நாட்கள் ஆனது?
8ம் தேதி இரவு தான் இந்த பொருளாதார சீர்த்திருத்த முடிவை அறிவித்தார். 9ம் தேதி வங்கி இருக்காது. 9,10 தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் இருக்காது. 10ம் தேதி முதல் வங்கிகளிலும், 11ம் தேதி முதல் ஏ.டி.எம்.களிலும் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நவம்பர் 25ம் தேதி வரை வங்கியில் தினமும் 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம். ஏ.டி.எம். மையத்தில் தினம் 2,500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார். இருநாளில் சிரமம் சீராகும் என்றார்.
ஆனால் சொன்னபடி 2 நாளில் பிரச்னை சரியாகவில்லை. வங்கிகள், ஏ.டி.எம். முன்னால் கால் கடுக்க காத்திருந்தார்கள் மக்கள். நிலைமை எப்போது சீராகும் என்ற கேள்வி பரவலாக எழுந்த போது, 'நிலைமை சீரடைய 2,3 வாரங்கள் ஆகலாம்' என்றார் நிதியமைச்சர்.
ஆனால் ஒரு படி மேலே சென்று இன்னும் 50 நாட்கள் ஆகும் என்றார் பிரதமர் மோடி.மக்களின் பாதிப்புகள் குறித்த பல கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லை. இது தொடர்பான விரிவான விளக்கத்தை வலியுறுத்திய போதும் அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை. "500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு தொடர்பாக விரிவாகப் பேசுமாறு என்னை சிலர் தொடர்ந்து நெருக்கி வருகின்றனர். நான் முன்பு சொன்ன அதே கருத்தையே திரும்பக் கூறுகிறேன். 50 நாட்கள் நான் அவகாசம் கேட்டுள்ளேன். அதன் பிறகு இதுகுறித்து விரிவாகப் பேசுவேன்," என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் 50 நாட்கள் அல்ல. சில மாதங்கள் இந்த பிரச்னை என்பது தொடரத்தான் செய்யும் எனச்சொல்லி இருக்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.
ஒத்திவைக்கப்பட்ட திருமணங்கள்
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. திருமணங்கள் நின்று போன நிகழ்வும் கூட நடந்திருக்கிறது. குஜராத்தில் 500 ரூபாயில் தண்ணீரும், டீயும் மட்டும் கொடுத்து ஒரு திருமணம் நடந்தது. திருமண வீடுகளில் இருக்க வேண்டி மகிழ்ச்சி முற்றிலும் மறைந்திருந்தது. இதையும் பெருமையாகவே சொன்னார் மோடி. "குஜராத் மாநிலம் சூரத்தில் 500 ரூபாய்க்குள் ஒரு திருமணம் நடந்ததை அறிந்தேன். வெறும் டீ விருந்துடன் அது முடிந்துள்ளது. மக்கள் இதுபோலத் தியாகங்கள் செய்வது என்னை நெகிழ வைக்கிறது," என தெரிவித்தார். அதே நேரத்தில் 500 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் நடந்த ரெட்டி குடும்ப திருமணத்தை பற்றி பேச அவர் மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார்.
திருமணம் நடக்கும் வீடுகளுக்கு 2.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு உள்ளதே என கேட்க கூடும். ஆனால் அதற்கான விதிமுறைகள் என்னவென தெரியுமா?. வங்கியில் நீங்கள் 8ம் தேதிக்கு முன்னர் போடப்பட்ட தொகையை தான் எடுக்க முடியும்.கையில் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்து அதை இப்போது வங்கியில் டெபாசிட் செய்து எடுக்க முடியாது. அதற்கும் ஏகப்பட்ட விதிமுறைகள்.
திருமணத்துக்கு பணம் எடுக்க என்ன விதிமுறை தெரியுமா?
திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களோடு, நீங்கள் திருமண செலவுக்கு யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதற்கான ஆவணத்தையும் நீங்கள் சமர்பிக்க வேண்டும். திருமணத்தில் வாழை மரம் கட்டுபவர்கள் துவங்கி சமையல் செய்பவர்கள் என தின சம்பளத்துக்கு வருபவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதற்கான ஆவணத்தை கொடுத்தால்தான் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். இத்தனை ஆவணங்களையும் கொடுத்தால் கூட உங்கள் வங்கியில் இருந்து பணம் கிடைக்காமல் போகலாம். ஏனென்றால் பெரும்பாலான வங்கியில் பணமில்லை.
"எங்கள் மகளின் திருமணத்துக்காக வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தோம். திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார்கள். கையில் இருந்த தொகையை மாற்ற முடியவில்லை. வங்கியில் இருக்கும் பணத்தையும் எடுக்க முடியவில்லை. எல்லா ஆவணங்களை சமர்பித்தும் பலனில்லை. பணம் கிடைக்கவில்லை. வழக்கமாக எங்கள் வீட்டு விசேஷத்துக்கு சமையல் செய்பவர்கள், நகை செய்யும் பொற்கொல்லரை நான் பயன்படுத்த முடியவில்லை. ரெடிமேடாக நகைகளை பெரிய கடைகளில் வாங்கினோம். வங்கி கணக்கை கையாளும் பெரிய சமையல் காரரை அணுகினோம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ளும் பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் வீட்டு திருமண செலவு இதனால் இரட்டிப்பானது," தொலைக்காட்சியில் வெளிப்படையாகவே சொல்லி இருந்தார் சென்னையைச் சேர்ந்த மிடில் க்ளாஸ் நபர்.
இப்போது இந்த விதிகளை தளர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என சொல்லி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர். விதி தளர்த்தப்படும் என்று கூட அவர் சொல்லவில்லை.
பெரு நுகர்வு கலாச்சாரத்துக்கு தள்ளப்படுகிறோமா?
மறுபுறம் பெரு நுகர்வு கலாச்சாரத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "பணப்பை வைத்திருந்த காலம் எல்லாம் போய் விட்டது. இனி மின்னணுப்பைக்கு மாறுங்கள். நீங்கள் உங்கள் செல்போனை வங்கிக்கிளையாக பயன்படுத்துங்கள். எப்படி செல்போனில் படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறீர்களோ, அதே போன்று இதைச் செய்யுங்கள்" என சாதாரணமாக சொல்கிறார் பிரதமர் மோடி. நாட்டில் வங்கி கணக்கை கையாளதவர்கள் எண்ணிக்கை என்பது 45 சதவீதத்துக்கும் அதிகம். வங்கி கணக்குகள் இத்தனை கோடி புதியதாக துவங்கப்பட்டது என சொன்னாலும், அவை எல்லாம் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அவற்றில் மிகப்பெரும்பாலான கணக்குகள் பயன்பாட்டில் இல்லை. அப்படியே இருக்கிறது.
நம் நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேல் பண பரிவர்த்தனைகள் தான் நடக்கிறது. இன்னும் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. செல்போனை பயன்படுத்த தெரியாத, வங்கி கணக்கை கையாளத்தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படமால் ஒற்றை அறிவிப்பில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து விட்டார் மோடி.
நடுத்தர மக்களின் நிலை மிக மோசம். அவர்களை பெரு நுகர்வு கலாச்சாரத்துக்குள் தள்ளியுள்ளது. காய்கறி விற்பவர்கள் சிறிய மளிகை கடை நடத்துபவர்கள், டீக்கடை, சிறிய உணவகங்கள் என யாரிடமும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் இயந்திரங்கள் இல்லை. தினமும் காய்கறி வாங்க பெரும் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்க்கும், உணவு உட்கொள்ள பெரு உணவகங்களுக்கும் செல்ல வேண்டிய சூழலை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முடி திருத்துவதற்கு கூட பெரும் தொகை செலவிடும் அளவுக்கு பெரும் சலூன் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
பன்னாட்டு உணவகங்களும், குளிர்பானங்களும் இந்தியாவில் கால்பதித்த போது அவர்கள் சொன்னது, "இந்தியாவில் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவதும், தண்ணீர் குடிக்கும் பழக்கங்களும் தான் எங்கள் தொழிலுக்கு எதிரி". இதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. இப்போது பெரு நிறுவனங்களை நோக்கி மக்களை அரசே ஓட வைத்திருக்கிறது.
திட்டமிடல் இல்லாதது தான் காரணம்...
உலகத்திலேயே 85 சதவீத புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்து எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்பது இந்தியாவில் தான். அதுவும் இப்போது தான். இவ்வளவு பெரிய சீர்த்திருத்தத்தை கையில் எடுத்த அரசு, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து யோசிக்காதது ஏன் என தெரியவில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வரவில்லை. வங்கி, ஏ.டி.எம்.களிலேயே பணமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடும் இல்லை.
பணமின்றி அல்லாடுகிறார்கள் மக்கள். 65க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று மரித்துப்போய் இருக்கிறார்கள். 10க்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். வங்கி வாசலில் தங்கள் பணத்தை எடுக்க வருபவர்கள் மிக மோசமாய் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இது குறித்த எந்த கவலையும் அரசுக்கு இருப்பதாய் தெரியவில்லை.
ரூபாய் நோட்டுப் பிரச்சனையால் மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் நிற்பதை பற்றி கேட்டால், 'எல்லையைப் பாதுகாக்க ராணுவ வீரர்கள், ஜவான்கள் நிற்கவில்லையா. அதை விட இது பெரியதா?' என கேட்கிறார். மக்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசினால் அவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்களைப்போல, தேச துரோகிகள் போல பார்க்கப்படுகிறார்கள்.
சற்றும் முன் யோசனை இல்லாமல் பண நடமாட்டத்தை நிறுத்தியதுதான் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம். 85 சதவீத பணத்தை செல்லாது என அறிவிக்கும் போது, 80 சதவீதத்துக்கு மேல் பண பரிவர்த்தனைகள் செய்யும் நாட்டில் எப்படியான பாதிப்புகள் என்பதை யூகிக்க முடியும். புதிய நோட்டுகள் 2 நாளில் கிடைக்கும் என்றார்கள். 500 ரூபாய் நோட்டு இன்னும் வரவே இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெருமளவு புழக்கத்தில் வரவில்லை. 100, 50 என செலவு செய்யும் மக்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து என்ன செய்வது என தெரியவில்லை.
2 டிசைன்களில் புதிய ரூபாய் நோட்டுகள்
நாட்டில் சில பகுதிகளில் தான் 500 ரூபாய் நோட்டு கிடைக்கிறது. அதுவும் 2 டிசைன்களில். அரசு அச்சடித்து வெளியிட்டதே இரு வடிவங்களில் வெளியாக அதிர்ந்து போய் உள்ளார்கள் மக்கள். கள்ள நோட்டு என சந்தேகம் எழுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்க, தவறு நடந்து விட்டது. கள்ள நோட்டு என பயந்தால் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. ஆனால் இதில் எது சரி? எது தவறு என்பதை மக்கள் எப்படி உணர்வார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இதுவரை ரூபாய் நோட்டு அச்சிடுவதில் தவறு நிகழ்ந்ததாக தெரியவில்லை. அதையும் இப்போது நிகழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே ரூபாய் நோட்டுகளே கிடைப்பதில்லை. இது போன்ற சூழலில் ரூபாய் நோட்டுகளை பெறவும் பெரும்பாலானோர் தயங்குகின்றனர். சில்லறை பிரச்னையால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
'கறுப்பு பணத்தை ஒடுக்கும் போரில் சாமானியர்களே, முன்னணி படை வீரர்களாக இருக்கிறார்கள்' என்கிறார் பிரதமர் மோடி. முன்னணி படைவீரர்கள் தான் போரில் முதலில் பலி கொடுக்கப்படுகிறார்கள்' என்ற அர்த்தத்தில் அவர் சொன்னாரா தெரியவில்லை. ஆனால் படைவீரர்களை பலி கொடுக்கும் நிகழ்வாகத்தான் இது அமைந்திருக்கிறது.
சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது... சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது' என்கிறார்கள். அந்த சிலர் சாமானியர்களாக இருப்பது தான் வேதனை.
- ச.ஜெ.ரவி,