Saturday, April 25, 2015

பி.இ.: 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்

பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:-

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பெற மே 27-ஆம் தேதி கடைசி நாள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

விடுமுறை நாள்களில் கிடையாது: ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

ஆன்-லைனில் பதிவிறக்கம்: பி.இ. விண்ணப்பத்தை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இடங்களை விட கூடுதலாக 50 ஒதுக்கப்பட்டு 100 ஆக அதிகரித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் செவிலியருக்கான தேவையும், பணிவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இதற்காக சிறந்த முறையில் செவிலியர் பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 23 செவிலியர் பயிற்சி பள்ளிகள் மருத்துவமனை வளாகங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரையில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் சேர்க்கப்பட்டு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. இதில், மருத்துவக்கல்லூரி செயல்படும் மாவட்டங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சி பெற இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

அதேபோல், மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பயிற்சி பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைப்படி ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் 100 மாணவிகள் இருக்க வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், திண்டுக்கல், கன்னியாகுமரி, ஊட்டி, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற 18 மாவட்டங்களில் 50 இடங்களாக இருந்ததை, 50 இடங்கள் உயர்த்தி 100 பேர் வரையில் சேர்ப்பதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் பயிற்சி பள்ளியின் முதல்வர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

இதுவரையில் விருதுநகர் மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளியில் 50 ஆக இருந்த இடங்கள், நிகழாண்டு முதல் 100 ஆக உயர்துள்ளதால் இப்பணியில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னதான் நடக்கிறது யேமனில்?

அரேபியா என்றாலே அதன் எண்ணெய் வளமும், செல்வச் செழிப்பும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் கண்டத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு ஒன்று உண்டென்றால், அது யேமன்தான். இருந்தாலும், அந்த நாடுதான் அண்மைக் காலமாக சர்வதேசச் செய்திகளில் முதன்மை இடம் பெற்றுள்ளது. அப்படி என்னதான் நடக்கிறது யேமனில்?

அங்கு நடைபெறும் சண்டையில் யார், யாருடன், எதற்காக மோதிக் கொள்கின்றனர்? அந்த மோதலில் சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் என்ன வேலை?

1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதையடுத்து, கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் ஒன்றுபட்டதைப் போலவே, வடக்கு யேமனையும், தெற்கு யேமனையும் ஒன்றிணைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடக்குப் பகுதித் தலைவர் அலி அப்துல்லா சலேவை அதிபராகவும், தெற்குப் பகுதித் தலைவர் அலி சலீம் அல்-பெய்தை துணை அதிபராகவும் கொண்ட கூட்டணி ஆட்சி 1990-இல் ஏற்பட்டது.

எனினும், "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' எனக் கூறி அல்-பெய்த் 1993-ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

சீற்றமடைந்த அதிபர் அப்துல்லா சலே, அல்-பெய்தையும், அவரது ஆதரவாளர்களையும் அரசிலிருந்து அதிரடியாக நீக்கினார். அதிரடிக்குப் பதிலடியாக, தெற்கு யேமனை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார் அல்}பெய்த்.

அவ்வளவுதான்! மூண்டது உள்நாட்டுச் சண்டை. இந்தச் சண்டையின் முடிவில், வடக்கு யேமனிடம் தெற்குப் படைகள் தோல்வியடைந்து அல்}பெய்த் உள்ளிட்ட பல தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, யேமனை ஏகபோகமாக ஆட்சி செய்யத் தொடங்கினார் அப்துல்லா சலே.

எனினும், அரபு துணைக் கண்டத்தை 2011}ஆம் ஆண்டு புரட்டியெடுத்த "அரபு வசந்தம்' என்ற புரட்சி அலை, சலேவின் 33 ஆண்டு கால ஆட்சியையும் கவிழ்த்தது.

அதிலிருந்துதான் தொடங்குகிறது அண்மைக் கால யேமன் பிரச்னை.

இந்தப் பிரச்னையில் களம் நிற்பவர்கள் யார் யார்?

ஹூதி கிளர்ச்சியாளர்கள்: அப்துல்லா சலே ஆட்சியின்போது, தங்களது கலாசாரத்தைக் காப்பதற்காக உருவான ஷியா பிரிவு கிளர்ச்சி அமைப்பு இது. 2011}இல் சலேவுக்கு எதிரான புரட்சியின்போது மற்ற தேசியவாத இயக்கங்களுடன் கைகோத்து செயல்பட்ட இவர்களுக்கு ஆதரவு பெருகியது.

வடக்குப் பகுதியில் பலம் வாய்ந்த இவர்கள், தலைநகர் சனாவை எதிர்ப்பின்றி கைப்பற்றினர். மேலும், தெற்குப் பகுதியையும் கைப்பற்றப் போராடி வருகின்றனர்.

அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவுப் படையினர்: மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள யேமன் அதிபர் மன்சூர் ஹாதியின் விசுவாசிகள். தற்போது ஏடனைக் காக்க ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.

முன்னாள் அதிபர் அப்துல்லா சலே ஆதரவுப் படையினர்: 33 ஆண்டு காலம் அதிபராக இருந்த சலேவுக்கு யேமன் ராணுவத்தின் ஒரு பிரிவினர் இன்னும் ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போதைய சண்டையில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அப்துல்லா சலே ஆதரவு அளித்து வருகிறார்.

அரேபிய தீபகற்பத்துக்கான அல்}காய்தா (ஏ.க்யூ.ஏ.பி.): அல்}காய்தா பிரிவுகளிலேயே மிகவும் கொடூரமானது என அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்ட அமைப்பு இது.

"யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அரேபியத் தீபகற்பத்திலிருந்து அழித்தொழிப்பது' உள்ளிட்ட வழக்கமான பயங்கரவாதக் கொள்கைப் பிடிப்புடன் யேமனில் 13 ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மன்சூர் ஹாதி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே இந்த அமைப்பின் எதிரிகள்.

சவூதி அரேபியா: யேமன் பிரச்னையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நாடு.

சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த நாடு, வளைகுடாவைச் சேர்ந்த ஜோர்டான், மொராக்கோ, சூடான் ஆகிய நாடுகளையும் கூட்டு சேர்த்துக்கொண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

காரணம், சன்னி இன உணர்வு என மேலோட்டமாகத் தோன்றினாலும், "சிறுபான்மை ஹூதிக்களுக்கு எதிராக உருவாகும் பெரும்பான்மை சன்னிப் பிரிவு இனப் பயங்கரவாதம், அருகிலுள்ள சவூதி அரேபியாவை நிச்சயம் பாதிக்கும்.

அரேபியக் கண்டத்திலேயே மிகவும் ஏழை நாடான யேமனும், மிகப் பெரிய பணக்கார நாடான சவூதி அரேபியாவும் 1,600 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன' என்கின்றனர் பார்வையாளர்கள்.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.): எந்தப் பயங்கரவாத இயக்கமும் எளிதில் துளிர்த்து வேரூன்றி விடும் தன்மை கொண்ட யேமன் மண்ணில் உருவான ஐ.எஸ். அமைப்பின் கிளை.

ஷியா பிரிவு ஹூதிக்கள் இவர்களுக்கு எதிரிகள் என்றால், சன்னி பிரிவு அல்}காய்தா இவர்களுக்கு கடும் போட்டியாளர்கள். ஷியாக்களை அழிக்கும் போட்டியில் அல்}காய்தாவை விஞ்ச கடந்த மாதம் இவர்கள் நிகழ்த்திய இரட்டை மசூதித் தாக்குதலில் பலியானோர் 142 பேர்!

ஈரான்: ஹூதி கிளர்ச்சியாளர்களை "ஈரானின் கைப்பொம்மைகள்' என அதிபர் ஹாதி வர்ணித்தாலும், யேமன் பிரச்னையில் ஈரானின் பங்கை அரசுத் தரப்பு ஊதிப் பெரிதுபடுத்துவதாகக் கருதப்படுகிறது. காரணம் ஹூதிக்களுக்கு ஈரான் உதவியளிப்பது குறித்து இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அமெரிக்கா: யேமனில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஆதரவுடன் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. தற்போது ஹூதிக்களின் முன்னேற்றத்தால் அந்த நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன.

இதனால், யேமனில் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு பல்வேறு உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக யேமன் பிரச்னையை அணுகுவதால், பிரச்னை மேலும் தீவிரமடையும். அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் அமைதிக்கான ஒரே வழி என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

பி.இ.: மே 6-இல் விண்ணப்பம்: 11-இல் எம்.பி.பி.எஸ்.

தமிழகத்தில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க, மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான 6-ஆம் தேதி முதல், பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளது.

பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை https://www.annauniv.edu/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்தைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கவும் மே 29-ஆம் தேதி கடைசி நாளாகும். பி.இ. ஒற்றைச்சாளர கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களை, சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், மே 11-ஆம் தேதி முதல் பெறலாம்.

விண்ணப்ப விநியோகம் மே 28-ஆம் தேதி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர வேண்டும்.

ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, April 24, 2015

சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்

குழந்தையைக் காப்பாற்றும் சண்முகநாதன் : படம் வீடியோ பதிவிலிருந்து

சிங்கப்பூரில் பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நாயகர்களாக மாறியுள்ளனர் தமிழர்கள் இருவர். இந்த சம்பவத்தை படம்பிடித்து யூடியூபில் பதிவேற்றி உள்ளார் சிங்கப்பூர்வாசி ஒருவர்.

சிங்கப்பூரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அலறலைக் கேட்டு அங்கு வந்தனர். உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது. குழந்தை எப்படி அங்கு சென்று சிக்கிக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, 'உத்வேக மக்கள் விருது' வழங்கி கவுரவிக்கும் என்று தெரிகிறது.

லிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மே 11 முதல் விண்ணப்பம்



எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும் 500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 48,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் மருத்துக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மே 29. விண்ணப்பங்களைwww.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடந்தன. 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள், 42 ஆயிரம் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.85 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இந்த தேர்வு 2,377 மையங்களில் நடந்தது. எழுத்துத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி 5 முதல் 24-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாகிறது.

இதனையொட்டி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இடி-மின்னலுடன் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் இன்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று இரவு சுமார் 7.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இதில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, கிண்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல், சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, பட்டினபாக்கம், முகப்பேரிலும் மிதமான மழை பெய்தது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்குளத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், படப்பை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது.

பல்லாவரம் குடியிருப்பில் மின்னல் தாக்கி தென்னை மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாழ் பொதுமக்கள், திடீர் மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

NEWS TODAY 2.5.2024