Saturday, April 25, 2015

பி.இ.: 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்

பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:-

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பெற மே 27-ஆம் தேதி கடைசி நாள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

விடுமுறை நாள்களில் கிடையாது: ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

ஆன்-லைனில் பதிவிறக்கம்: பி.இ. விண்ணப்பத்தை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024