Saturday, April 25, 2015

சிறைச்சாலைக்குள் பசுஞ்சோலை!

கைதிகளின் கலக்கல் விவசாயம்

சிறைச்சாலை என்றாலே... ஓங்கி உயர்ந்த மதில்சுவர், பெரிய கதவு, பறக்கும் தேசியக்கொடி, விரைப்பான காக்கிச் சட்டை அணிந்த துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள், சீருடையில் கைதிகள்... இதெல்லாம்தான் நினைவுக்கு வரும். இப்படி பரபரப்பாக இருக்கும் சிறைச்சாலைகளில் விவசாயமும் நடந்து வருவது ஆச்சர்யமான விஷயம்தானே. எப்போதும் பரபரப்பாக இருக்கும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் காய்கறிகள், தானியங்கள் எனப் பலவித பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்கள், கைதிகள்.

கண்காணிப்பு வீடியோ திரையைப் பார்வையிட்டுக் கொண்டே... வாக்கி டாக்கியிலும், இ்ன்டர்காமிலும் துறை அதிகாரிகளை அழைத்து ‘அங்கே என்ன கூட்டமா இருக்குறாங்க?’, ‘கைதிகளுக்குச் சாப்பாடு ரெடியாச்சா?’, ‘பரோல் கைதிகள் கிளம்பிட்டாங்களா?’ என நிமிடத்துக்கு ஒரு முறை தகவல்களைக் கேட்டுக்கொண்டு பணியில் மும்முரமாக இருந்த சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணனைச் சந்தித்தோம். பணிகளைப் பார்த்துக்கொண்டே சிறையில் பூத்த விவசாய சிந்தனை பற்றி நம்மிடம் விளக்க ஆரம்பித்தார், கருப்பண்ணன்.


வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறைச்சாலை!

‘‘1867-ம் ஆண்டு, 153 ஏக்கரில் இந்தச் சிறைச்சாலை துவங்கப்பட்டது. இங்கு, முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை என முக்கிய தலைவர்கள் பலரும் அரசியல் கைதிகளாக இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டாவது பெரிய சிறைச்சாலை இது. நானூறுக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் இங்கு இருக்கிறார்கள்” என வரலாறு சொன்னவர், தொடர்ந்தார்.

இது தண்டனைக்கூடம் அல்ல...

மனம் திருந்துவதற்கான இடம்!

‘‘சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கும் தண்டனைக்கூடம் அல்ல. மனம் திருந்தி வாழ்வதற்கான இடம். இங்கு இருக்கும் அனைத்து கைதிகளும் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கும், சமுதாயத்துக்கு உதவும் வகையிலும் காவல்துறை அலுவலர்களுக்குத் தேவையான பூட்ஸ் தயாரித்துக் கொடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தேவையான நாடா கோப்புகள் தயாரித்துக் கொடுப்பது, கோர்ட் தீர்ப்பு நகல்களை பைண்டிங் செய்து கொடுப்பது, அயர்னிங் கடை நடத்துவது, முடி திருத்தகம் நடத்துவது மாதிரியான தொழில்களுடன் விவசாயத்தையும் கைதிகள் செய்கின்றனர். எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பது மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கும் பணிகளும் உண்டு” என்ற கருப்பண்ணன், விவசாயம் பற்றி விளக்க ஆரம்பித்தார்.
3

0 ஏக்கரில் முத்தான விவசாயம்!

‘‘பல ஆண்டுகளாக கைதிகள் இந்த சிறைச்சாலையில் விவசாயம் செய்தாலும், சிறப்பாக நடப்பது கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான். கைதிகளின் விவசாயத்தை விரிவுபடுத்த எங்களுக்கு இருந்த எண்ணத்தை செயல் வடிவம் கொடுப்பதற்கு ஏற்றார் போல... அன்றைய தமிழக முதல்வர், சிறைத்துறை இயக்குநர் மூலம் ‘சிறைச்சாலையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான அங்காடிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டார். அது கைதிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வசதியாக அமைந்தது.

விவசாயத்தில் ஆர்வம் இருக்கும் நன்னடத்தைக் கைதிகள் 45 பேரைத் தேர்வு செய்து, 30 ஏக்கரில் பல பயிர்களை சாகுபடி செய்கிறோம். நான், சிறைத்துறையில் வேலை பார்த்தாலும் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். தினம் காலையில் சிறைச்சாலைக்கு வந்ததும் தோட்டத்தைப் பார்வையிட்டு, அந்த சந்தோஷத்தை அனுபவித்து விட்டுத்தான் அலுவலகத்துக்கே வருவேன். இது எனக்கு நாள் முழுவதும் சந்தோஷமான மனநிலையில் வேலை பார்க்கத் தேவையான ஊக்கத்தைக் கொடுக்கிறது.

11 மாதங்களில் `19 லட்சம் வருமானம்!

இங்கு 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை உள்ள 11 மாதங்களில் 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 337 ரூபாய் விவசாயம் மூலமாக வருமானமாகக் கிடைத்திருக்கிறது. செலவு போக 8 லட்சத்து, 60 ஆயிரத்து, 658 ரூபாய் நிகர லாபம். இந்த லாபத்தில் 20 சதவிகித தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும். 20 சதவிகித தொகையை பணியாளர் நிதிக்கும், 40 சதவிகித தொகையை விவசாயச் செலவினங்களுக்கும், 20 சதவிகித தொகையை, கைதிகளுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்குகிறோம். அடுத்த கட்டமாக ஆடு, மாடு, மீன் வளர்ப்புக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்ற கருப்பண்ணன் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

சிறைச்சாலை வளாகத்தில் தக்காளி வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த சிறைச்சாலை விவசாயிகளைச் சந்தித்தோம். அனைவரின் சார்பாக பேசிய துரைராஜ், ‘‘எனக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி. ஒரு கொலை வழக்குல ஆயுள் தண்டனை கைதியா சிறையில இருக்கேன். ஆரம்பத்துல ‘பூட்ஸ்’ தயாரிக்குற பிரிவுல வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகுதான் விவசாயத்துக்கு வந்தேன். எங்க அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். விவசாயம் பார்க்கணுங்குற ஆர்வத்துல இந்தக் குழுவுல சேர்ந்துக்கிட்டேன். சிறைச்சாலை வளாகத்துல இருக்குற இந்த இடமெல்லாம் காடா இருந்தது. கண்காணிப்பாளர் ஐயாதான் அரசாங்கத்துக்கிட்ட சொல்லி சுத்தம் செய்துகொடுத்தார். பல வருஷமா சும்மா கிடந்த மண்ணுங்குறதால மண் வளமா இருக்கு.



இதுல, 5 ஏக்கர்ல கத்திரி, வெண்டை, முள்ளங்கி, தக்காளி, முருங்கை, கொத்தவரை, கீரை, பாகல், பீர்க்கன், புடலை, காய்கறியும், 25 ஏக்கர்ல இறவையிலும், மானாவாரியிலும் கடலை, எள், துவரை, காராமணி, பாசிப்பயறுனு பல வகையான தானியங்களையும் உற்பத்தி செய்றோம். நாங்க உற்பத்தி செய்யுற காய்கறிகள், தானியங்களை சிறையில பயன்படுத்திக்கிறோம். மீதியை, சிறைச்சாலைக்கு வெளியில இருக்குற அங்காடி மூலம் விற்பனை செய்றோம். அதுல இருந்து கிடைக்குற வருமானத்துல 20 சதவிகித தொகையை எங்களுக்கே ஊக்கத்தொகையா கொடுக்குறாங்க” என்றார்.

சமுதாயப் பங்களிப்பு!

அடுத்து பேசிய சந்திரன், ‘‘நாங்க சாகுபடி செய்ற எல்லா பயிருக்கும் இயற்கை உரத்தை மட்டும்தான் பயன்படுத்துறோம். சிறைச்சாலையைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்கு விவசாயம் இல்லாததால சில சமயம் பூச்சித்தாக்குதல் அதிகமா இருக்கும். அப்போ மட்டும் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். அதிகளவுல விஷமில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து கொடுக்குறது மூலமா சமுதாயத்துக்கும் உபயோகமா இருக்கோம். எங்களோட காய்கறிகள் கலெக்டர்,எஸ்.பி, நீதிபதினு முக்கியமான அதிகாரிகள் வீடுகளுக்குப் போகுது. விவசாயம் பார்க்குறது மூலமா எங்களோட நன்னடத்தை பற்றி அதிகாரிகளுக்குத் தெரியுது. சிறையில இருந்து விடுதலையாகிப் போனாலும், எங்களுக்குனு ஒரு தொழில் இருக்கும். இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி” என்றார்.

சிறையில் தயார் ஆகும் இயற்கை உரம்!

இயற்கை உரங்கள் தயாரிப்பு பற்றிப் பேசிய விஜயன், ‘‘கைதிகள்ல 15 பேர் சேர்ந்து இயற்கை உரங்களைத் தயாரிக்கிறோம். சிறை முழுக்க கிடைக்கிற குப்பைகளை மட்க வைத்து உரமா மாத்துறோம். அந்த உரத்துக்கு மேல காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கிறோம். முழுசா நாலு மாசம் ஆன பிறகு பிரிச்சு எடுக்கிறோம். சலிச்சு சுத்தம் செஞ்சு, இயற்கை உரத்தை கிலோ 10 ரூபாய்னு விற்பனை செய்றோம். கடந்த ஒரு வருஷத்துல மொத்தம் 16 டன் இயற்கை உரத்தைவிற்பனை செய்திருக்கிறோம். இந்த உரத்தை பெங்களூர்ல இருக்குற ஆராய்ச்சி மையத்துக்கு சோதனைக்கு அனுப்பி இருக்கோம்” என்றார்.

சிறை அங்காடி!

சிறை அங்காடியில் காய்கறிகள் வாங்க வந்திருந்த வேலூர், பாகாயம் பகுதியைச் சேர்ந்த சுஜாதாவிடம் பேசியபோது, ‘‘தினம் எங்களோட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இங்க வந்து வாங்கிக்கிட்டுப் போறேன். இங்க விற்பனை செய்யுற காய்கறிகள் பசுமையா இருக்குறதோட சுவையாவும் இருக்கு. அதோட கைதிகள் விளைவிக்குற காய்கறிகளை வாங்கிட்டுப் போனா அவங்களும் சந்தோஷப்படுறாங்க. உழவர் சந்தையில விற்பனை செய்யுற விலைக்கே இங்க காய்கள் கிடைக்குது” என்று தானும் சந்தோஷப்பட்டுச் சொன்னார்.
 காசி.வேம்பையன்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...