மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன்பு எடுத்த ஒரு முடிவு, நாடு முழுவதும் ஒரு பெரிய எண்ண அலசலை உருவாக்கிவிட்டது. 2012–ம் ஆண்டு நிர்பயா கற்பழிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி 18 வயதிற்கு குறைவானவன் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால், அவனை ஜெயிலில் அடைக்காமல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்து திருத்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். இது நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த கொடூர குற்றத்தை செய்தவன் சிறுவன் என்ற போர்வையில் தப்பித்து விடுவதா? அவனையும் மற்ற குற்றவாளிகளுக்கு இணையான குற்றவாளியாக கருதியல்லவா தண்டனை அளித்திருக்க வேண்டும் என்று ஒரு பக்கமும், இல்லை... இல்லை... சட்டத்தின் அடிப்படையில் அவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்து திருத்த எடுத்துக்கொண்ட முயற்சிதான் சரியானது என்றும் கருத்துகள் உலவின.
இந்த நிலையில், 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் கொலை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை மற்ற குற்றவாளிகளுக்கு இணையாக கருதி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க ஒரு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. இதை மத்திய அமைச்சரவை தீவிரமாக ஆய்வு செய்து சில பரிந்துரைகளையும் சேர்த்துள்ளது. அந்த சிறுவர்கள் செய்த குற்றம் சிறியதா?, கடுமையானதா? மிக கொடூரமானதா? என்பதை மனவியல் மற்றும் சமூக நிபுணர்களின் துணையோடு இளம் சிறார் நீதி வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சிறுவன் என்ற வகையிலா, பெரியவர்கள் என்ற வகையிலா இந்த குற்றத்தை செய்தார்கள்? என்ற அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு நிச்சயமாக சாத்தியமில்லை.
விடலைப்பருவம் என்பது குழந்தை பருவத்தில் இருந்து இளைஞர்கள் என்ற பருவத்திற்கு செல்லும் வழியில் உள்ள சில ஆண்டுகளின் இடைக்கால பருவம்தான். வெறும் மணலால் பாத்திரங்களை உருவாக்க முடியாது. களிமண்ணில் நீர்குழைத்து அதன் பிறகு உருவாக்கும்போதுதான் மண்பாண்டங்கள் உருவாகிறது. அதை உருவாக்குவது குயவர்களின் கையில்தான் இருக்கிறது. அதுபோல், தண்ணீர் ஊற்றி களிமண்ணாக உள்ள இந்த விடலை பருவத்தில் அவர்களை உருவாக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்புதான். அந்த பொறுப்பில் இருந்து தவறிவிட்ட சமுதாயம் இப்போது அவர்களை தண்டிக்க துடிப்பது நியாயம் அல்ல. இத்தகைய விடலை பருவ குற்றவாளிகளை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டியதுதான் சமுதாயத்தின் கடமையே தவிர, தண்டித்து ஜெயிலில் அடைப்பது அல்ல. மேலும், ஏற்கனவே சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர் திருந்தி வெளியே வந்ததாக சரித்திரமே இல்லாத நிலையில், இப்படிப்பட்ட இளம் சிறார்களை ஜெயிலில் கொண்டுபோய் அடைத்தால், அங்குள்ள குற்றவாளிகள் இவர்களுக்கு ஆசான்களாக மாறி இவர்கள் திருந்தி வெளியே வருவதற்கு பதிலாக, பயிற்சி பெற்ற கைதேர்ந்த கிரிமினல்களாகத்தான் நிச்சயமாக வெளியே வரமுடியும். அது சமுதாயத்துக்கு இன்னும் கேடாக உருவாகும். ஆக, இந்த அபாயத்தை மனதில் கொண்டு அவர்கள் இந்த குற்றங்களை செய்யாத வகையில் புதிய வழிகளை காணவும், அதையும் மீறி செய்தவர்களை புனிதர்களாக திருத்தி வெளியே அனுப்புவதற்கான வழியையும் காண்பதுதான் சிறந்தது என்ற வகையில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment