Sunday, April 26, 2015

எய்ம்ஸ் மருத்துவமனை இடத்திற்கான ஆய்வு: சொதப்பிய அதிகாரிகள்!

cinema.vikatan.com

கில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) தமிழகத்தில் அமைய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்பும்படி மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிபட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய 5 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பியது.
தமிழக அரசு தேர்வு செய்து கொடுத்த இடங்களில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இடத்தை தேர்வு செய்வததற்காக சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஐந்து நபர் அடங்கிய குழு தமிழகம் வந்தது. குழுத்தலைவர் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணை இயக்குநர் தாத்ரி பாண்டா தலைமையில் அதிகாரிகள் மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்தனர். கடைசியாக செங்கல்பட்டில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

சொதப்பிய அதிகாரிகள்

ஆய்வுக் குழு வருகைக்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர்  ராதாகிருஷ்ணன், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு திருமணியில் தொழுநோய் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கர் நிலம் காலியாக இருக்கின்றது. எய்ம்ஸ் கேட்ட 200 ஏக்கர் நிலத்திற்கு மேல் இடம் இருக்கின்றது. இதுதவிர, ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து என அனைத்தும் இதன் அருகிலேயே இருக்கின்றது. பாலாறு பக்கத்தில் இருப்பதால் தண்ணீர் வசதியும் உள்ளது. இதனால் இங்கேதான் மருத்துவமனை அமையும் என்று அனைத்துத் தரப்பினரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆய்விற்கு வந்த அதிகாரிகள் எவ்வளவு இடம் இருக்கின்றது? என கேட்டதற்கு, 185 ஏக்கர் நிலம் உள்ளதாக வருவாய் துறையினர் கணக்கு சொன்னார்கள். அதில் ஆக்கிரப்பு செய்யப்பட்ட நிலங்கள் எவ்வளவு? என மத்தியக் குழு அதிகாரிகள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திகைத்தனர். போக்குவரத்து வசதி எப்படி இருக்கின்றது? என கேட்டபோதும், சாலை வசதியை பற்றி எடுத்துச் சொல்ல அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

வரைபடத்தை காட்டி, இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை, இந்த ரோடு ஸ்டேட் ஹை வே, இது எவ்வகை ரோடு என ஒரு கிராம சாலையை காண்பித்து கேட்டனர். அதற்கு ஆலன் ரோடு என அந்த சாலையின் பெயரை சொன்னார்கள். திரும்பத் திரும்ப கேட்டும் சரியான பதில் இல்லை. அடுத்ததாக தண்ணீர் வசதி எப்படி இருக்கின்றது என கேட்ட போது தண்ணீர் வசதி குறைவு என பதில் அளித்தனர். வந்திருந்த அதிகாரிகளே, பாலாறு பக்கத்தில் இருக்கின்றது என சொல்ல, பாலாறு தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. நிலத்தடி நீரைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளே தெரிவித்தனர். இப்படி அதிகாரிகள் தங்கள் துறைகளை பற்றி சரியான விவரங்கள் இல்லாமலும், தெளிவு இல்லாமலும் வந்திருந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

''பலாற்று நீர்தான் தென்தமிழகம் முழுவதும் ரயில்வேவிற்கு சப்ளை செய்யப்படுகின்றது. மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தில் அரசியல் பிரமுகர்கள் மண் எடுத்து விட்டார்கள். அதிகாரிகளும் ஆக்கிரமிப்பிற்கு உதவியுள்ளார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி இங்கு அமையவிடுவார்கள்'' என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். 
 
எய்ம்ஸ் ஆய்வு குழுவின் தலைவரான தாத்ரி பாண்டாவிடம் பேசினோம், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக ஆய்வு செய்தோம். கடைசியாக செங்கல்பட்டில் ஆய்வு செய்தோம். தண்ணீர் வசதி, மண்ணின் தன்மை, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தோம்.  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு குறைந்தது 200 ஏக்கர் நிலம் தேவை. பிற்காலத்தில் மருத்துவமனை விரிவாக்கம் செய்வதற்கு கூடுதல் நிலமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியின் பலம், பலவீனத்தை அறிக்கையாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிப்போம். அவர்கள்தான் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று இறுதி முடிவெடுப்பார்கள்” என்கிறார்.

-செய்தி, படங்கள்: பா.ஜெயவேல்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...