Saturday, April 25, 2015

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இடங்களை விட கூடுதலாக 50 ஒதுக்கப்பட்டு 100 ஆக அதிகரித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் செவிலியருக்கான தேவையும், பணிவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இதற்காக சிறந்த முறையில் செவிலியர் பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 23 செவிலியர் பயிற்சி பள்ளிகள் மருத்துவமனை வளாகங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரையில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் சேர்க்கப்பட்டு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. இதில், மருத்துவக்கல்லூரி செயல்படும் மாவட்டங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சி பெற இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

அதேபோல், மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பயிற்சி பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைப்படி ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் 100 மாணவிகள் இருக்க வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், திண்டுக்கல், கன்னியாகுமரி, ஊட்டி, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற 18 மாவட்டங்களில் 50 இடங்களாக இருந்ததை, 50 இடங்கள் உயர்த்தி 100 பேர் வரையில் சேர்ப்பதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் பயிற்சி பள்ளியின் முதல்வர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

இதுவரையில் விருதுநகர் மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளியில் 50 ஆக இருந்த இடங்கள், நிகழாண்டு முதல் 100 ஆக உயர்துள்ளதால் இப்பணியில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024