Friday, April 24, 2015

எளிமையான வருமானவரி வசூலிப்பு முறை

வருமானவரி உள்பட எந்த வரியும் வசூலிக்கும்போது, அதற்கான முறைகள் செக்கில் போட்டு அரைக்கும் எள்போன்ற நிலையில் இருக்கக்கூடாது. மூதறிஞர் ராஜாஜி சொன்னதுபோல, மயில் இறகால் வருடும் நிலையில் துன்புறுத்தாமல் வசூலிக்கவேண்டும். அப்படிப்பட்ட இந்த தார்ப்பரியத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அச்சப்பட்ட நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லியின் அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கிறது. எந்த ஒரு அரசாங்கம் என்றாலும் சரி, அதன் வருவாய்க்கு நிச்சயமாக வரி வசூல் மூலமாக கிடைக்கும் வருவாய்தான் பெரிதும் கைகொடுக்கும். 120 கோடிக்குமேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஏறத்தாழ 3 கோடியே 50 லட்சம் பேர்தான் வருமானவரி கட்டுகிறார்கள். அதாவது 3 சதவீதம் பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. 30 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில், 13 கோடியே 80 லட்சம் பேர் அதாவது, 45 சதவீதம் பேர் வருமானவரி கட்டுகிறார்கள். இந்த 3½ கோடி மக்களில் 89 சதவீதம் பேர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள். 5.50 சதவீதம் பேர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், 4.30 சதவீதம் பேர் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும், மீதமுள்ளவர்கள் ரூ.20 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுகிறோம் என்று கணக்கு காட்டி, வருமான வரி கட்டுகிறார்கள். 42,800 பேர் மட்டும் அதாவது .1 சதவீதம் மட்டுமே ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறோம் என்று வருமானவரி கட்டுகிறார்கள். தற்போது வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டிவிட்டது எனவும் தகவல் வந்துள்ளது.

ஆக, சமுதாய கடமையோடு வரிகட்டும் இந்த 3 சதவீத மக்களுக்காக வருமானவரியை கட்டும் முறைகள் எளிமையாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், வருமானவரி கணக்கை வருமான வரித்துறையில் தாக்கல் செய்வதற்கு இப்போது ஒரு பக்கத்தில் சரள் என்ற விண்ணப்ப படிவத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, இனி 14 பக்கங்களில் நிறைய தகவல்களை தாக்கல் செய்யவேண்டும், அதில் எத்தனை வங்கிகளில் கணக்கு இருக்கிறது, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டீர்களா என்ற பல தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடிக்கடி வேலைமாறுதலுக்கு ஆளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களெல்லாம் போகிற ஊர்களில் எல்லாம் வங்கிக்கணக்கை தொடங்குவது தவிர்க்க முடியாததாகும். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், வங்கிக் கணக்குகளெல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பான் கார்டு என்று சொல்லப்படும் நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் எல்லாமே பயன்பாட்டிலிருக்கும் போது, எல்லா விவரங்களையும் வருமான வரித்துறையே நேரடியாக பெற்றுக்கொள்ளலாமே, அப்படி இருக்கும்போது 14 பக்க விண்ணப்ப படிவம் என்றால் பலர் அதன் சிரமங்களால் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாத நிலை ஏற்படுமே என்று மக்களிடையே கிளம்பிய எதிர்ப்பு குரல், அமெரிக்காவில் உலக வங்கி கூட்டத்தில் கலந்துகொள்ளச்சென்ற மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின், காதுக்கு எட்டி உடனடியாக மறுபரிசீலனை செய்யச்சொல்லி உத்தரவிட்டது மிகவும் வரவேற்புக்குரியது. வருமானவரி கட்டாமல் வெளியே ஏய்த்துக்கொண்டு இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை கட்ட வைப்பதே பிரதான கடமையாக இருக்கவேண்டுமே தவிர, சட்டத்துக்கு உட்பட்டு வருமானவரி கட்டுபவர்களை சிரமப்படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024