Thursday, April 23, 2015

6 பேருக்கு பார்வை பறிபோன வழக்கில் டாக்டர்களுக்கு ஓராண்டு சிறை

திருச்சி: இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று, பார்வை இழந்த, 66 பேர் தொடர்பான வழக்கில், இரண்டு டாக்டர்கள் உட்பட, மூன்று பேருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை, 28ம் தேதி, பெரம்பலூர், ஜோசப் கண் மருத்துவ மனை மற்றும் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் ஆகியவை இணைந்து, விழுப்புரம் மாவட்டம், கடுவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. கடுவனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள், முகாமில் சிகிச்சை பெற்றனர்.

66 பேர் பார்வையிழப்பு:


இதில், தேர்வு செய்யப்பட்ட, 66 பேருக்கு, ஜோசப் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் பார்வை கிடைக்காமல், 66 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம், மாநில அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வை இழந்தவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ., வழக்கு:

இதையடுத்து, ஜோசப் மருத்துவமனை இயக்குனர், டாக்டர் நெல்சன் ஜேசுதாசன், 55, டாக்டர்கள், அவ்வை, 40, அசோக், 45, சவுஜன்யா, 43, தென்றல், 42 மற்றும் மருத்துவமனை நிர்வாகி கிறிஸ்டோபர் தாமஸ், 55, ஆன்ரோஸ், 45, ஆகிய ஏழு பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. கடந்த, 2011, மார்ச், 3ம் தேதி, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு, தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கில், நேற்று, பகல், 3:30 மணிக்கு, தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஸ்ரீதர், கண் மருத்துவ மனை இயக்குனர், டாக்டர் நெல்சன் ஜேசுதாசன், மருத்துவமனை நிர்வாகி, கிறிஸ்டோபர் தாமஸ், டாக்டர் அசோக் ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடு தர உத்தரவு: இலவச கண் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட, 66 பேருக்கு, உயர் நீதிமன்றம் அறிவித்த, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை, 7.5 சதவீத வட்டியுடன், ஜோசப் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும், நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். இழப்பீட்டு தொகை போதாது என கூறி, நீதிமன்றம் முன், பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை:

அரசு தரப்பில், போதிய ஆதாரம் காட்டப்படாததால், டாக்டர்கள், சவுஜன்யா, தென்றல், அவ்வை மற்றும் ஆன்ரோஸ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், டாக்டர்கள், சவுஜன்யா, தென்றல் ஆகியோர் மீது, இந்திய மருத்துவ கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...