ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர், காகிதமற்ற பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தும் வகையில், செல்லிடப்பேசி செயலி ஒன்றை ரயில்வே, புதன்கிழமை (ஏப்.22) அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர், புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
தற்போதைய திட்டத்தின்படி, ஆண்ட்ராய்ட் செல்லிடப்பேசி பயன்படுத்துபவர்கள் கூகுள் செயலி தளம் மூலமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய செயலி மூலமாக பயணச்சீட்டுகளை பெறுவோர், அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. பயணச்சீட்டு பரிசோதகரிடம் செல்லிடபேசி தகவலைக் காண்பித்தாலே போதும்.
இந்தச் செயலி மூலம் காகிதப் பயன்பாடு குறைவதோடு, பயணச்சீட்டு மையங்களின் முன் பயணிகள் நிற்க வேண்டிய சிரமமும் தவிர்க்கப்படும்.
இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கு, ரயில் நிலையத்திலோ அல்லது இணைய வழியிலோ, மின் பணப்பை (இ-வாலட்) முறை மூலமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ப்ளாக்பெர்ரி செல்லிடப்பேசியிலும் விரைவில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படும்.
இந்தப் புதிய வசதியை சென்னை-எழும்பூர் இடையேயான வழித் தடத்தில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புது தில்லியிலிருந்து புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைக்கிறார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment