Saturday, April 18, 2015

வெண்ணிற ஆடை 50: அலைகடலில் சிறிய தோணி.. கலை உலகில் புதிய பாணி..

அந்த நாள் ஞாபகம்

‘வெண்ணிற ஆடை’ படத்தில் நிர்மலா, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன்

வசனத்தை வைத்தே கதையை நகர்த்திவிடலாம் என்று வாய்கிழியப் பேசிக்கொண்டிருந்தது தமிழ் சினிமா. அதன் குரலை அடக்கி, செந்தமிழில் பேசிய சினிமாவைப் பேச்சுத் தமிழுக்கு மாற்றினார். அவர் காட்சி மொழிக்கும் கதாபாத்திரங்களின் யதார்த்தமான உணர்ச்சிகளுக்கும், அந்த உணர்ச்சிகளை உண்மையாகப் பிரதிபலிக்கும் நடிகர்களின் நடிப்புத் திறனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துத் திரைப்படங்களை இயக்கினார்.

அதேபோல் பெரிய நட்சத்திரங்களின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்காமல் புதியவர்களை அறிமுகப்படுத்தி அவர்களையே பெரிய நட்சத்திரங்களாக உயர்த்திக் காட்டினார். அந்தப் புதுமை இயக்குநர் சி.வி. ஸ்ரீதர்.

1954-ல் வெளியான ‘ரத்த பாசம்’ படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமான அவர் ‘கல்யாணப் பரிசு’ படத்தின் மூலம் அழுத்தமான சமூகக் கதைகளுக்கான திசையில் தமிழ் சினிமாவைச் செலுத்திய ஆளுமை மிக்க மாலுமி.

தன் நண்பர் கோபுவுடன் இணைந்து ‘சித்ராலயா’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி ஸ்ரீதர் தயாரித்த பல படங்கள் விறுவிறுப்பான சமூகக் கதையம்சம் கொண்டவை. 14.04.1965 அன்று வெளியாகி வெற்றிபெற்ற ‘வெண்ணிற ஆடை’ திரைப்படமும் அதில் ஒன்று. வெளியாகி ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தப் படமும் முழுவதும் புதுமுகங்களை வைத்து வெற்றிபெற்ற படம் என்ற பெருமையைத் தட்டிச் செல்கிறது.

பள்ளிப் பருவத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால் அத்தை மகனை மணந்துகொள்கிறார் செல்வந்தரின் (மேஜர் சுந்தர்ராஜன்) மகளான ஷோபா (ஜெயலலிதா). தாலி கட்டிக்கொண்ட கையோடு கணவனுடன் கோவிலுக்கு காரில் செல்லும்போது சாலை விபத்தில் கணவனை இழந்து கைம்பெண்ணாகிறாள்.

இந்தச் சம்பவம் அவளை மனச்சிதைவு நோயில் தள்ளுகிறது. திருமண ஊர்வலத்தைப் பார்த்தாலோ, வெள்ளை உடையைப் பார்த்தாலோ நோயின் தீவிரம் அதிகமாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவளுக்கு சிகிச்சை அளிக்க கொடைக்கானல் வருகிறார் இளம் மனநல மருத்துவர் சந்துரு (ஸ்ரீகாந்த்).

ஷோபா செய்யும் சேஷ்டைகளைப் பொறுத்துக்கொண்டு அவளது அபிமானத்தைப் பெற்று நண்பனாகும் சந்துரு அவளைப் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திருப்புகிறார். முழுவதும் குணமடைந்த ஷோபா, தனக்கு மறுவாழ்வு அளித்தவரே தனது வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று நினைக்கிறாள். காரணம் மருத்துவர் சந்துருவைத் தன்னையும் அறியாமல் அவள் தன் மனதில் வரித்துக்கொண்டாள்.

இதை அறியும் சந்துரு துடித்துப் போகிறான். காரணம் அவன் கீதாவை (நிர்மலா) உயிருக்கு உயிராகக் காதலிக்கிறான். ஷோபாவின் பெற்றோர் கெஞ்சியும் அவளை மணந்துகொள்ள முடியாத நிலை. ஷோபாவைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டால் எங்கே அவள் பழைய நிலைக்குச் சென்று மறுபடியும் மனநோயின் கைப்பாவையாக மாறிவிடுவாளோ என அஞ்சுகிறான்.

இதையெல்லாம் மீறி சந்துரு கீதா திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு வராத ஷோபாவையும் அவளது பெற்றோரையும் தேடி அவர்களது வீட்டுக்குச் செல்கின்றனர் சந்துருவும் கீதாவும். அங்கே எந்த வெண்ணிற ஆடைக்கு பயந்து நடுங்கினாளோ அதை மனப்பூர்வமாக மனக்குழப்பம் இல்லாமல் அணிந்துகொண்டு தன்னை முதல்முறையாகக் கைம்பெண்ணாக உணர்கிறாள் ஷோபா. ஷோபா தான் எண்ணியதுபோல் நொறுங்கிவிடவில்லை என்றாலும் அவளது தோற்றம் கண்டு நொறுங்கிப்போகிறான் சந்துரு. இதுதான் வெண்ணிற ஆடை படத்தின் கதை.

ப்ளாஷ் பேக் உத்தியை ஒரு திரைக்கதையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ‘வெண்ணிற ஆடை’ மிகச் சிறந்த உதாரணம். ஷோபாவுக்கு நடந்த துயரத்தை மெல்ல மெல்ல மொட்டவிழ்வதுபோல அவிழ்த்துக் காட்டி, படத்தின் முடிவு நெருங்க நெருங்க என்ன நடக்குமோ எனப் பதைபதைக்க வைத்துவிட்டார் ஸ்ரீதர்

இந்தப் படத்துக்குத் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதால் செக்ஸ் படம் என்று பரபரப்பு கிளம்பியது. இதனால் படம் வெளியாகித் திரையரங்கில் ஈயாடியது. அவ்வளவுதான் ஸ்ரீதரின் கதை முடிந்தது என்று சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், பிறகு ஸ்ரீதரின் விளம்பர உத்தியால் படத்துக்கு மெல்ல மெல்ல கூட்டம் அதிகரித்தது. ஸ்ரீகாந்த் நிர்மலா காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய ‘சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்னடி’ பாடல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. படம் நூறு நாள் ஓடி வெற்றிப் படமானது.

‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்…’ என்று குழந்தைப் பாடல் பாடிக்கொண்டு, “கடவுளே... நீ எங்கே இருக்கே? எப்படி இருக்கே?” என்று வசனம் பேசியபடி அறிமுகமாகும் காட்சியிலயே அசத்தினார் ஜெயலலிதா. அமைதியான குரலில் தன்னிலை உணர்தலை வெளிப்படுத்தும் இறுதிக் காட்சிவரை, இவருக்கு இது முதல் படமா என்று ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

இந்த ஒரே படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்த அவருக்கு, அடுத்த படமே எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடிக்கும் (ஆயிரத்தில் ஒருவன்) வாய்ப்பை வெண்ணிற ஆடை வென்று கொடுத்தது. ஷோபா வேடத்தில் நடிக்க முதலில் ஹேமமாலினியைத் தேர்வு செய்திருந்தார் ஸ்ரீதர். ஆனால் அவரது கீச்சுக் குரல் அந்த வேடத்துக்குப் பொருந்தாது என்று முடிவு செய்ததால் வாய்ப்பு ஜெயலலிதாவுக்குச் சென்றது.

இளம் மனநல மருத்துவர் சந்துருவாக அலட்டல் இல்லாத மிகையற்ற நடிப்பை வழங்கி அறிமுகக் கதாநாயகனாக நடித்திருந்தார் அமெரிக்க தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிவந்த ஸ்ரீகாந்த். இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த தஞ்சைப் பெண் நிர்மலா, ‘வெண்ணிற ஆடை நிர்மலா’வாக சுமார் 800 படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இவரைப் போலவே வெண்ணிற ஆடை மூர்த்தியாகப் புகழ்பெற்ற மூர்த்தி இந்தப் படத்தில் அப்பாவின் இளக்காரமான ஏச்சுகளை மீறி, மேதையாக முயலும் மர வியாபாரியின் மகனாக இயல்பான காமெடியில் கலக்கியிருந்தார்.

ஸ்ரீதருடன் இணைந்து திரைப்பட ஒளிப்பதிவில் புதிய சாதனைகள் படைத்த வின்சென்ட் ‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை. இந்திப் பட உலகில் ஸ்ரீ தரின் நாட்களில் சாதனை படைத்துவந்த சமூகப்பட இயக்குநர் சாந்தாராம். இவர் தனது படங்களின் ஒளிப்பதிவாளரான பாலகிருஷ்ணாவை ஸ்ரீ தரிடம் பரிந்துரை செய்தார். அவர்தான் ‘வெண்ணிற ஆடை’க்கு ஒளிப்பதிவாளர் ஆனார்.

ஸ்ரீதரும் கோபுவும் இணைந்து தொடங்கிய சித்ராலயா பட நிறுவனத்தின் சின்னமாக ஒரு தோணி இருந்தது. அது திரையில் தோன்றுகையில்…

அலைகடலில் சிறிய தோணி…

கலை உலகில் புதிய பாணி...

என்ற வாசகங்கள் ஒளிரும். உண்மையில் ஸ்ரீ தர் உருவாக்கிய இந்த வாசகங்களுக்கு எடுத்துக்காட்டாகவே இறுதிவரை அவர் படங்களை இயக்கினார்.

படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...