Saturday, April 25, 2015

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மலையேற்ற வீரர்களா?

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படும்பாடு சொல்லி மாளாது. வயோதிகம், தனிமை, நோய்களால் பாதிப்பு, நடமாட்டமே குறைந்துவிட்ட நிலைமை, உற்றவர்களாலும் நண்பர் களாலும் கைவிடப்பட்ட நிலை என்று வெளியில் சொல்ல முடியாத வேதனை களோடு வாழ்கின்றனர். அவர்களை ஆண்டுக்கு ஒருமுறை அழைத்து, ‘உயி ரோடு இருக்கிறீர்களா’ (மஸ்டரிங்) என்று நேரில் பார்க்கும் நடைமுறையை மாநில அரசு பாசத்தோடு கடைப்பிடிக்கிறது. அரசு நிர்வாகத்துக்கான இந்த நடை முறையைத் தவறு என்று கூறமுடியாது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்நாளில் அரசின் நடைமுறை விதிகளையும் சற்றே தளர்த்தினால் அது ஓய்வூதியர்களின் அலைக் கழிப்பைப் பெரிதும் குறைக்கும்.

ஓய்வுபெற்றவர்களில் பெரும் பாலானவர்கள் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதை அரசும் அறியும். பக்கவாதம், மூட்டுத் தேய்வு, நரம்புத் தளர்ச்சி, கை கால் எலும்பு முறிவு, நினைவிழத்தல் என்று பல் வேறு விதமான நோய்களால் பீடிக்கப் பட்டு நடமாட்டம் இல்லாமல் வாழ்பவர் கள் ஏராளம். அடிக்கடி சிறுநீர் கழிப் பது, வயிற்றுப் பொருமல் போன்ற தொல்லைகளும் அதிகம். இப்படிப்பட்ட வர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கருவூலத் துக்கோ, சார்நிலைக் கருவூலத் துக்கோ வருவதற்குக்கூட யாருடைய உதவியையாவது நாட வேண்டியிருக் கிறது. உதவும் நிலையில் மகனோ, மகளோ அருகில் இல்லாதவர்கள் மற்ற வர்களைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது. ஆட்டோ, கால்டாக்ஸிக்கு செலவழிக் கும் அளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் நிதி வசதி இருப்பதில்லை.

இந்த நிலையில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சான்று அளிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, ஓய்வூதியர்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருக்கும் அரசு அலுவலர்கள், அரசு பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்கள் உயிரோடு இருப்பதைத் தக்க விதத்தில் சான்று அளிக்கலாம் என்று விதிகளைத் தளர்த்தினாலே போதும். எல்லோராலும் இந்த உயிர்வாழ்வுச் சான்றிதழை எளிதாகத் தந்துவிட முடியும். தன்னுடைய ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அரசு நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியரான தபால்காரரைக்கூட சான்று அளிக்கச் சொல்லலாம். இதனால் ஓய்வூதியர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு அலுவலகங்களுக்கு வந்தே தீர வேண்டும் என்ற கட்டாயச் சுமை குறையும். நேரில் வருவது கட்டாயம் இல்லை என்று அரசு கூறினாலும் பல முதியவர்கள் மாற்று வழிமுறைகளைக் கேட்பதில்லை. ஓய்வூதியம் நின்றுவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

ஆவடி சார்நிலைக் கருவூலம்

சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையில் உள்ள ஆவடி சார்நிலைக் கருவூலம் மாடியில் செயல்படுகிறது. ஆயுதங்களுடன் வந்து கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டதால் தரைதளத்தில் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்று மாநில அரசு கருதியிருக்கலாம். உச்சபட்ச பாதுகாப்புக்காக சார் நிலைக் கருவூலத்தைச் சுற்றி அகழி கட்டி, சூலங்களை நட்டு, சில முதலைகளைக்கூட விட்டுவைக்கலாம் இன்னும் பலத்த பாதுகாப்பாக இருக்கும்.

நம் கவலை அதைப்பற்றியது அல்ல. நடமாடவே முடியாத முதியவர்கள், கை கால் எலும்பு முறிந்தவர்கள், எப்போது வேண்டுமானாலும் முறியக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தக்காரர்கள். நீரிழிவு நோயாளிகள் என்று பலதரப்பட்டவர்கள்தான் ஓய்வூதியர்கள். சுமார் 20 படிகளைக் கடந்து மாடிக்கு வந்ததால், ‘கணினியின் வலைப்பின்னல் வேலை செய்யவில்லை. 3 மாதம் அவகாசம் இருக்கிறது. போய்விட்டு திங்கள்கிழமை வாருங்கள்” என்று வெள்ளிக்கிழமை சென்றவர்களிடம் தெரிவித்தார்கள்.

முதியவர்கள் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் பலவற்றை ‘தாயுள்ளத்தோடு’ இப்படி எத்தனை இடங்களில் முதல் மாடி, இரண்டாவது மாடி என்று வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. சொந்தக் கட்டிடமாக இருந்தாலும் வாடகைக்காக இருந் தாலும் தரைதளமாக இருந்தால் நல்லது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் சக்கர நாற்காலியில் வந்துபோகும் வகையில் அரசு அலுவலகங்கள், பொது கட்டிடங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களும் பலமுறை அறிவுறுத்தி விட்டன. அதை எப்போது முழுமையாக அமல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. இதில் அரசுதானே முன்மாதிரியாக இருக்க வேண்டும்?

இத்தனை படிகள் கடந்து வந்துவிட்ட முதியவர்களை அப்படியே திருப்பி அனுப்பாமல் அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களையும் படிவத்தையும் சரிபார்த்து அனுப்பிவைத்துவிட்டு, கணினியின் கோளாறு நீங்கிய பிறகு பதிவு செய்துகொள்ளக்கூடிய நடைமுறைகளையும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இன்றைய அரசு ஊழியர்கள் நாளைய ஓய்வூதியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

முதியவர்களிடம் மரியாதையையும் குழந்தைகளிடம் பாசத்தையும் பொழியும் சமுதாயம்தான் உண்மையான நாகரிகச் சமுதாயம். தமிழகம் இனி இதிலும் முன்னோடியாக மாற வேண்டும். கருவூலங்களும் சார்நிலைக் கருவூலங்களும் ஓய்வூதியர்களின் ‘அம்மா’ கருவூலங்களாக மாறும் நாள் எந்நாளோ?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024