Tuesday, April 28, 2015

சமையல் கியாஸ் வழிகாட்டட்டும்!

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கப்பலில் பெண் வருகிறது என்று ஒருவன் சொன்னானாம். உடனே, அதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன், ‘‘அப்படியா!, அப்படியானால் எனக்கு ஒன்று, என் சித்தப்பாவுக்கு ஒன்று’’ என்றானாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 பவுன் கொடுக்க வேண்டும் என்று முதலாமவன் சொன்னபோது, ‘‘நான் சின்ன பையன் எனக்கு தேவையில்லை. எங்கள் சித்தப்பா வயதானவர், அவருக்கும் தேவையில்லை’’ என்றானாம். அதுபோலத்தான், பலர் மானிய விலையில் கிடைக்கிறது என்றால் தங்கள் தேவைக்கு போக அதிகமாக வாங்கி, வெளிமார்க்கெட்டில் கூடுதல் பணத்திற்கு விற்கிறார்கள். சமையல் கியாஸ், உரம், பெட்ரோல்–டீசல் போன்ற எரிபொருள் ஆகியவற்றிற்கு மானியம் கொடுக்கவே கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இவ்வளவு மானியத்தை தேவையில்லாதவர்களுக்கும் போய் சேருவதை தடுத்தால், எவ்வளவோ சாலைகள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியுமே என்ற எண்ணம் நல்லோர் மனதில் எதிரொலிக்கிறது.

நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன், இவ்வாறு நெல்லுக்கு இரைக்கும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதை நிறுத்தும் வகையில், தேவையற்ற மானியத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஏறத்தாழ 15 கோடி சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வீட்டு இணைப்புகள் எல்லாம் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட வேண்டும். ஒரு சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியத்தொகையான 200 ரூபாய் நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் வகையில் ‘பகல்’ என்று அழைக்கப்படும் நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1–ந்தேதி நாட்டிலுள்ள 676 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்த எண்ணிக்கையில் 3 கோடி இணைப்புகளுக்கு மேல் குறைந்துவிட்டது. அதாவது, இவைகள் எல்லாம் போலியாக பெற்ற இணைப்புகள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. இதன் காரணமாக வணிக ரீதியான கூடுதல் விலைக்கு விற்கப்படும் சிலிண்டரின் விற்பனை உயர்ந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கிடையாது. இந்த திட்டத்தின் மூலமாக போலி இணைப்புகளை ஒழிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம் வழங்குவதில் அடைந்த வெற்றியை தொடர்ந்து ரேஷன் பொருட்களுக்கும், மண்எண்ணைகும் அளிக்கப்படும் மானியத்தையும், நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இதை உடனடியாக அரசு நிறைவேற்றினால், இதிலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிச்சமாகும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். எனவே, அரசு இதில் தாமதமே இல்லாமல் அனைத்து மானியங்களையும் அதுபோல 100 நாள் வேலைத்திட்டம் போன்ற நலத்திட்டங்களின் பலன்களையும் பயனாளிகளுக்கு நேரடி வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலும், பிரதமரின் வேண்டுகோளின்படி, வசதி படைத்தவர்கள் மானியம் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்வந்தால், அதிலும் ஏறத்தாழ ஒரு கோடி இணைப்புகள் உடனடியாக மானிய வலையில் இருந்து வெளியே வர முடியும். இதற்கு அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும், செல்வந்தர்களும் முன்னோடியாக வழிகாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024