Wednesday, April 22, 2015

மனசு போல வாழ்க்கை- 5: எதை நினைத்தோமோ அதுவே நடந்தது...by டாக்டர். ஆர். கார்த்திகேயன்

எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.
“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன் தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன் கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”
நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப் படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது.
எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.
நடக்காது என்பார் நடந்துவிடும்
“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.
‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில் அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள் சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.
இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன் மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின் கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.
ஊத்திக்கொள்பவர்கள்
தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில் இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.
அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.
பட்டியலிடுங்கள்
நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம் ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால் உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள் எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள் எண்ணங்களைச் சொல்லுவார்கள்.
உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.
வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா? வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?
முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.
ஒரு நாளில் 35 ஆயிரம்
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’ என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம் எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.
ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?
சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும் வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும் யோசிக்கிறோமாம்!
ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...