Thursday, April 23, 2015

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இருவர்

இந்திய மக்களுக்கு, அதிலும் குறிப்பாக, தமிழக மக்களுக்கு தங்களில் ஒருவருக்கு கிடைக்கும் பெருமையால், நாட்டுக்கு புகழ் சேர்ந்தால், அதை தங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பெருமையாக கருதி மகிழ்வார்கள். அந்த வகையில், கடந்தவாரம் அமெரிக்காவில் இந்தியர்கள் இருவருக்கு, பெரிய பெருமை கிடைத்துள்ளது. இதில் முதல்வர். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் மாநில முதல்–மந்திரியாக அசைக்கமுடியாத தலைவராக திகழ்ந்த மோடி பிரதமராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைவதற்குள், உலக நாடுகள் அனைத்தையும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துவிட்டார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் என்று விமர்சனங்கள் வந்தாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செய்யும்போது, நாட்டுக்கு நல்ல பலன்களைக் கொண்டு வந்துவிடுகிறார். கடந்தவாரம் அவர் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். உலக பிரசித்திபெற்ற டைம் இதழ் உலகில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற 100 மாமனிதர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதில் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. மோடியைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ள முன்னுரை, அவருக்கு மோடியிடம் உள்ள நட்பையும், மோடிக்கு உலக தலைவர்களிடம் உள்ள செல்வாக்கையும் பறைசாற்றியுள்ளது.

இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பிட்டு அவர் எழுதிய முன்னுரையில், இன்று மோடி உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருந்தாலும், ஏழ்மையில் இருந்து பிரதமரான அவரது வாழ்க்கை வரலாறு இந்தியாவின் வளர்ச்சிக்கான உத்வேகத்தையும், ஆற்றலையும் பிரதிபலிக்கிறது என்று தொடங்கி, தன் வழியை நிறைய இந்தியர்கள் பின்பற்ற உதவவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவர் ஏழ்மையை போக்கவும், கல்வியை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேறவும், பருவமாற்றத்தை எதிர்கொண்டு இந்தியாவின் உண்மையான பொருளாதார ஆற்றலை கட்டவிழ்த்துவிடும் வகையில், ஒரு தொலைநோக்கு பார்வையை வகுத்துள்ளார். 100 கோடிக்கும் மேலான இந்தியர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெற்று, உலகில் மற்ற நாடுகளை ஊக்கப்படுத்தும் எடுத்துக்காட்டாக திகழ முயன்றுவருகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர், இந்திய பிரதமருக்கு சூட்டிய இந்த புகழ் மாலை, ஒவ்வொரு இந்தியனின் கழுத்திலும் விழுந்த புகழ் மாலையாகும்.

அதே நாளில் சென்னையைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் ஒரு பெண் சட்டநிபுணர் ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நகரின் கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை அளிக்கிறது. 43 வயதான ராஜ ராஜேஸ்வரி கடந்த 16 ஆண்டுகளாக அரசாங்க வக்கீலாக குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ராஜ ராஜேஸ்வரி என்றால் தெரியாதவர்களே இல்லை. ஏனெனில், எந்த இந்திய விழா எங்கு நடந்தாலும், அங்குள்ள எந்த இந்து கோவிலில் ஏதாவது விழாக்கள் நடந்தாலும் அவரது தாயார் பத்மா ராமநாதனின் பெயரில் இயங்கும் பத்மாலயா நடனப்பள்ளி மாணவிகளைச் சேர்த்துக்கொண்டு அவர் ஆடும் பரதநாட்டியம், குச்சுப்புடி நடனத்தைப் பார்க்கவென்றே பெரிய கூட்டம் வரும். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம் என்று ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசும் திறனே பலரையும் வியக்கவைக்கும். ஒரேவாரத்தில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் புகழ்சேர்த்த இந்த இருவரையும் நினைத்து இந்திய மக்கள் மட்டுமல்ல, பாரத தாயே பெருமையால் பூரிக்கிறாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024