Monday, April 27, 2015

பாமாயிலும் பாதிப்புகளும்!,,,,,,,By இடைமருதூர் கி. மஞ்சுளா



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவில் பாமாயில் பயன்பாடு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இடையில் சிறிது காலம் இதன் பயன்பாடு குறைந்திருந்தது.

தற்போது, பிற எண்ணெய்களின் விலை ஏற்றத்தைப் பார்த்து மிரண்டுபோன நடுத்தர வர்க்கத்தினர், குறைந்த விலையில் கிடைக்கும் பாமாயிலை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணெய் எப்படித் தயாரிக்கப்படுகிறது? எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? பாமாயில் உடலுக்கு ஓரளவு நன்மை செய்தாலும், இதன் தயாரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன, பாதிக்கப்படும் உயிரினங்கள் எவை என்பன பற்றி எல்லாம் நம்மில் பெரும்பாலோர் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் கூடக் காட்டுவதில்லை. நியாய விலைக் கடைகளில் (ரேஷன்) குறைந்த விலையில் கிடைத்தால் போதும் என்று வாங்கிச் செல்கின்றனர்.

பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தைச் சார்ந்தது. இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், மலேசியா முதலிய நாடுகளில் தென்னை மரத்தில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.

பாமாயில் ஏற்றுமதியில் மலேசியாவும், இறக்குமதியில் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.

இந்தோனேசியாவில் 20.6.2013-இல் ஒரு வாரத்துக்கும் மேலாக சுமத்ரா தீவு பகுதியில் உள்ள காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீப் புகையால், சிங்கப்பூர், மலேசியா கடும் பாதிப்பைச் சந்தித்தது உலகமறிந்த நிகழ்வு. இந்தோனேசிய காடுகளில் இதுபோன்று அடிக்கடி தீப் பிடிக்கும். இந்தக் காட்டுத் தீ எதனால் ஏற்படுகிறது?

பாமாயில் மரங்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் தங்கள் பகுதியில் முற்றிய மரங்களை அழித்து, பாமாயில் மர விவசாயத்துக்காகத் தயார் செய்கிறார்கள். காடுகளை அழித்து அவற்றைக் கொளுத்திவிட்டு, அங்கே பாம் எண்ணெய் மரங்களை நடுவது ஆண்டுதோறும் ஜூனில் துவங்கி நடைபெறுகிறது.

இது அதிகம் லாபம் தருவதால் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் காட்டுத் தீயை ஏற்படுத்தி இந்தோனேசிய காடுகளை அழித்து, அங்கு பாமாயில் மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்கள்.

இந்தோனேசியா ஏழ்மையான நாடு. எனவே, அங்குள்ள விவசாயிகளும் வருமானம் வந்தால் போதும் என்ற அளவில்தான் செயல்படுகிறார்கள்.

சிங்கப்பூரும், இந்தோனேசியாவும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, இந்தோனேசியாவில் ஏற்படும் காட்டுத் தீயால் வெளிவரும் புகை மண்டலம், அருகிலுள்ள சிங்கப்பூரின் சுற்றுச்சூழலைப் பாதித்து காற்று மாசுவின் அளவைக் கணிசமாக அதிகரித்தும் விட்டிருக்கிறது.

"அவ்வப்போது ஏற்படும் காட்டுத் தீயால் வெளிவரும் புகையைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள்' என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தோனேசியாவைக் கேட்க, அவர்களோ "எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால், அதற்கு எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களும் ஒத்துழைக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மலேசியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதி அளவு பாமாயில் மர விவசாயம்தான் நடைபெறுகிறது. சமையல் எண்ணெய் நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணெய் மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசிய காடுகளிலும் கை வைத்துள்ளனர். இவற்றில் முதலீடு செய்துள்ளவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்தவர்கள்தான்.

பாமாயில் ஏற்றுமதியை நிறுத்திவிட்டால், தங்கள் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் என்பதால் மலேசியாவும், இந்தோனேசியாவும் காடுகளை அழித்து பாமாயில் உற்பத்தி செய்வதைத் தடுக்க முன்வராது.

பாமாயில் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்தினால் ஒருவேளை, காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்படுவதைத் தடுக்கலாம்.

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். இந்தோனேசிய காடுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய காடுகளான இந்தோனேசிய காடுகள் 12 கோடி ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. சுமார் 90 சதவீதம் ஒரங்குட்டான் (Orangutan) குரங்குகள் இந்தக் காடுகளில் வசிக்கின்றன. 10 சதவீதம் மலேசியாவின் சாபா, சரவாக் காடுகளில் உள்ளன.

பாமாயில் தேவைக்காக ஒரங்குட்டானின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தோனேசிய காடுகள் முழுவதும் பரவியிருந்த ஒரங்குட்டான்கள், தற்போது 60 ஆயிரமே இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஒரங்குட்டான்கள் அழிந்து வருகின்றன.

இதைத் தடுக்க வழி இருக்கிறது. ஒரங்குட்டான் வசிக்கும் காடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாமாயிலை விலக்க வேண்டும். "இந்தோனேசிய காடுகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை' என்று சான்று பெற்ற பாமாயில் உற்பத்தி, பிரிட்டனில் வெற்றி பெற்றிருக்கிறது.

அது சரியாக நடைபெறும்போது, இந்தியாவிலும் அதை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் பஹர் தத். தன் செய்தி சேகரிப்பு அனுபவங்களை "கிரீன் வார்ஸ்' (Green Wars) என்ற புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அரசுகள் இணைந்து பாமாயிலுக்காக முதலீடு செய்யப்படுவதைத் தடுத்தால் எரியும் காடுகளைத் தடுக்கலாம். அங்கு வாழும் அரிய வகை ஒரங்குட்டான்களையும் காக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024