Friday, April 24, 2015

அரசு மருத்துவமனைகளில் 1,500 புது டாக்டர்கள் ஒரு வாரத்தில் மேலும் 1,000 பேர் சேர வாய்ப்பு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோரில், 1,500 டாக்டர்கள் புதிதாக அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 1,000 பேர் ஒரு வாரத்தில் இணைகின்றனர்.குற்றச்சாட்டு :தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லை; தேவைக்கேற்ப நியமிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில், 2,167 உதவி டாக்டர்கள், 700 எம்.எஸ்., - எம்.டி., படித்த சிறப்பு பிரிவு டாக்டர்களும், அரசுப்பணியில் சேர்க்கப்படுவர் என, தமிழக அரசு அறிவித்தது.


உதவி டாக்டர்கள் பணியிடங்களுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, 2,167 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'வாக் இன் இன்டர்வியூ' அடிப்படையில், 447 சிறப்பு பிரிவு டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நேர்காணல் :இவர்களுக்கான, நேர்காணல், சென்ற மாதம் நடந்தது. இவர்களில், 98 சதவீதம் பேர், இடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 'ஒரு மாதத்திற்குள், பணியில் சேர வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியது.


இந்த நிலையில், மருத்துவ கல்வி, பொது சுகாதாரத்துறை, மருத்துவ சேவை இயக்கங்களின் கீழ் செயல்படும், மருத்துவமனைகளில், 1,500க்கும் மேலான டாக்டர்கள்,

தங்களுக்கு ஒதுக்கிய பிரிவுகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 1,000 பேர் வரை, இம்மாதம், 30ம் தேதிக்குள் இணைவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தொகுப்பூதிய அடிப்படையில், புதிதாக, 7,000 நர்ஸ்களை சேர்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024